டெல்லி: சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு யார் காரணம்?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

டெல்லி: சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு யார் காரணம்?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

றக்குறைய இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை உச்ச நீதிமன்றம் டெல்லியின் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ஒரு தீர்ப்பை வழங்குவதும், அது பின்னர் தேய்ந்து மறைவதும் புராணக்கதைகள் போல. ஆம்; நம்பிக்கை உண்டு. ஆனால் நிகழ்வில் யாரும் கண்டதில்லை. கடந்த 1999-2000 ஆம் ஆண்டில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் டெல்லி மாநகரின் மாசிற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினார். அதில் கிழக்கு டெல்லியிலுள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காற்று, நீர் மாசு நகரின் சுகாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதை சுட்டிக்காட்டி, தீர்வுகளையும் தீர்ப்பில் குறிப்பிட்டார். அத்தீர்ப்பில் சி என் ஜி எனப்படும் கரிய அமில வாயுவை வெளியிடாத பேருந்துகளை அறிமுகம் செய்யவும், மாசினை வெளியேற்றும் தொழிற்சாலைகளை வரைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டார். ஆயினும், இத்தனை ஆண்டுகாலம் கழித்து டெல்லியின் மாசு குறையவில்லை. மாறாக பொது முடக்கம் தேவை எனும் சூழலையே கொண்டுள்ளது. அத்துடன் யமுனை ஆற்றில் இரசாயன நுரைகள் பொங்கி வரும் காட்சிகளையும் தொலைக்காட்சிகளில் காண முடிந்தது.

தற்போது உச்சநீதிமன்றம் டெல்லி மாசு குறித்து வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறது. அப்போது மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் சுமார் 40% அளவிற்கு மாசு ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் திடீரென இதை வெறும் நான்கு விழுக்காடு என்று தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் இதை “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” எனக் கேலி செய்துள்ளது. மத்திய அரசின் இந்த பதிலால் பலரும் அதிச்சியடைந்துள்ளனர். நாற்பதிருக்கும், நான்கிற்கும் வேறுபாடு இல்லையா? அடுத்தாண்டு வருகின்ற தேர்தலை முன்னிட்டே மத்திய அரசு இவ்வாறு முதலில் சொன்னதற்கு மாறாகக் கூறுகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றார் வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர்.

டெல்லியின் மக்கள் தொகை சுமார் 2 கோடிக்கும் மேல். அந்நகரம் நாட்டின் தலைநகர் என்பதால் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் தினசரி வந்து போவார்கள். அத்துடன் நாள்தோறும் அலுவலகம் செல்வோர், வணிகர்கள் எனப் பல வகையான மக்கள் சாலைகளில் பயணித்தாக வேண்டும். டெல்லியில் 20 ஆண்டுகளுக்கு முன் மெட்ரோ இரயில் போக்குவரத்து துவங்கவில்லை. இப்போது டெல்லியைச் சுற்றி அனைத்துப் பக்கங்களிலும் மெட்ரோ இரயில் போக்குவரத்து உள்ளது. அப்படியிருந்தும் காற்று மாசு அதிகம் என்பது ஆய்விற்குரியது. ஒன்று டெல்லி வாசிகள் பழைய இரு/நான்கு சக்கர வாகனங்களையே இயக்க வேண்டும் அல்லது சி என் ஜி பேருந்துகள், மெட்ரோ ஆகியவை சரியான சேவையை வழங்காமல் இருக்க வேண்டும். இதுவும் கூட தவறு. இலட்சக்கணக்கான புது வாகனங்களும், கூட்டமான மெட்ரோ சேவைகளும் இயங்கித்தான் வருகின்றன. பிறகு? தொழிற்சாலைகளே வில்லன்கள் என்றால் மிகையில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் சிறு/குறு தொழில்களைச் சார்ந்தவை. அவற்றால் பெரும் செலவு செய்து மாசுக்கட்டுப்பாடு சாதனங்களைப் பொருத்திக் கொள்ள இயலாது. ஏழைகள், நடுத்தர வர்க்க குடும்பங்களில் சமையல் அறையில் கரி, மரக்கட்டை எனப் புகையை வெளியிடும் எரிபொருட்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இரு/நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் புகை, தெருக்களில் வெளியிடும் புழுதி ஆகியவையும் கூட மாசிற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. பெரிய தொழிற்சாலைகளின் புகை, அனல் மின் நிலையப் புகை ஆகியவையும் மேலதிகக் காரணங்கள்.

இப்போது எழும் கேள்வி மத்திய அரசும், டெல்லி அரசும் தங்களின் மாசுக் கொள்கையை எப்படி வடிவமைத்துக் கொண்டுள்ளன என்பதாகும். மத்திய அரசு நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைக்கப்போவதில்லை என்பது தெளிவு. எனவே அனல் மின் நிலைய மாசு குறைந்தால்தான் வியப்பு. பொதுப்போக்குவரத்தில் மின்சாரப் பேருந்துகள், கதிரொளி ஆற்றல் பேருந்துகளையும் இயக்கலாம். தனியார் வாகனங்களை மின் வாகனங்களுக்கும், கதிரொளி வாகனங்களுக்கு மாறிக்கொள்ள மானியம் வழங்கலாம். தொழிற்சாலைகள்? இருப்பதிலேயே பெரியப் பிரச்சினை இவைகள்தான். இவற்றை மூடுவது வேலை வாய்ப்பை பாதிக்கும். மேலும் இவை வேறொரு அண்டை மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து அங்கு மாசை உருவாக்கும். எனவே அவற்றை வகைகளாகப் பிரித்து மாசில்லாத தொழில்நுட்பங்களை மானியத்துடன் வழங்குவதே பொருத்தம். பொது மக்களுக்கு எரிவாயு உருளைகளை அதிக மானியத்துடன் வழங்கலாம் அல்லது கதிரொளி ஆற்றல் கொண்ட அடுப்புகளை வழங்கலாம். இதற்கே சுமார் ஐந்தாண்டுகள் கடந்து விடும். அதுவரை சூழல் மாசு குறைய வாய்ப்பில்லை. கொரோனா காலத்தில் பழகிய முகக்கவசங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்க நமக்கொரு வாய்ப்பு!

டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மெட்ரோ, மாநகரங்களிலும் சூழல் மாசு பெரும் பிரச்சினைதான். டெல்லி மாடல் ஒன்று உருவாகி அதைப் பின்பற்றி அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால்தான் காற்று, நீர் மாசுக்களை அகற்ற முடியும். உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் உறுதியளித்ததற்கு ஏற்றாற் போல் அரசு விரைந்து செயல்பட்டால் 2050 ஆம் ஆண்டிலேயே இந்தியாவை மாசில்லாத நாடாக மாற்றிக்காட்ட முடியும். நமது வாரிசுகளுக்கு மாசற்ற உலகை வழங்க முடியும்.

ரமேஷ் பாபு

error: Content is protected !!