பயாஸ்கோப் – விமர்சனம்!
சங்ககிரி ராச்குமார் டைரக்ஷனில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘வெங்காயம்’ திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களால் பெரிதும் பாராட்டு பெற்ற நிலையிலும், வியாபார ரீதியாக எடுபடவில்லை. இத்தனைக்கும், பக்கா கிராமம் ஒன்றிலிருந்து கிளம்பி சென்னை வந்து இங்கே தான் கற்ற சினிமாக்கலையை மீண்டும் கிராமத்துக்கு எடுத்துப் போய் அங்கிருக்கும் அல்லு, சில்லு, பெரிசுகளை வைத்தே வெங்காயம் படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி மாற்றிக் காட்டியது என்று சொல்லி கவர்ந்திருந்தார் . அதை அடுத்து சங்ககிரி ராச்குமார் பற்றி பாராட்டி பல கட்டுரைகளை பல பத்திரிகைகள் வெளியிட்டது. அதில், ”இவர்கள் படம் எடுத்த கதையை ஒரு படமாக எடுக்கலாம்”, என்று பிரபல வார இதழ் ஒன்று குறிப்பிட்டிருந்தது. அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு ‘தான் படம் எடுத்த கதையை அதிக வலியுடனும், கொஞ்சம் கலகலப்புடனும் ‘பயாஸ்கோப்’ என்ற டைட்டிலில் வழங்கி கவர முயன்று இருக்கிறார். .

அதாவது கிராமம் ஒன்றில் தனது சித்தப்பா, தாத்தா, பாட்டி உட்பட உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் ஹீரோ ராச்குமார். குழந்தை பருவம் முதலே தனதுசித்தப்பா மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பவர்.ஒரு சூழலில் சினிமா எடுக்க வேண்டும் என்ற தனது கனவை சித்தப்பாவிடம் கூறும்போது, ராச்குமாரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது சித்தப்பா.சென்னைக்கு வந்ததும் சினிமாவை நன்கு கற்றுக் கொள்கிறார் ராச்குமார். தொடர்ந்து படம் இயக்க, தயாரிப்பாளரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் ஊரில் இருந்து ராச்குமாருக்கு அழைப்பு வர, அவசரமாக ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார் ராஜ்குமார்.
போன இடத்தில் ஜோசியர் ஒருவர் இனி உனக்கு கெட்ட காலம் தான் என்று கூறியதையடுத்து மனமுடைந்த சித்தப்பா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து உடைந்து போகிறார் ராச்குமார்.இப்படியான மூட நம்பிக்கைகளை நம்பி மக்கள் ஏமாந்து இருக்கிறார்களே இன்னமும் என்று கவலைப்பட்ட ராச்குமார், இதுகுறித்து படம் எடுக்க முயல்கிறார். அதற்காக தயாரிப்பாளரை தேடி அலைய, எவரும் கிடைக்காததால், படத்தை தானே சொந்த செலவில் எடுக்க முயற்சிக்கிறார் ராச்குமார்.
அதன் பொருட்டு சிறிய ஒரு செட்-அப் வைத்துக் கொண்டு, எந்த வித ஆடம்பர உபகரணம் இல்லாமல், தனது வீட்டின் நிலத்தை அடமானம் வைத்து தனது கிராமத்தில் தனது தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை என இவர்களை வைத்துக் கொண்டு படத்தை இயக்க ஆரம்பிக்கிறார்.இறுதியில் ராச்குமார் அப்படத்தை எடுத்து முடித்தாரா.? மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிராக இவரது படம் சமூகத்தில் எதாவது மாற்றத்தை நிகழ்த்தியதா.?? போலி சாமியார்களின் முகத்திரை கிழிக்கப்பட்டதா.??? சினிமா எடுப்பது அவ்வளவு எளிதா.???? என்பதற்கான கேள்விக்கு விடையெல்லாம் சொல்வதுதான் பயாஸ்கோப் படக் கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் ராச்குமார், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பா வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் ரஞ்சித், ஹீரோயினாக நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கதையின் மாந்தர்களாக பார்வையாளர்கள் மனதில் பசைப்போட்டு ஒட்டிக்கொள்கிறார்கள்
டெக்னிக் ஒர்க்கில் பெரிய அளவு பாராட்ட முடியாவிட்டாலும் இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறது பட்ஜெட்டும், ராச்குமாரின் பங்களிப்பும். இடைவேளைக்கு முன்னதாக இவர்கள் படம் எடுக்கிறோம் என்கிற பெயரில் அடிக்கும் கொட்டத்தை இன்னொரு கேமரா நம் பார்வையில் இரந்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதை சற்று ஏறக்குறைய மறந்தே போகிறோம். அதுவே பெரிய விஷயம். அப்படி கேமரா ஒர்க்கில் தித்து காட்டியிருக்கிறார்.
அதேபோல் இந்தப் படத்துக்கு என்ன இசை தேவையோ அதை மட்டும் தந்திருக்கிறார் தாஜ்நூர். கொஞ்ச்சம் புத்திசாலித்தனமாக படத்தில் பாரதிராஜா, சேரன், சத்யராஜ், மிஷ்கின் உள்ளிட்ட முதல் நிலை இயக்குனர்களை , டைரக்டர் கேரக்டர்களிலேயே காட்டி இருப்பது பாராட்டத்தக்க விஷயம்.
கேமரா உள்ளிட்ட சினிமா படப்பிடிப்பு கருவிகளின் பெயர்கள் கூட தெரியாத மனிதர்களை வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததற்காகவே இயக்குநர் ராச்குமாரை பாராட்டியாக வேண்டும், அதிலும் அந்த முடிவை செயல்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அதற்கு தடைகள் பல வந்தாலும், தன் கதை மீதும், தன் மீதும் கொண்ட நம்பிக்கையால், இறுதிவரை முயற்சித்து இறுதியில் நிலத்தை அடகு வைத்து படத்தை முடிக்கும் காட்சிகள் அனைத்தும் ஓகே-தான்.
ஆனால் சினிமா என்பது பக்கா வியாபாரம் என்று ஆகி விட்ட சூழலில் அடுத்த படத்தையாவது இப்படி மிகவும் யதார்த்தமாக இல்லாமல் கொஞ்சம் சினிமா போகும் கரண்ட் ட்ரெண்டிலும் சில படங்க்களை எடுத்து சங்ககிரி ராச்குமார் வெற்றி பெற முயல வேண்டு,
மார்க் 2.25/5


