சத்திய சோதனை – விமர்சனம்!
தமிழ்நாடு என்றில்லை.. உலகம் முழுக்க உள்ள போலீசில் பாதி பேருக்கும் மேல் யோக்கியர்கள் கிடையாது. அநேகமான குற்றவாளிகளுடன் மட்டுமே வெகுகாலம் கழிக்கும் போலீஸ் குறித்து பொது மக்களிடமும் நல்ல அபிப்ராயமென்பது மிகக் குறைவு.. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு போலீசார் ஒரு குற்றத்தை விசாரிக்கும் விதம் தொடங்கி குற்றவாளிகளையும், நிரபாரதிகளையும் நடத்துவதெப்படி என்பதையெல்லாம் நகைச்சுவை கலந்து உண்மையான போலீஸாரின் இன்னொரு பக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்ஒரு கிடாயின் கருணை மனு புகழ் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

இப்படத்தின் கதை என்னவென்றால் கிராமமொன்றில் கொலை ஒன்று நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு ஒரு வனாந்தரத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த நாயகன் (?) பிரேம்ஜி அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச் செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து ஒப்படைக்கிறார். அதே சமயம், போலீஸ் ஸ்டேசனில் சரணடையும் கொலையாளிகள், கொலை செய்யப்பட்டவர் ஏகப்பட்ட தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள். இதனால், அப்பாவி பிரேம் ஜி மீது சந்தேகப்படும் போலீஸ், மற்ற நகைகள் எங்கே? என்று கேட்டு அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்த இறுதியில் அந்த தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி-யை சட்டம் என்ன செய்தது? என்பதே சத்திய சோதனை,
காமெடி பிட் ஆக்டராக வலம் வந்த பிரேம்ஜிக்கு இப்படம் ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஆனாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயம்படுத்த தவறி விடுகிறார். நாயகி ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்று கிடைத்த வாய்ப்பில் வருகிரார்.. போகிறார்..ஞான சம்பந்தம் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்ந்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றுள்ளது. சங்குப்பட்டி போலீசாக நடித்திருக்கும் சித்தன் மோகன், செல்வன் முருகன் ஆகியோர் சின்ன சின்ன டைமிங் காமெடிகள் மூலம் கலகலப்பை கூட்டி உள்ளனர். இவர்களின் எதார்த்தம் நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி பாட்டி வரும் காட்சிகள் எல்லாம் தன் நடிப்பால் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் இவரது எதார்த்த நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவரும் திரையரங்குகளில் கைத்தட்டல் பெறுகிறார். மற்றொரு கிராம போலீசாக வரும் ஹலோ கந்தசாமியும் கலக்கி இருக்கிறார். ஒரு சின்ன கதாபாத்திரமாகவே இருந்தாலும் படம் முழுவதும் பயணித்து சிறப்பான நடிப்பால் கலகலப்பை கூட்டி இருக்கிறார் ஸ்பை ராமர். இவரது கதாபாத்திரம் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கர்ண ராஜா, ரேஷ்மா பசுபுலேட்டி, ஹரிதா, பாரதி, முத்து பாண்டி ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். நீதிபதிக்கே உத்தரவு போடும் பாட்டிக் கேரக்டர் வாவ் சொல்ல வைக்கிறது.
கேமராமேன் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு பர்ஃபெக்ட். ரகுராமின் ஐயப்ப சாமி பாடலும், கங்கை அமரன் குரலில் வரும் மற்றொரு பாடலும் அடடே சொல்ல வைக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.ஆர்ட் டைரக்டர் வாசுதேவன். கை வண்ணத்தில் எல்லா சீன்களும் ஒரு படி தூக்க்கலாக ஜொலிக்கிறது.
காட்சிக்குக் காட்சி நகைச்சுவை தெறித்தாலும் போலீஸாரின் மனித உரிமை மீறல்களை சரியாக பதிவு செய்துள்ள டைரக்டர் துணை நடிகர்கள் பலரை வைத்து நல்ல கருத்தை கொடுத்து கவர முயன்றிருக்கிறார் டைரக்டர்.
மொத்தத்தில் சத்திய சோதனை – தாராளமாகப் பார்க்கலாம்
மார்க் 3/5


