திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. நாளை மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள், பிரகாரத்தில் சுவாமி–அம்மன் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.
இன்று 9-ம் திருவிழாவை முன்னிட்டு தீபக்கொப்பரைக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஊழியர்கள் 15 பேர் கொப்பரையை தோளில் சுமந்தபடி 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். 5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோவில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்வும், அதே நேரத்தில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தை காணவும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார். தற்போது, கொரோனா தொற்று பரவல் அச்சத்தால் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், மகா தீப தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்ட பக்தர்கள் வருவதை தடுக்க நகரைச் சுற்றியுள்ள 9 முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் திருவிழாவையொட்டி உற்சவ நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய தினசரி 10 ஆயிரம் வெளியூர் பக்தர்கள், 3 ஆயிரம் உள்ளூர் பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் 20ம் தேதி வரை நிறுத்தப்பட்டு கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள் என்று வேலூர் சரக டிஐஜி தெரிவித்தார்.
கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நாளை (19-ந் தேதி) மதியம் 2.51 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதனால் வருகிற 20-ந் தேதி வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயிலின் கிரிவலப் பாதையில் 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்ததை எதிர்த்து, கிரிவலப் பாதையில் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக் கோரி சென்னை ஐகோர்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு இன்று பதில் மனுவை தாக்கல் செய்தது.
அதில் கூறியிருப்பதாவது:–
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, திருவண்ணாமலை கோயிலுக்குள் நாளை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிரிவலப்பாதையில் இன்றும், நாளையும் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதில் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்படலாம். பரணி தீபத்தின் போது கட்டளைதாரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது