சீனாவின் ‘காய்ச்சல்’ வரலாறு…! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

சீனாவின் ‘காய்ச்சல்’ வரலாறு…! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

சீனாவின் வரலாறு பண்டையக் காலம் தொட்டே துவங்கியிருந்தாலும் அதன் சமீபத்திய நவீன வரலாறு செஞ்சீனப் புரட்சிக்குப் பின்னரே துவங்குகிறது. புரட்சியை மேற்கு உலகம் ஏற்கவில்லை என்ற போதும் சோவியத் ஒன்றியமும் பொதுவுடமை அகிலமும் சீனாவைத் தாங்கி நின்றன. மாவோவின் மறைவிற்குப் பிறகு சீனா தனது சமத்துவப் பாதையிலிருந்து விலகி முதலாளித்துவ அணுகுமுறைக்கு மாறி இப்போது பெரும் பொருளாதார சக்தியாக நிலைத்திருக்கிறது. உலக வல்லரசாகும் கனவெல்லாம் கூட உண்டு. ஆயினும் அவ்வப்போது சீனாவின் இருண்ட பக்கங்கள் வெளியே வந்து இம்சை செய்து கொண்டுதான் உள்ளது. அப்படியொரு இருண்ட பக்கம்தான் நோய்ப்பரவல். சீனா அடிக்கடி பெருந்தொற்று நோய்களின் தோற்றுவாயாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் சீனப் புரட்சிக்கு முன்னரே ஆசியன் ப்ளூ எனும் காய்ச்சல் சீனாவிலிருந்தே தோன்றி உலகம் முழுதும் பரவியது. இலட்சக்கணக்கில் மக்கள் மடிந்தனர். கடந்த இருபது வருடங்களில் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனோ என வரிசையாக உயிர்க்கொல்லி நோய்கள் சீனாவை மையமாகக் கொண்டே பரவி வருகின்றன.

சீனா தெரிந்துதான் நோய்களை உலகம் முழுதும் பரப்புவதாக வல்லுநர்கள் சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் சீனாவோ இந்நோய்களினால் தாங்களே அதிகம் பாதிப்படைந்துள்ளதாகவும், எனவே இக்குற்றச்சாட்டுத் தவறு என்றும் வாதாடுகிறது. ஆயினும் இது வரை கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகை இப்படி முடக்கிப் போட்ட நோய்த்தொற்று ஏதுமில்லை. எய்ட்ஸ் கூட தொற்று நோயல்ல. காச நோய், மலேரியா, புற்று நோய் எனப் பல உயிர்க்கொல்லி நோய்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. உலகம் கடுமையான பருவ நிலை மாறுபாட்டின் விளைவுகளை காணத் துவங்கியுள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட வைரஸ் கிருமிகளால் உலகை முடக்கிப்போட முடியும் என்ற நிலை கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. இப்போது நிகழ்ந்து வருகிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு மேட் டாமன் நடித்த கண்டேஜியன் எனும் திரைப்படம் இன்றையக் கொரோனா பரவலை ஒத்த நோய்த்தொற்று ஒன்றினால் உலகம் முழுதும் மனிதர்கள் கொத்து கொத்தாக மடிந்து விழும் நிலையை எடுத்துக்காட்டியது. அப்படத்தில் காடுகளை அழிப்பதால் வௌவால்களுக்கு குடியிருக்க இடமின்றி அவை பன்றித் தொழுவங்களுக்குள் நுழைந்து அங்குள்ள பன்றிகளைக் கடித்துக் கொல்கின்றன. ஒரு சில பன்றிகள் கடியுடன் தப்பித்தாலும் அவை வௌவால்களால் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றன. இப்பன்றிகளின் நோய்த்தொற்றை அறியாமல் மனிதர்கள் அவற்றை உட்கொள்ள கொரோனா போன்ற நோய் உலகம் முழுதும் பரவுகிறது.

