அன்பைப் பரப்பி வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு!

அன்பைப் பரப்பி வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு!

மிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று – மதுரை ஆதீன மடம் . சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் 292 ஆவது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (அருணகிரி) ஆதீனமாக பொறுப்பேற்றார்.தற்போது 77 வயதான இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த .உடல் நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நாளிதழில் பத்திரிகையாளர், ஆன்மீகவாதி, தமிழ் ஆர்வமும், பன்மொழிப் புலமையும், ஆகச்சிறந்த பேச்சாற்றலும், அனைத்து மத மக்களிடமும் அன்பு கொண்டவர் ஆதீனம் அருணகிரிநாதர். ஆன்மீக பணிக்கு வருவதற்கு முன், சென்னையில் ஒரு மாலை நாளிதழில் பணியாற்றியவர். சுறுசுறுப்பான பத்திரிகையாளராக பல பிரத்யேகச் செய்திகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அவருக்கு புல்லட் பைக் என்றால் அலாதிப் பிரியமாம். அதனாலேயே அவர் ஓட்டிய புல்லட் தற்போது வரை பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் தம்புரான் சாமிகளாக இருந்தவர், 1975-ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார்.

தமிழ் மொழி, சைவ நெறி பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டவர். 1985ஆம் ஆண்டு ராமேசுவரத்தில் நடந்த கச்சத்தீவை மீட்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்தின் போதும், தென்காசி அருகே கலவரம் நடந்த போதும், மதவெறிக்கு எதிராகவும், சமய நல்லிணக்கத்தை காக்க முயற்சியெடுத்து மக்கள் ஒற்றுமைக்காக பணியாற்றினார்.

எம்.ஜி.ஆர், கருணாநிதி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களுடனும், திரைத்துறை பிரபலங்களுடனும் தொடர்பில் இருந்த ஆதீனம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப்பெறும் வரையில் அரசியலில் தலையிடாமல்தான் இருந்தார். தமிழ் மற்றும் சமய நெறிகளுக்காக குரல் கொடுத்த ஆதீனம், காலப்போக்கில் ஜெயலலிதா-விற்கும் குரல் கொடுத்தது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியது. சமீபத்தில் பொறுப்பேற்ற திமுக அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்தும் அறிக்கை வெளியிட்டு, “ஜோ பைடனும், கமலா ஹாரிசும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என இரண்டு வருடத்திற்கு முன்பே அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் கூறி இருக்கிறேன்” என்று சொன்னவரிவர். முதல் 23 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில், இவர் சொற்பொழிவாற்றி இருக்கிறார்.

Related Posts

error: Content is protected !!