June 2, 2023

என் லுக், நிறம், பர்சனாலிட்டி, தொடர் தோல்விகள், அவமானங்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதலில் தனது பணியைத் தொடங்கினார். இதனைதொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் 2010 ஆம் ஆண்டு நீ தானா அவன் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து உயர்திரு 420, அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, சாமி 2, வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல் கலர் கொஞ்சம் கருப்பா இருந்தாலும் முழுக்க வெள்ளை மனசு கொண்ட இந்த நம்மூர் பொண்ணு திருச்சியில் நடந்த TEDx மேடையில், மாணவ, மாணவியர்களிடையே தன் வெற்றி பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்ட வீடியோவும், அப்போது பேசியதும் வைரலா பரவுது..

அந்த வீடியோ & பேச்சின் முழு விபரத்தை நம்ம கட்டிங் கண்ணையா ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வைக்கு வழங்கி இருக்கார்ர்

“”என்னோட லைட் ட்ராவல் வலி, வெற்றி, சந்தோஷம், காதல்னு எல்லாருக்கும் இருப்பது மாதிரியான கலவை வாழ்க்கைதான். அதிலும் லவ் இல்லாத பயணம் நல்ல பயணமா இருக்காது. எல்லோரும் ஒரு ரிலேஷன்ஷிப்பை கடந்துதான் வந்திருப்பாங்க.

கொஞ்சம் டீடெய்லா சொல்றதானா நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான். ஹவுஸிங் போர்டு ஏரியாவுல பிறந்து வளர்ந்த லோயர் மிடில் கிளாஸ் பொண்ணு. அப்பா, அம்மா, மூணு அண்ணன்கள், நான்னு எங்க குடும்பத்துல மொத்தம் ஆறு பேர். எனக்கு எட்டு வயசாகும் போது என் அப்பா இறந்துட்டார். அப்புறம், எங்களை அம்மாதான் படிக்க வெச்சு எங்களுக்கு அப்பாவாவும் இருந்து பார்த்துக்கிட்டாங்க. எங்க அம்மா பெருசா படிக்கலை. ஆனா, எங்களைக் காப்பாத்த அவ்வளவு போராடினாங்க. அவங்க ஒரு ஃபைட்டர். முதல்ல என் அம்மாவை பத்தி சொல்லிடறெ4என்.

பாம்பே (இப்போ மும்பை)க்குப் போய் பலவிதமான புடவைகளை வாங்கிட்டு வந்து இந்த சென்னைல ஒவ்வொரு வீடா போய் விப்பாங்க. இது போக, எல்.ஐ.சி ஏஜென்ட்டா இருந்தாங்க. எல்.ஐ.சி ஏஜென்ட்ஸ் எப்படி இருப்பாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இப்போ நான் ஒரு நடிகையாகிட்டேன். இப்போகூட என்கூட நடிக்கிறவங்களைப் பார்த்தா அவங்ககிட்ட ‘ஒரு எல்.ஐ.சி பாலிஸி போடுறீங்களா?’னு கேட்கிறதுண்டு. ‘ஏன்மா இப்படி பண்ற?’னு கேட்பேன். எங்களை சாப்பிடவைக்க, எங்களை வளர்க்க இது மாதிரி நிறைய பிஸினஸ் பண்ணாங்க. எங்க எல்லோரையும் பெரிய ஸ்கூல், காலேஜ்ல நல்லா படிக்க வெச்சாங்க. எனக்கு 12 வயது இருக்கும்போது என்னுடைய மூத்த அண்ணன் இறந்துட்டார். அவர் பெயர் ராகவேந்திரா. அப்போ அவர் ஒரு பெண்ணை காதலிச்சார். அண்ணன் இறந்தது தற்கொலையா கொலை யானு கூட எங்களுக்கு முழுமையா தெரியலை. எங்களால அண்ணன் இல்லாததை ஏத்துக்கவே முடியலை. என் இரண்டாவது அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சார். அவர் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, குடும்பத்தைக் காப்பாற்ற இன்னொருவருடைய சம்பளம் வருதுனு என் அம்மாவுக்கு அத்தனை சந்தோஷம். அவரும் ஒரு சாலை விபத்தில இறந்து எங்களை விட்டுப் போயிட்டார். மூத்த அண்ணன் இறந்த சோகத்தில இருந்து மீண்டு வந்த ஒரு சில வருஷத்துல மறுபடியும் இப்படியொரு சூழல். அம்மாவுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் கரைஞ்சுடுச்சு.