இப்போது பல அறிஞர்கள் கொரோனாவின் துவக்கம் வூஹான் ஆய்வு நிலையத்தில் ஏற்பட்டக் கசிவு என்றாலும் அங்கு இந்நோயை உருவாக்கும் கிருமிகளின் ஆய்வு நடைபெற்று வந்ததையும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் கொரோனா எனும் நோய்க் கிருமி குறித்து அறிவியல் உலகம் அறிந்துதான் இருந்தது. ஆயினும் இதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதே ஆய்வுகளில் இருந்துள்ளது. இது சாதாரணக் காய்ச்சல் என்றே துவக்கத்தில் நினைத்திருந்தனர். நுரையீரலை ஆக்கிரமித்து உயிரைப் பறிக்கும் என்பதும், நோய் எதிர்ப்புச் சக்தியை நீக்கும் என்பதும், அதற்கான வேகம் தீவிரமானதாக இருக்கும் என்பதையும் அறுதியிடவில்லை. இதனால் கோரோனாவுக்கு தடுப்பூசி என்று எதையும் பரிந்துரைக்கவில்லை. ஆகையால், கோரோனா தாக்கியவுடனேயே தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வுகள் வேகம் பெற்றன. விரைவில் அதற்கு தீர்வும் எட்டப்பட்டு இன்று உலகம் முழுதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பறவைக் காய்ச்சல் நோய் சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் வாத்துகள் மத்தியில் 1996 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதை மருத்துவ உலகம் H5N1 என்று அழைத்தது. அதே நேரத்தில் வட அமெரிக்காவிலும் கூட இதன் தடையங்கள் கிடைத்தன. இன்று வரை எங்கிருந்து முதலில் தோன்றியது என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. ஆனால் உலகம் முழுதும் பரவியது சீனாவிலிருந்து என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்நிலையில் இந்நோய் மனிதர்களுக்கும் பரவும் என்பதையும் 1997 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் கண்டறியப்பட்ட முதல் தொற்றிலிருந்து அறிந்திருக்கிறது, மருத்துவ உலகம். இப்போது கொரோனா பரவும் காலத்தில் சில தினங்களுக்கு முன்னர் மனிதர்களுக்குப் பரவும் H10N3 நோய்த்தொற்று சீனாவில் தோன்றியுள்ளதாக அந்நாட்டின் தேசிய உடல்நல ஆணையம் தெரிவித்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜிங்சியாங் மாகாணத்தில் ஒருவருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் குணமாகி வீடு திரும்பி விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவை மெதுவாக உலகிற்கு அறிவித்த சீனா இப்போது பறவைக் காய்ச்சல் தொற்றை அறிவித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குணமாகி வீடு திரும்பியவர் ஒருவர்தான். எத்தனைப் பேர் நோய்க்கிருமியை உடலில் சுமக்கின்றனர் என்பது குறித்து தெரியவில்லை. இந்நோய்ப்பரவல் குறித்து சீனா உறுதியாகத் தெரிவிக்காதவரை பதற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு முன்னர் H7N9 பறவைக்காய்ச்சல் தொற்று 2016-17 ஆம் ஆண்டுகளில் சில நூறு பேரைக் கொன்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

H1N1 என்று அழைக்கப்படும் பன்றிக்காய்ச்சல் மனிதர்களுக்கு பேரளவுத் தோன்றத்துவங்கியது 2009 ஆம் ஆண்டில்தான் என்கின்றனர். அதற்கு முன் மூளைக்காய்ச்சல் என்று உலகம் முழுதும் அறிமுகமாகியிருந்த பன்றிக்காய்ச்சலும் ஆள்கொல்லிதான். ஆனால் பேரளவில் நகர்ப்புறங்களில் பன்றிகளின் இருப்பு ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது பன்றிக்காய்ச்சல் அதிகம் இந்தியாவில் காணப்படுவதில்லை. ஆயினும் சீனாவிலிருந்து பரவும் ஆப்பிரிகன் ஸ்வைன் ஃபீவர் எனும் பன்றிக் காய்ச்சல் சென்றாண்டு பேரளவில் பன்றிகளை அசாம் மற்றும் இந்த வட கிழக்கு மாநிலங்களில் கொன்று குவித்தது. குறிப்பாக அயல் வகை பன்றிகளையே தாக்கும் இந்நோய் உள்ளூர்ப் பன்றிகளைத் தாக்குவதில்லை. அசாம் மாநிலத்தில் பன்றி வளர்ப்பு ஒரு புதிய தொழில் வாய்ப்பாக வளர்ந்து வந்த நேரத்தில் அத்தொழில் நசியும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது இந்நோய்.

மேலும் காட்டுப் பன்றிகளையும், வேறு சில அரிய வகைப் பன்றிகளையும் கூட கொல்வதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நோய் சீனாவிலிருந்து பிரம்மபுத்ரா நதி வழியே அசாமிற்குள் நுழைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்கு இன்னும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை. அசாமில் மட்டுமே சுமார் 20,000 பன்றிகளைக் கொன்றுள்ளனர்.இப்படிப் பல நோய்த் தொற்றுகளை பரப்பி வரும் சீனா உலகளவில் கெட்டப் பெயர் சம்பாதிப்பதோடு தனக்கும் நோய்த் தொற்றுகளுக்கும் தொடர்பேயில்லை என்றும் சாதித்து வருகிறது. இதற்கொரு முற்றுப்புள்ளியை உலகம் எதிர்பார்க்கிறது.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!