800 – திரைப்பட விமர்சனம்
ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை நிஜ கதையை படமாக எடுப்பதை பயோபிக்ஸ் என கூறப்படுகிறது. அப்படி எடுக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. அதிகமான பயோபிக்ஸ் வந்த தளமாக பாலிவுட் சினிமா உள்ளது. பல ஆண்டுகளாக பாலிவுட்டில் இந்த பயோபிக்ஸ் சினிமாக்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ராஜாக்கள் மற்றும் ராணிக்களில் துவங்கி விளையாட்டு வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் வரை பலரின் வாழ்க்கைகள், அங்கே படமாக்கப்பட்டுள்ளன.இந்த படங்களை எடுக்க பாலிவுட் சினிமாவிற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளன. சினிமா என்பதால் ஒருவர் வாழ்க்கையை மட்டும் கூறுவது அலுப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் அதில் கற்பனையை சேர்க்கின்றனர். ஆனால் சிலர் அதிகமாக சேர்க்கும் கற்பனைகள் படத்தை உண்மைக்கு புறம்பாக காட்டி விடுகிறது அப்படியான டங்கல், மேரி கோம், எம். எஸ். தோனி- தி அன்டொல்ட் ஸ்டோரி, கங்குபாய் கத்யவாடி, ராக்கெட்ரி: நம்பி விளைவு என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதனிடையே விளையாட்டு வீரர்களைக் குறித்து படம் எடுத்தால் அது ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு வரவேற்பைப் பெறுகிறது. களத்தில் மட்டுமே தாங்கள் பார்த்து வியந்த தங்கள் ஆதர்ச வீரர்களின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்துகொள்வதில் பலருக்கும் விருப்பம் இருந்திருக்கிறது.’Once upon a time there lived a ghost’ என்று சொல்வது போல, கிரிக்கெட் உலகத்தில் புதிய சாதனையைப் படைத்த ஜாம்பவானான ‘முரளி அண்ணா’ என்றழைக்கப்படும் ‘முத்தையா முரளிதரன்’. இப்போது அவர் செய்த சாதனைகள், கடந்து வந்த பாதைகள் மற்றும் அவர் சந்தித்த சவால்கள் குறித்து ‘800’ என்ற பெயரில் எம். எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில், திரைப்படம் வெளியாக இருக்கிறது.
படத்தின் டைட்டில் ஓடும்போதே கிரிக்கெட் என்பதன் வரலாற்றைச் சொல்லி ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு கிரிக்கெட் எப்படி உதவுகிறது என்பதை விளக்கி விடுகிறார்கள்.அதன் தொடர்ச்சியாக, முத்தையா முரளிதரனின் தாத்தா சின்னசாமி, பாட்டி அங்கம்மாள் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தப்போது, ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்ட பணிக்காக கொத்தடிமைகளாக சிலோனுக்கு (இன்றைய இலங்கை) அழைத்து வரப்படுக்கிறார்கள். அப்போது, இலங்கையும் அடிமைப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது. சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இலங்கை மலையக தமிழரான முத்தையாவின் மகன், முரளிதரன் தமிழர் என்ற ஒரே காரணத்தால் கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படுகிறார். இருப்பினும் இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன் ரணதுங்க இவரின் திறமையை கண்டறிந்து இலங்கை கிரிக்கெட் அணியில் ஆடவைக்கிறார். ஆனாலும்அவரது பள்ளி மற்றும் கல்லூரி அளவில் அவருக்கு கிடைத்த பாராட்டுகள், ஆர்வம் உள்ள கிரிக்கெட்டில் ஆரம்பகாலத்தில் மட்டையை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் விளையாடுபவர்களுக்கு வாட்டர் பாட்டில் சப்ளை செய்கிற பணி செய்தது தொடங்கி சின்னச் சின்ன போட்டிகளில் கலந்துகொண்டு திறமை காட்டினாலும் தனது முதல் தொடரின் ஏமாற்றம், இங்கிலாந்தில் தோல்வியுடன் அணிக்கு திரும்பியது, உலக கோப்பை வெற்றி, சக்கிங் சர்ச்சை, கபில் தேவுடன் சந்திப்பு, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவர், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இறுதியாக, தனது இறுதிப் போட்டியில் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல் கல் என்று படம் முழுவதும் கோர்வையாக சொல்லப்பட்டுள்ளது.