அப்போதான் குடும்பத்துக்கு நம்மலால முடிஞ்சதை செய்யணும்னு நினைச்சேன். நான் 11வது படிக்கும்போது முதன்முதல்ல ஒரு வேலைக்குப் போனேன். பெசன்ட் நகர்ல இருக்கிற ஒரு சூப்பர் மார்கெட்ல லான்ச் ஆகியிருந்த ஒரு சாஸை ரோட்டில் வரவங்கக்கிட்ட ‘மேடம் இந்த சாஸை டேஸ்ட் பண்ணிப் பாருங்க’, ‘ சார் இதைச் சாப்பிட்டிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க’ -னு மார்க்கெட்டிங் பண்ற வேலை அது. அதுக்கு எனக்கு ஒருநாளுக்கு 225 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்புறம், பர்த்டே பார்ட்டி மாதிரி நிறைய ஈவென்ட்ஸ் ஹோஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதுல 500, 1,000-னு சம்பளம் வரும். அப்படி மாசம் 5,000 ரூபாய் சம்பாதிச்சேன். ஆனா, அது எப்படி ஒரு குடும்பத்துக்குப் போதுமானதா இருக்கும்?

அப்பதான் சீரியல் வாய்ப்பு வந்தது. ஒரு நாளுக்கு 1,500 ரூபாய் தருவாங்க. ஆனா, மாசத்துல ஆறு நாள்கள்தான் வேலை இருக்கும். என் அம்மாகிட்ட, ‘சீரியல்ல லீட் ரோல் பண்றவங்களுக்கு 20,000 – 25,000 ரூபாய் கொடுக்குறாங்க. நாம என்ன பண்றது?’னு கேட்டேன். அம்மாதான் ‘சினிமாவுல அதிக சம்பளம் கிடைக்கும். மக்களுக்கு நாம நடிக்கிற படம் நல்லா ஓடிடுச்சுன்னா இன்னும் அதிக சம்பளம் கிடைக்கும்’னு சொன்னாங்க. அப்படித்தான் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். அதற்கு இடையில, டான்ஸ் கத்துக்கிட்டு ‘மானாட மயிலாட’ ரியாலிட்டி ஷோல கலந்துகிட்டு அதுல டைட்டில் ஜெயிச்சேன். அதை வெச்சு சினிமா சான்ஸ் தேடினேன். நான் நடிச்ச முதல் படம் ‘அவர்களும் இவர்களும்’. சரியா போகலை. தொடர்ந்து வாய்ப்பு தேடிக்கிட்டே இருந்தேன். மூணு வருஷத்துக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கலை. இதுக்கிடையிலே சினிமாவுல பாலியல் தொந்தரவு இருக்குனு கேள்விப்பட்டிருக்கோம். எல்லா துறையிலயும் அது இருக்கு. இது சினிமாங்கிறதுனால வெளியே தெரியுது.

இது மாதிரி பாலியல் தொந்தரவு மட்டுமல்ல என் நிறம், என் பர்சனாலிட்டினு எனக்கு நிறைய தடைகள் இருந்துச்சு. எனக்கு ஹீரோயின்கள் எல்லாம் டிரஸ் பண்ற மாதிரி பண்ணத் தெரியாது. நான் தமிழ் பேசுறேன்னு கூட என்னை அவங்க தவிர்த்திருக்கலாம். என் லுக், நிறம், பர்சனாலிட்டினு என் மேல நிறைய விமர்சனம் இருந்தன.  தொடர் தோல்விகள், அவமானங்கள் இப்படியே போயிட்டு இருந்தது. சினிமா கம்பெனிக்கு வாய்ப்பு தேடி போகறப்ப எனக்கு எப்படி ட்ரெஸ் பண்ணிட்டு போகணும்னு கூட தெரியாது; என்னோட கலர் என்னோட பர்சானாலிட்டி இதெல்லாம் பாத்து சில இயக்குநர்கள் மூஞ்சிக்கு நேராவே சொல்லியிருக்காங்க, ஒரு சில இயக்குநர்கள் என்கிட்ட, ‘நீங்கெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை. டைம் வேஸ்ட் பண்ணாதிங்க’னு சொன்னாங்க. ஒரு பெரிய இயக்குநர்கிட்ட, ‘சார் நான் சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். நல்ல கேரக்டர் சான்ஸ் இருந்தா சொல்லுங்க’னு சொன்னேன். அப்போ அவர் என்கிட்ட, ‘ஒரு ரோல் கொடுக்கிறோம். காமெடியனுக்கு ஜோடி’னு சொன்னாங்க. ‘இல்லை சார். எனக்கு லீட் கேரக்டர்கள்ல அல்லது முக்கியமான கேரக்டர்கள்ல நடிக்கணும்’னு சொன்னேன். அப்புறம், எனக்கு மூணு வருஷத்துக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கலை.

