எளிய மனிதராக வாழ்ந்து சாதித்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

எளிய மனிதராக வாழ்ந்து சாதித்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி காலமானார். உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 79.

புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து கேரளம் திரும்பிய அவர், பேசும் திறனையும் 90 சதவீதத்திற்கு மேல் இழந்திருந்தார். இதனால், உம்மன் சாண்டி அண்மைக்காலமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் அதிகம் பங்கேற்கவில்லை. இந்த வருடம் பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மேலும் மோசமடைய சிறப்பு சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் உடல் கேரளா கொண்டுச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பினராயி விஜயனின் இரங்கல் பதிவில்,”நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதே கட்டத்தில்தான் மாணவ பருவத்தின்போது அரசியல் வாழ்வுக்கு வந்தோம். ஒரே நேரத்தில் பொதுவாழ்க்கையை முன்னெடுத்தோம். அவரிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினம். உம்மன் சாண்டி திறமையான நிர்வாகியாகவும், மக்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் பெரும்பாலும் முதல்வர்கள் எளிமையாக தான் இருப்பார்கள். அதிலும் உம்மன் சாண்டி மிக மிக சாதாரண மனிதராகத்தான் இருந்தார்.

51 வருடம் தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உம்மன்சாண்டி இரண்டு முறை கேரளாவின் முதல்வராக இருந்திருக்கிறார்.

முதல்வராக இருந்த போது கூட கிறிஸ்மஸ் பிரார்த்தனைக்காக தேவாலயம் ஒன்றின் படியில் தன்னந்தனி ஆளாக காத்துக் கிடந்து காட்சிகள் மீடியாக்களில் வெளிவந்து இப்படி ஒரு முதல்வரா ? என்ற ஆச்சரியத்தை மக்களிடம் ஏற்படுத்தியது.

முதல்வர் பதவியை நிறைவு செய்த பின் பின்னர் எங்கு சென்றாலும் பஸ்ஸில் அதுவும் டிக்கெட் எடுத்து செல்வது தான் அவரது வழக்கம் . மிகச் சாதாரணமாக மற்ற பயணிகளோடு பயணிப்பார்.

தான் முதல்வராக இருந்தபோது தனது அறையில் என்ன நடக்கிறது என்பதை இணையதளம் மூலம் நேரலை செய்து வெளிப்படையான நிர்வாகத்தை அமுல் படுத்திய ஒரே முதல்வர் உம்மன்சாண்டி.

சில மாதத்திற்கு முன்பு உடல்நலம் குன்றிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார்

ஆனால் உம்மன்சாண்டிlயோ இதை மறுத்து எனக்கு உடல் சோர்வாக தான் இருக்கிறது. நல்ல சிகிச்சை கிடைக்கிறது என்றும் முதல்வருக்கு அளித்த கடிதத்தை திரும்ப பெற்று விடு என்று அண்ணனுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

கேரள சட்டசபையில் அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் உம்மன் சாண்டி. தனது ஆஸ்தான தொகுதியான புதுப்பள்ளியை 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வரலாறு படைத்தவர். 51 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக எம்எல்ஏவாக காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை கேரளத்தின் முதல்வராக பதவி வகித்தவர் உம்மன் சாண்டி.

உம்மன் சாண்டி மரணம் அடைந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts