கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பியாக வேண்டும். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பியாக வேண்டும். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு இன்று (19.12.2021) நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், Do and Die அதாவது ஒரு செயலை செய்து முடித்துவிட்டு தான் சாகவேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.

சென்னையில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். விவரம் வருமாறு:

உங்களோடு எப்பொழுதும், கட்சிகள் கூட்டங்கள் வைக்கிறதோ, இல்லையோ ஆனால் நீங்கள் எப்பொழுதும் கூட்டங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். அதே உணர்வோடு இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடிய அரசு ஊழியர்களே, ஆசிரியர் பெருமக்களே, ஊடகத் துறை சார்ந்து இருக்கக்கூடிய தொலைக்காட்சி, பத்திரிகை நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். ஒரு அடுக்குமொழி உண்டு, பேச்சைக் குறைத்து நம்முடைய திறமையை காட்டிட வேண்டும்.

ஆங்கிலத்திலே ஒரு வார்த்தை உண்டு. “Do or die” “செய் அல்லது செத்து மடி” ஆனால் அதைக்கூட வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்து சொல்லவேண்டும் என்று சொன்னால் என்னைப் பொருத்தவரையிலே, இந்த Do-வுக்கும் Die-க்கும் உள்ள or-என்ற வார்த்தையை நீக்கிவிட்டு Do and Die செய்து முடித்துவிட்டு தான் சாகவேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை துவக்கத்திலேயே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம் – அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கும்போது அரசு ஊழியர்களுடைய பொற்கால ஆட்சியாக எப்போதும் அமைந்திருக்கிறது என்று இங்கு உரையாற்றிய திரு.மு.அன்பரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சவுந்திரராசன் அவர்கள் சொன்னார்கள், மற்றவர்களும் இங்கு பேசியிருக்கிறார்கள். இப்போதும் அப்படித்தான் அமையும் என்று சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இப்போது மட்டுமல்ல, எப்போதும். கழக ஆட்சி அமைந்தபோதெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களது முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம் என்பதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். உங்களுக்கெல்லாம் தெரியும். அதில் சிலருக்கு நினைவூட்டுவதற்காக சில திட்டங்களை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்லி உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

● அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேட்டை நீக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

● அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்! இந்தக் கருணைக் கொடையை இந்தியாவிலேயே வழங்கிய முதல் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்!

● அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியதும் கழக அரசுதான்!

● ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெறக்கூடிய திட்டம் அதை அமல்படுத்தியர் தலைவர் கலைஞர் அவர்கள்!

● திருமணக் கடன், வாகனக் கடன், வீடுகட்டக் கடன் ஆகியவை வழங்கியவர் கலைஞர் அவர்கள் தான்!

● மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கலைஞர் அவர்கள் தான்.

● 6 மாதத்துக்கு ஒரு முறை ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தும்போதெல்லாம் மாநில அரசு ஊழியர்க்கும் வழங்கியவர் தலைவர் கலைஞர்!

● ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல்களை வழங்கியது கழக ஆட்சி காலத்தில் தான்!

● அரசுப்பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தியது கழக அரசு!

● 10 ஆயிரம் சாலைப் பணியாளர்களை நியமித்ததும், 7 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை வேலையில் அமர்த்தியதும் கழக அரசுதான்.

● பண்டிகை முன்பணத்துக்கு வட்டியை நீக்கிய அரசு கழக அரசு!

● 2 லட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய ஆட்சி கழக ஆட்சி!

● ஓய்வுக்காலப் பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்திய அரசு கழக அரசு!

● தமிழாசிரியர் பணியிடப் பாகுபாடு நீக்கப்பட்டது. புலவர் பட்டம் பி.லிட். பட்டம் ஆக்கப்பட்டது.

● நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிஷ்ணன் விருது ஆனது.

● ஒன்றிய அரசுக்கு இணையான சம்பள விகிதங்கள் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியருக்குத் தரப்பட்டன.

இப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்!

கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகிறது.

அதற்குள் ஏராளமான திட்டங்கள் அரசு ஊழியர்களுக்குச் செய்து தரப்பட்டுள்ளன.

● அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதியை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளோம்.

● அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து நிதிநிலை அறிக்கையில் 1.4.2022 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, இந்த அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலம் முன்னதாகவே அதாவது 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதை அறிவித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.

● சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வு பெறக்கூடிய வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்திய ஆட்சிதான் இந்த திமுக ஆட்சி. இதன்மூலம் தற்போது பணியில் இருக்கக்கூடிய 29 ஆயிரத்து 137 சமையலர்களும் 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெற்றுள்ளார்கள்.

● அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020-ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேலும் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசால் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அந்த அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவித்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!

● அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணி தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கும் ஆட்சி இந்த ஆட்சி.

● ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களைத் தற்காலிகப் பணி நீக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என்று அறிவித்த ஆட்சி இந்த ஆட்சி.

● கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அதிமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தினீர்கள். அப்போது பல்வேறு நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டீர்கள்.

● இந்த வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். இதனைப் பரிவுடன் பரிசீலித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவற்றைப் பணிக்காலமாக முறைப்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி!

● பணியில் இருக்கும்போது காலமான அரசுப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக்கக்கூடிய வகையில் கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரிசெய்யும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடத் தயாராகி வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி!

● வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் கலந்தாய்வின்போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் ஆட்சிதான் இந்த ஆட்சி. போராட்டக் காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிச்சயமாக, உறுதியாக கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாகப் பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதுவும் சரி செய்யப்படும் என்று அறிவித்திருக்கும் ஆட்சிதான் இந்த ஆட்சி!

● அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழக்கூடிய மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர்களின் வயதுவரம்பைக் கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கும் ஆட்சிதான் இந்த ஆட்சி.

● கொரோனா சிகிச்சைகளை பொருத்தவரையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொடர்பான 10 லட்சம் ரூபாயைவிடக் கூடுதலாகக் கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொகை அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும் என்று அறிவித்த ஆட்சி தான் இந்த ஆட்சி!

● கணக்கு மற்றும் கருவூலத் துறையின் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு அவை துரிதமாகவும் எளிதாகவும் செய்யக்கூடிய வகையில் மாவட்டம்தோறும் பயிற்சியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்த ஆட்சிதான் இந்த ஆட்சி!

● புதியதாக அரசுப் பணிகளில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வரும் ஆட்சிதான் இந்த ஆட்சி! இதன் மூலம் பவானி சாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிக்கான பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.

● அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ள காரணத்தால், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த ஆட்சிதான் இந்த ஆட்சி!

மக்களாட்சித் தத்துவத்தில் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாக படிப்படியாக ஆனால் அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்றறப்படும் என்று நான் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறேன்.

அந்த உரிமையுடனும் தகுதியுடனும்தான் நான் இந்த மாநாட்டுக்கு வருகை தந்துள்ளேன்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கும் அன்புக்குரிய சகோதரர் மு.அன்பரசு அவர்கள் சில நாட்களுக்கு முன் ‘தீக்கதிர்’ நாளேட்டில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதையும் படித்துப் பார்த்தேன். அதில் அவர் சொல்கிறார்.

‘ஒற்றைக் கோரிக்கை மாநாடு!

வெற்றி காணக் கூடுவோம் உறுதியோடு!” என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் மிக நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். மிக நீண்ட கட்டுரையாக எழுதியிருந்தார். நானும் முழுமையாகப் படித்துப் பார்த்தேன்.

தன்னுடைய கோரிக்கைகள் அனைத்தையும் விரிவாக எழுதிய அன்பரசு அவர்கள்,

”அரசிடம் கோரிக்கை வைப்போம்!

ஆட்சியாளர்களைத் திரும்பிப் பார்க்க வைப்போம்!” என்று முடித்திருக்கிறார்.

நான் திரும்பிப் பார்ப்பவனாக இருக்க மாட்டேன் –

உங்களில் ஒருவனாக நானும் இருப்பேன். அதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் நான் இந்த மாநாட்டிற்கு தேடி வந்திருக்கிறேன்.

நீங்கள் அரசு ஊழியர்கள்.

நான் மக்கள் ஊழியன். அதுதான் வித்தியாசம்.

எனவே, உங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை நான் உணர்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்.

அரசாங்கம் இப்போது உள்ள நிலைமையை நீங்கள் உணர்ந்தாக வேண்டும், ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நான் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ஐந்து லட்சம் கோடிக் கடனில் இருக்கிறோம்.

கடந்த பத்தாண்டுகாலமாகத் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்தும் – சூறையாடியதுமான ஒரு ஆட்சி நடந்தது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. இருக்கக்கூடிய எதார்த்தைத்தான் சொல்கிறேன். அதை நான் உங்களிடம்தான் கூற முடியும். வேறு யாரிடமும் கூறமுடியாது. இந்தக் கடந்த காலத் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

● நிதிநிலைமையைச் சரி செய்தாக வேண்டும்.

● 5 லட்சம் கோடிக் கடன்களை அடைத்தாக வேண்டும்.

● புதிய தொழில்களை, தொழில் நிறுவனங்களை அழைத்து வருவதன் மூலமாக வளர்ச்சியை உருவாக்க முனைந்து வருகிறோம். அதற்கான கொள்கை அறிவிப்புகளைச் செய்துள்ளோம்.

● புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஈடுபட்டிருக்கிறோம்.

● கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா என்ற கொடிய தொற்று நோய், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அதிகமாகப் பாதித்துவிட்டது. அந்தத் தொழில்களை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவரப் போராடி வருகிறோம்.

இத்தகைய முன்னெடுப்புகளின் மூலமாகத்தான் தமிழகத்தை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்ற உணர்வோடு உழைத்து வருகிறோம்.

இவை அனைத்தும் உங்களுக்குப் புதிய செய்திகள் அல்ல.

உங்களுக்குத் தெரிந்த செய்திகள்தான். தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக, உறுதியாக இருக்கிறது.

அப்போது உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் நீங்கள் கேட்காமலேயே, இது போன்ற மாநாடுகளையெல்லாம் போட்டு என்னை அழைத்து வந்து இந்த உறுதியை கேட்காமேலேயே அந்த கோரிக்கையை நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றித் தரும். ஆகவே நான் இருக்கிறேன், நீங்கள் இதைப்பற்றி சிறிதளவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பேரறிஞர் அண்ணா அவர்கள், ஒன்று சொன்னார். ”பெட்டி இருக்கிறது, பூட்டு இருக்கிறது, சாவி இருக்கிறது, ஆனால் பெட்டி காலியாக இருக்கிறது” என்று சொன்னார்கள்.

அரசாங்கத்தின் கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பியாக வேண்டும்.

அரசாங்க கஜானாவுக்கு வர வேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. அதனை மொத்தமாக ஒன்றிய அரசு பறித்துவிட்டது. அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள்.

‘கொத்தடிமை போன்ற நிலை அகலட்டும்’ என்று அன்பரசு அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.

நிதி நிலைமையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை முறையைப் போலக் கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன.

ஜி.எஸ்.டி., முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்குத் தரவேண்டிய நிதிகளே முழுமையாகத் தரப்படுவது இல்லை.

தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை.

அரசு ஊழியர் சங்கமாக மட்டுமில்லை நீங்கள், அரசியல் தெளிவு பெற்றவர்கள் நிரம்பிய சங்கமாகவும் இருக்கிற காரணத்தால் நான் இதற்கு மேல் தெளிவுபடுத்த அவசியமே கிடையாது.

‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்

இல்லாகித் தோன்றக் கெடும்” என்கிறார் வள்ளுவர்.

இருப்பது, இயற்றக் கூடியது, இனியும் ஈட்டக் கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து, செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோலத் தோன்றினாலும் கூட இல்லாமல் மறைந்து போய்விடும் என்கிறார் வள்ளுவர்.

அளவு அறிந்து இந்த அரசு செயல்படுகிறது.

ஈட்டுதல் அதிகமானதும் கொடுத்தல் அதிகம் ஆகும்.

நிச்சயம் அதிகரித்து வழங்கப்படும்.

மக்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் இந்த அரசு இருக்கிறது என்பதை மீண்டும் உங்களிடத்திலே சொல்லி இந்த மாநாட்டிலே பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய இந்த மாநாட்டு குழுவினருக்கும், இங்கே வீற்றிருக்கக்கூடிய அத்தனைப் பேருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்!

நன்றி வணக்கம்!

error: Content is protected !!