மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார். வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார். மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் தத்தம் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரியுள்ளார்.

பிரதமர் மோடி இன்றைய உரையின் சாராம்சங்கள்:

குருநானக் பிரகாஷ் பூர் தினத்தில், உலக மக்களுக்கு எனது நல் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். பிராகாஷ் பூரப் தினத்தை ஒட்டி கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

எனது ஐம்பதாண்டு கால பொதுப்பணியில் நான் விவசாயிகளின் துயரத்தை உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் மக்கள் என்னை பிரதமராக்கியவுடன், விவசாயிகளின் நலனின் மீது மிகுந்த முக்கியத்துவம் வைத்தேன்.விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டைகள் வழங்கியுள்ளோம். இது விவசாய சாகுபடியை அதிகரிக்க உதவியுள்ளது. ஃபைசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

கிராமப்புற விவசாய சந்தை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 1000 மண்டிகள் இ மண்டிகளாக மாற்றப்பட்டுள்ளான. விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக நுண் பாசனத் திட்டத்துக்கான நிதி இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர பட்ஜெட், விவசாயிகளுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிதி நிலைமை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எங்களின் அரசாங்கம் விவசாயிகளின் நலனை நோக்கி செயல்படுகிறது. குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனின் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

இப்படியாக விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும்.

இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் களப் பணிகளுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

error: Content is protected !!