உதயம் தியேட்டரை(யும்) க்ளோஸ் பண்ணியாச்சு!
சென்னை நகரில் அடையாளமாக திகழ்ந்த இடங்களில் உதயம் திரையரங்கம் பிரபலமானது. அசோக் நகரில் இருக்கும் இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. அந்த வகையில் சென்னையில் அசோக்நகர் – கே.கே.நகருக்கு முகவிலாசம் எழுதிய பிரபல ‘உதயம்’ தியேட்டர்கள் நேற்று (1ந் தேதி) முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. அதற்கான அறிவிப்பை உதயம் குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவரான கே.சண்முகசுந்தரம் வெளியிட்டார். உதயம் தியேட்டர் வளாகம் இடிக்கப்பட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை ‘காசா கிராண்ட்’ பிரபல கட்டுமான நிறுவனம் கட்டவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
41 ஆண்டுகளாக ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு இடமாக இருந்து வந்த உதயம் உள்ளிட்ட 4 தியேட்டர்களும் மூடப்படுவது ரசிகர்களுக்கு குறிப்பாக தென்சென்னை ரசிகர்களுக்கு பெருத்த வேதனையைத் தந்துள்ளது. ஆம்.. ஒரு வகையில் உதயம் ஏழைகளின் திரையரங்கம். டிக்கெட் விலையிலிருந்து தின்பண்டங்கள் வரை அனைத்தும் ஒரு கட்டுக்குள் இருந்தது. அதோடு அதன் பிரமாண்டம் ஒருபோதும் ஏழைகளை அலைக்கழிப்பு செய்ததில்லை. குறிப்பாக 45 ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் சராசரியோடு ஒப்பிடுகையில் இதை ஒரு அகால மரணமாகவும் பார்க்கலாம். இன்னும் நுணுகிப் பார்க்க வேண்டுமானால் பிரபலமான ஒருவரின் அகால மரணமாகப் பார்க்கலாம். சமீப காலங்களாகப் பிரபலமானவர்களின் அகால மரணங்கள் சமூக வலைத்தளங்களால் எந்தளவுக்குக் கொண்டாடப்படுகிறது (கொண்டாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்) என்பது நாம் அறிந்ததே… அதுபோல ஒரு மரணமாகவே சமூக ஊடகங்கள் உதயம் திரையரங்கத்தையும் எடுத்துக்கொள்கிறது.’

எந்த ஒரு பிரபலங்களிம் படம் ரிலீஸ் ஆனாலும், உதயம் தியேட்டர் வளாகம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். கே.கே.நகரையும், அசோக் நகரையும், ஜாபர்கான்பேட்டையையும், மேற்கு மாம்பலத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது உதயம் தியேட்டர்.அப்பேர்பட்ட தியேட்டர் மூடப்படுவது குறித்து ‘உதயம்’ குழுமத்தின் இயக்குனர் கே.சண்முகசுந்தரத்திடம் கேட்டப் போது, ‘’என் பெரியப்பா நாராயணபிள்ளை தனது சகோதரர்கள் சுப்பிரமணியம், கருப்பசாமி, பரமசிவம், சுந்தரம், கல்யாணசுந்தரம் (எனது தந்தை) ஆகியோருடன் நெல்லையில் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தார். பல்வேறு தொழில்கள் செய்து பணம் சேர்த்து, சென்னை அசோக்நகரில் 1979-ம் ஆண்டு 26 கிரவுண்ட் நிலம் வாங்கி, 1983-ம் ஆண்டில் ஒரு தியேட்டர் கட்டினார். எங்கள் பூர்வீகம் நெல்லை ராதாபுரத்தில் உள்ள உதய்ப்பூர் என்பதால், தியேட்டருக்கு உதயம் என்று பெயரும் சூட்டினார்.
உதயம் தியேட்டரில் முதன்முதலில் ரிலீசான படம் ரஜினிகாந்தின் ‘சிவப்பு சூரியன்’ ஆகும். அதன்பிறகு கமல்ஹாசனின் ‘சட்டம்’ படம் திரையிடப்பட்டது. 1985-ம் ஆண்டில் சூரியன், சந்திரன் என்ற தியேட்டர்களும், 2003-ல் மினி உதயம் தியேட்டரும் உருவானது. உதயம் திருமண மண்டபமும் கட்டப்பட்டது. ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த தியேட்டரில் உதயமும் ஒன்று. ஒரு படத்துக்கு பூஜை போடும்போதே, ‘உதயமில் ரிலீஸ் ஆகுதா…’ என்று கேட்பார். அதேபோல இயக்குனர் பாரதிராஜாவும் பிரியப்படுவார். விஜய் அடிக்கடி வந்து படம் பார்ப்பார். ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை இந்த 41 ஆண்டு பயணத்தில் ஆயிரக்கணக்கான படங்கள் திரையிடப்பட்டு உள்ளது.

குடும்ப சூழல் காரணமாக உதயம் தியேட்டரை மூடுவது என்ற கடினமான முடிவை எடுத்தோம். முன்னணி கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் உடன் ‘கூட்டிணைவு ஒப்பந்தம்’ என்ற அடிப்படையில் கைகோர்த்தோம். கடந்த 30-ந்தேதியுடன் தியேட்டரை மூடிவிட்டோம். உரிம ஆவணங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.
உதயம் தியேட்டரில் ஓடிய கடைசி படம், ‘புஷ்பா–-2′. தியேட்டரில் வேலைபார்த்த அனைத்து பணியாளர்களையும் மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளோம். விரைவில் இங்கு அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி’’-இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் உதயம் தியேட்டர் என்றில்லை, ஏகப்பட்ட தியேட்டர்கள் தலைநகரின் அடையாளமாக இருந்து கடைசியில் அவை இருந்த தடம் கூட தெரியாமல் போய்விட்டன. அந்த வகையில் நாகேஷ் தியேட்டர், அபிராமி தியேட்டர், காமதேனு தியேட்டர், அகஸ்தியா தியேட்டர், ஆல்பர்ட் தியேட்டர் உள்ளிட்டவை 50 தியேட்டர்கள் இடிபட்டு போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


