‘பொன் மகள் வந்தாள்’ படத்தில் 5 இயக்குனர்கள் நடிக்கிறாங்க!

‘பொன் மகள் வந்தாள்’ படத்தில் 5 இயக்குனர்கள் நடிக்கிறாங்க!

தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக 5 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘பொன் மகள் வந்தாள்’. நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக இருக்கும் இப்படம் ரிலீஸிற்கு முன்பாகவே அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் என தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களாக வலம் வந்த ஜாம்பவான்கள் நடித்துள்ளனர். இந்திய சினிமா மற்றும் தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே ஐந்து இயக்குனர்கள் நடிகர்களாக இணைந்திருப்பது இதுவே முதல் முறை.

நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்க எடுக்கும் முயற்சிகளைப் பற்றிய பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.

அவரது மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியே கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைத் தேடிப் பிடித்து சரி செய்கிறார். மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமான புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை எப்படி நிலைநாட்டுகிறார் என்பதே ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் கதையாகும். இதில் வெண்பா என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்தான் ஜோதிகா நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக பார்த்திபன் நடித்துள்ளார்.

தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வந்த படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ள ஜோதிகா, இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். உலகம் முழுவதிலும் 200 நாடுகளில் அமேசான் ப்ரைம் மூலம் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் இதுவேயாகும். மே 29 முதல் அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள் திரைப்படம் ரிலீஸாகிறது.

error: Content is protected !!