கொலை விமர்சனம்!
பலத் தரப்பட்ட படங்கள் வாரா வாரம் ரிலீஸ் ஆனாலும் த்ரில்லர் டைப் படங்களை பார்ப்பதற்க்காகவே வெறித்தனமாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என நம்மை நகராமல் உட்கார வைத்திருப்பது த்ரில்லர் படங்கள்தான். அப்படியான த்ரில்லர் படங்களை உருவாக்க ஒரு நல்ல இயக்குநர் மட்டுமின்றி கேமரா மூலமாக பதட்டத்தை வழங்கும் ஒளிப்பதிவாளர், திக்.. திக்..கென்ற பாணியில் திகைக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் வல்லுநர்கள் டீம், . எடுத்த காட்சிகளை கோர்வையாக கோர்க்கும் கூர்புத்தி கொண்ட எடிட்டர் குழு, தனி ஆவர்தனத்தில் மிரட்டல் காட்டும் பின்னணி இசை வழங்கும் மியூசிக் டைரக்டரின் பங்களிப்பு ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டணியால் மட்டுமே பக்காவான மிரட்டும் திரில்லர் சினிமாக்களைக் கொடுக்க முடியும்.. அப்படியான டீம் ஒன்று உருவாக்கி வழங்கி இருக்கும் சினிமாவே – ‘கொலை’!

அதாவது பேமஸான ஸிங்கரும், மாடலுமான லைலா (மீனாக்ஷி சவுத்ரி) மர்ம நபர்களால் ப்ளாட் ஒன்றில் கொல்லப்பட்டு கிடக்கிறார். இது தொடர்பான வழக்கு புதிதாக போலீஸ் டிப்பார்ட்மெண்டில் சேர்ந்த சந்தியாவிடம் (ரித்திகா சிங்) ஒப்படைக்கப்படுகிறது. அந்த வழக்கில் தலையும் புரியாமல், வாலும் பிடிபடாமல் திணறும் சந்தியா தனது குருநாதரும், முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான விநாயக் (விஜய் ஆண்டனி)கை உதவிக்கு அழைக்கிறார். ஆரம்பத்தில் மறுக்கும் அவர் பின்பு ஒப்புக் கொண்டு குற்றவாளியை துப்பறிகிறார். ஆக.. மாடல் லைலாவை கொன்றது யார்? அந்தக் கொலைக்கு காரணம் என்ன? – என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையுடன் சொல்லும் படமே ‘கொலை’.
அய்யே.. நடிப்புக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று தன்னைத் தானே புரிந்த நாயகன் விஜய் ஆண்டனிக்கு புதுசாக அஜித் ஸ்டைலில் விக் ஒன்றை மாட்டி நடமாட விட்டு விட்டார்கள்.. ரித்திகா சிங் ஒரு பொறுப்பான போலீஸ் ஆபிசராக நடித்து அசத்த முயன்றிருக்கிறார். முக்கிய பாத்திரமான மாடல் அழகி ரோலில் வரும் மீனாட்சி செளத்ரி, சர்வதேச மாடல் அழகிக்கான சாமுத்திரிகா லட்சணத்துடன் கவர்கிறார். அவர் வாயிலாகவே மாடலிங் துறையில் நிகழும் சில பல பிரச்சினைகளை வெளிச்சமிட்டு காட்டுவது அருமை… ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோர் கொடுத்த பணியை அளவாக செய்திருக்கிறார்கள்..
இது போன்ற க்ரைம் படத்தின் கதையாக ஒரு கொலை, அதைச் செய்தது யார்? ஏன்? என்பதைக் கண்டு பிடிக்கும் சொல்லாடல் சிம்பிளாக இருந்தாலும், முன்னரே சொன்னது போல் ஒவ்வொரு காட்சி அமைப்பும், பிரசண்ட் செய்த விதமும், ஹாலிவுட் தரத்தில் அமைக்க முயன்று படத்துடன் நம்மை ஒன்ற வைத்து விடுகிறார்கள். ஒரு சாதாரண கதையை நடிப்பே வராத ஹீரோவை வைத்து காட்சி அமைப்புகள் மூலம் மட்டுமே நம்மை மிரளச் செய்ய முயன்றுள்ளார் இயக்குநர் பாலாஜி கே குமார்.
கேமராமேன் சிவக்குமாரின் கைவண்ணத்தால் பார்ப்பது தமிழ் படம் என்பதே மறந்து வேறொரு தரத்தில் ஃபீல் பண்ண வைத்து விடுகிறது. இசை அமைப்பாளர். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் புதுசாக போட்டிருக்கும் பார்த்த ஞாபகமில்லையோ-வும் மேற்கத்திய பாணியிலான பின்னணி இசை கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அபாரம்.!
ஆரம்பத்தில் சொன்னது போல் உருப்படியான டெக்னிக்கல் டீம் கிடைத்த சூழலிலும் ஸ்கீரின் பிளேயில் போதிய அக்கறைக் காட்டாமல் சொதப்பி விட்டார் டைரக்டர்.!. ஆனாலும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டவாவது இந்த கொலையை ஒரு முறை பார்க்கலாம்
மார்க் 3/5


