சுய மருத்துவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது ChatGPT-ஐ நம்பலாமா?

சுய மருத்துவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது ChatGPT-ஐ நம்பலாமா?

மீபத்தில், பிரபல மருத்துவ இதழான ‘Annals of Internal Medicine’-ல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, சுய மருத்துவம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும், AI கருவிகளைப் பயன்படுத்துவது ஏன் தவறு என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

நடந்தது என்ன?

அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர், தன் உறவினர்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகிறார். “என்னை என் பக்கத்து வீட்டுக்காரர் விஷம் வைத்து கொல்ல முயற்சிக்கிறார்” என்று அவர் கூறுகிறார். அடுத்த 24 மணி நேரத்திற்கு, அவர் தன்னிலை மறந்து கத்துவது, உளறுவது, தீவிரமான சந்தேகம் (Paranoia), மற்றவர்களைத் தாக்கும் முயற்சி, மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடும் எண்ணம் என வினோதமாக நடந்துகொள்கிறார். அதிக தாகம் இருந்தபோதிலும், தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு குடிக்க மறுக்கிறார். இல்லாத குரல்களைக் கேட்பது (Auditory Hallucinations) மற்றும் இல்லாத உருவங்களைக் காண்பது (Visual Hallucinations) போன்ற மனநிலை மாற்றங்களும் அவருக்கு ஏற்படுகிறது. இந்த நிலை ‘சைக்கோசிஸ்’ (Psychosis) என அழைக்கப்படுகிறது.

மனநல மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் ஏதேனும் மருந்துகளோ, சப்ளிமெண்ட்டுகளோ எடுத்துக்கொள்கிறாரா என்று கேட்டபோது, அவர் “இல்லை” என்று பதிலளித்தார்.

அவரது இதயத் துடிப்பு, சுவாசம், நாடித் துடிப்பு போன்ற அனைத்து உடல் இயக்கங்களும் சாதாரணமாக இருந்தன. எனவே, இந்த மனநல பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குளோரைடு அளவுகள் அதிகமாகவும், பாஸ்பேட் அளவுகள் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. சோடியம், பொட்டாசியம் போன்ற நேர் மின் அயனிகளை (Cations) விட குளோரைடு, பைகார்பனேட் போன்ற எதிர் மின் அயனிகள் (Anions) அதிகமாக இருந்தன. இது ஏதோ ஒரு நச்சுத்தன்மையால் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்து, நச்சு சிகிச்சை நிபுணர்களை வரவழைக்கின்றனர்.

திடுக்கிடும் உண்மை

விசாரணையில், அந்த நோயாளி கடந்த சில மாதங்களாக உணவு முறைகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். குடிநீரை வீட்டிலேயே காய்ச்சி வடிக்கும் (Distillation) முறையைப் பின்பற்றியுள்ளார். பால் பொருட்களை முற்றிலும் தவிர்த்த தீவிர மரக்கறி உணவையும் சில மாதங்கள் கடைப்பிடித்துள்ளார். இதனால் அவரது இரத்தத்தில் விட்டமின் B12, விட்டமின் C, ஃபோலிக் அமிலம் ஆகியவை குறைந்திருந்தன.

மேலும், அவருக்குச் சமீபத்தில் முகப்பருக்கள், செர்ரி ஆஞ்சியோமாஸ் (குறு இரத்த நாள கட்டிகள்), அதீத சோர்வு, தூக்கமின்மை, நடையில் தள்ளாட்டம், அதிக தாகம் போன்ற அறிகுறிகளும் இருந்தன.

ChatGPT-ன் பங்கு

மூன்று மாதங்களுக்கு முன், இணையத்தில் சமையல் உப்பின் தீமைகள் குறித்தும், சோடியம் அளவைக் குறைப்பதன் நன்மைகள் குறித்தும் பல கட்டுரைகளைப் படித்திருக்கிறார். இதன் காரணமாக, சமையல் உப்பான சோடியம் குளோரைடுக்கு (Sodium Chloride) மாற்றாக வேறு உப்பைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

இந்த யோசனையை அவர் ChatGPT 3.5 அல்லது 4-ல் “சமையல் உப்பில் உள்ள குளோரைடுக்கு பதிலாக வேறு எந்த உப்பைப் பயன்படுத்தலாம்?” என்று கேட்டுள்ளார். அதற்கு ChatGPT, “குளோரைடுக்கு பதிலாக ப்ரோமைடு (Bromide) பயன்படுத்தலாம், ஆனால் எங்கு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து இது அமையும்” என்று பதிலளித்துள்ளது.

மருத்துவர்கள் இதை ChatGPT 3.5-ல் சோதித்தபோது, அதே போன்ற பதிலில் ‘ப்ரோமைடு’ இடம்பெற்றிருந்ததைக் கண்டறிந்தனர். தற்போதைய ChatGPT 5-ல் இதே கேள்வியைக் கேட்டபோது, சோடியம் சிட்ரேட், அசிடேட் போன்றவற்றுடன் ‘ப்ரோமைடு அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது’ என்று பதிலளித்துள்ளது. ஆனால், அதனுடன் ‘ப்ரோமைடை சேர்ப்பதற்கு முன் அதன் நச்சுத்தன்மை குறித்து நன்கு யோசித்து முடிவெடுங்கள்’ என்ற எச்சரிக்கையையும் சேர்த்துள்ளது.

நோய் கண்டறிதல் மற்றும் பாடம்

இந்த நோயாளிக்கு வந்தது ‘ப்ரோமிசம்’ (Bromism) எனும் ப்ரோமைடு நச்சுத்தன்மை நோய் என்பது உறுதியானது. அவரது இரத்தத்தில் ப்ரோமைடு அளவு 1700 mg/L ஆக இருந்தது. சாதாரண அளவு வெறும் 0.9 முதல் 7.3 mg/L மட்டுமே. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

  • சுய மருத்துவம் ஆபத்தானது. ChatGPT போன்ற AI கருவிகள் அளிக்கும் மருத்துவத் தகவல்கள் எப்போதும் சரியாக இருக்கும் என்று நம்ப முடியாது. அவை தவறாகக்கூட இருக்கலாம் என்று அந்த நிறுவனங்களே ஒப்புக்கொள்கின்றன.
  • ஒரு மருத்துவர், நோயாளியின் அறிகுறிகள், நோய் வரலாறு, வாழ்க்கை முறை, இரத்தப் பரிசோதனை முடிவுகள், மற்றும் தனது அனுபவ அறிவை வைத்து ஒரு முடிவுக்கு வருகிறார். இதுவே ‘Critical Thinking’ எனப்படும்.
  • AI அப்படிச் செயல்படுவதில்லை. அது நாம் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கேள்விகள் தவறாக இருந்தால், பதில்களும் தவறாகவே இருக்கும். மேலும், அது மருத்துவர் போல் எதிர் கேள்விகள் கேட்டு, முழுமையான தகவல்களைப் பெறும் திறன் கொண்டதல்ல.
  • எனவே, மருத்துவ ஆலோசனைக்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது. AI மனிதனைப் போல இரக்க உணர்வோ, நன்மை தீமைகளை பகுத்தறியும் திறனோ கொண்டதல்ல.

அறிவியலின் நன்மைகளை சரியான வழியில் பயன்படுத்துவோம்.

டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா.

Related Posts