நாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா?

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் சந்தித்து, சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா, 75வது சுதந்திர தின விழா, தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா உள்ளிட்டவற்றுக்கு அழைத்தார். இந்திய சுதந்திரத்திற்கே 75ஆம் ஆண்டுவிழாதான் என்றால் தமிழக சட்டமன்றத்திற்கு எப்படி நூற்றாண்டு விழா கொண்டாட முடியும்? அதுவும், 2012ல் சட்டமன்ற வைரவிழா, அதாவது 60ஆம் ஆண்டு விழாவை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு கொண்டாடி, அதற்காக கடற்கரை சாலையில் அலங்கார வளைவையும் அமைத்திருக்கும்போது, 2021ல் 69ஆம் ஆண்டு விழாதானே வரும்? நூற்றாண்டு என்கிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் கணக்கில் வீக்கா?
இது கணக்கு சம்பந்தப்பட்ட விழா அல்ல, வரலாற்றுப் பின்னணி கொண்ட விழா. ‘ 1952ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் பிரதமராகப் பதவியேற்றார் நேரு. சென்னையில் முதல்வராகப் பதவியேற்றார் ராஜாஜி.. 1952லிருந்து 2012 வரையிலான காலத்தைக் கணக்கிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் 60ஆம் ஆண்டு (வைர) விழாவைக் கொண்டாடியது ஜெயலலிதா தலைமையிலான அரசு. ஆனால் ராஜாஜி, 1952ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகத்தான் பதவிப்பிரமாணம் ஏற்றார்.
ராஜாஜிக்கு முன்பாக பி.எஸ். குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமியார் போன்றவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். இந்தியா விடுதலையடைந்தபோது, முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அதாவது, சுதந்திரத்திற்கு முன்பே அவர் முதலமைச்சராகிவிட்டார். அவருக்கு முன்பாக டி.பிரகாசமும், அவருக்கும் முன்பாக அதே ராஜாஜியும் நமக்கு முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த சென்னை மாகாணத்தின் (தமிழக) சட்டமன்றம்தான் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது.
சுதந்திரத்திற்கு முன்பே முதலமைச்சரா? எப்படி? வெள்ளைக்காரர்கள் ஆட்சியில், பிரிட்டிஷ் இந்திய செயலாளர் எட்வின் மாண்டேகுவும் இந்தியாவின் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டும் அளித்த பரிந்துரையின்படி, இந்தியர்களுக்கு ‘சுயாட்சி’ வழங்கும் சட்டம் 1919ல் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசிடமே அதிகாரத்தைக் குவித்து வைக்காமல், மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சட்டமன்றங்களை உருவாக்கி, இந்தியர்களே அதனை நிர்வகிக்கும் வகையில் குறைந்தபட்ச அதிகாரங்களை வழங்குவது என்பதுதான் இந்த சட்டம்.
அதன்படி, 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. டிசம்பர் 17ல் கடலூர் ஏ.சுப்பராயலு முதல் அமைச்சரானார். மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சென்னை மாகாண முதல் சட்டமன்றக் கூட்டம் 1921ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாள் நடைபெற்றது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, இந்தியாவில் சமூக நீதிக் கொள்கையை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட முதல் சட்டமன்றம் என்ற பெருமை 1921ல் அமைந்த சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு உண்டு. அந்த சட்டமன்றத்திற்குத்தான் 2021ல் நூற்றாண்டு விழா.
கலைஞர் ஆட்சியில் 1996-97ல் தமிழக சட்டமன்றத்தின் 75ஆம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அதன்பின் 15 ஆண்டுகள் கடந்த நிலையில், ஜெயலலிதா ஆட்சி நடந்த 2012ல் 60ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்ட ‘அதிசயம்’ நிகழ்ந்தது.ஆனால் ஜெயலலிதா வழியில் கணக்குப் போடுபவர்களுக்கு, ஸ்டாலின் அறிவித்த சட்டமன்ற நூற்றாண்டு விழா என்பது தவறு போலத் தெரியும். கலைஞர் கணக்கைப் பின்பற்றுவோருக்கு வரலாற்றின் தெளிவானப் பார்வை கிடைக்கும்.