நாயகன் ரோலில் முரளிதரனாக நடித்திருக்கும் மதுர் மிட்டலின் உடல் மொழி பிரமிப்பை கொடுத்துவிட்டது. ஏற்றுக் கொண்ட ரோலின் ஆழத்தை உளவாங்கி அப்படியே ஒத்துபோய் அசத்தி விட்டார். புறக்கணிப்பு, தோல்வி, நம்பிக்கை, சிங்களனா? தமிழனா என்ற குழப்பம் என பல உணர்வுகளை மிக சிறப்பாக தந்துள்ளார் மிட்டல்.. ஆனாலும் படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. தமிழ் நாட்டில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால் விலகியது இவரைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வந்ததும் உண்மை.
முத்தையா முரளியின் தந்தை ரோலில்வரும் வேல ராமமூர்த்தி, தார் கேரக்டரான ஜானகி சுரேஷ், குழந்தைப் பருவ முத்தையா முரளியாக சிறுவன் ரித்விக், இளவயது முத்தையா முரளியாக பிரித்வி, பயிற்சியாளராக சரத் லோகிதஸ்வா, பாட்டியாக வடிவுக்கரசி, பிரபாகரனாக நரேன், கிரிக்கெட் வீரர் மலிங்காவாக சத்யா என்ஜெ என முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் அந்தந்த ரோலாக மாறி படத்தை சில படி உயர்த்த பாடுப்பட்டுள்ளார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவாக நடித்திருப்பவரிலிருந்து மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள், அம்பயர்கள் என நடித்திருக்கும் அத்தனைப் பேரும் கதையோட்டத்தின் தூண்களாக அவதார மெடுத்திருப்பதை பாராட்டாமல் விட முடியாது. முத்தையா முரளிக்கு மனைவியாக மிகச்சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி கவனம் ஈர்க்கிறார் மஹிமா நம்பியார்.முன்னாள் வீரர்கள் ஷேன் வார்னே, ஜேசன் கில்லெப்ஸி மற்றும் கபில் தேவ் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கான நடிகர்கள் பக்கா பொருத்தம்.
கேமராமேன் ராஜசேகர் சிலோனின் செழுமையையும், மைதானங்களின் பதற்றத்தையும் தன் கேமராவில் பர்ஃபெக்டாக பதிவு செய்து கவர்கிறார். ஜிப்ரான் இசை ஓகே.
கிரிக்கெட் வீரர் படமென்றாலும் சிலோன் என்ற இலங்கை நாட்டின் சூழலை சொல்லி ஒரு தமிழரா..? இலங்கை சேர்ந்தவரா..? கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சாளரா..? சக்கரா..? என்ற உணர்வுப் போராட்டத்தை சரியாக வெளிப்படுத்தாமல் படத்தை ஆரம்பம் முதலே ஜம்ப்பிங் மாடலில் கொண்டு போனதால் படத்தில் மூழ்கி போகும் உணர்வை ஏற்படுத்தவில்லை என்பதே நிஜம். அதாவது நாயகர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறும்போது படம் பார்க்கு நாமும் வெற்றி பெற்றதாகவே எண்ணம் ஏற்படவில்லை என்பதும் சோகம். மேலும் கிளைமாக்சில் நாடகத் தன்மை..
அதிலும் நடந்த இலங்கைக் கலவரத்தில் ராஜபக்ஷே பங்கை கொஞ்சமும் தெரியாத விதத்தில் சொல்லி இருந்தாலும் இந்த 800 படம் சிறப்பாகவே இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்..
மொத்தத்தில் 800 – பயோபிக் படங்களில் இன்னொரு விக்கெட்!
மார்க் 3.5/5