ஒரு வழியா ‘அட்டக்கத்தி’ படத்துல அமுதாங்கிற சின்ன கேரக்டர்ல நடிச்சேன். அந்த ரோல் என்னை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்தது. அப்புறம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘திருடன் போலீஸ்’ இந்தப் படங்கள்ல லீட் ரோல்ல நடிச்சேன். ‘காக்கா முட்டை’ படம்தான் என் வாழ்க்கையையே மாத்தி அமைச்சுது. குப்பத்துல நடக்குற கதை, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மான்னு யாரும் அந்தக் கதாபாத்திரத்துல நடிக்க விரும்பலை. எனக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. அம்மா கேரக்டர்ல நடிக்கிறதுல என்ன தப்பு? நாம நடிக்கலாம்னு தோணுச்சு, நடிச்சேன். அந்தப் படத்துடைய இயக்குநர் மணிகண்டன்தான் எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்தார். இப்போவரை நான் சிறந்த பர்ஃபார்மர் எல்லாம் கிடையாது. இன்னும் கத்துக்கிட்டுதான் இருக்கேன். என் நடிப்பை நான் திரையில பார்க்கும் போது எனக்கு எப்போவும் திருப்தியா இருந்ததில்லை. ஒவ்வொரு படத்துல இருந்தும் அவ்ளோ விஷயங்கள் கத்துக்கிட்டிருக்கேன். ‘காக்கா முட்டை’ படத்துக்காகப் பெரிய பெரிய இயக்குநர்கள், ஜாம்பவான்கள் எல்லோரும் பாராட்டினாங்க. ஆனா, எனக்கு அடுத்த ஒரு வருஷம் பட வாய்ப்பு வரலை. அது ஏன்னு எனக்கு புரியலை. படம் விமர்சன ரீதியா பாராட்டை வாங்கியிருக்கு, ஹிட், உலகம் முழுக்க நல்ல ரெஸ்பான்ஸ். ஆனாலும், எனக்கு பெரிய நடிகர்களோட நடிக்க வாய்ப்பு வரலை. ‘வடசென்னை’ல தனுஷ், ‘தர்மதுரை’ல விஜய்சேதுபதினு ஒரு சிலர்தான் என் திறமைக்கு மரியாதை கொடுத்து வாய்ப்பு கொடுத்தாங்க.

பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வரலை. நம்ம ஏன் ஒரு படத்துடைய ஹீரோவா இருக்கக் கூடாதுனு தோணுச்சு. அதுதான் ‘கனா’. எனக்கு அந்தப் படம் முதல்ல கிடைக்கலை. ‘நான் கிரிக்கெட் கத்துக்கிறேன். இந்தப் படத்துல நான் நடிக்கிறேன். என்னை நம்பிக் கொடுங்க. நிச்சயமா நான் இந்தக் கேரக்டருக்கு அர்த்தம் சேர்க்கிற மாதிரி நடிப்பேன்’னு இயக்குநர்கிட்ட கேட்டு அதுல நடிச்சேன். ஆறு மாசம் அதுக்காக கிரிக்கெட் விளையாட கத்துக்கிட்டேன். அந்தப் படம் எல்லாத்தையும் மாத்திச்சு. இதைத் தொடர்ந்து நிறைய ஹீரோயின் சென்ட்ரிக் கதைகள்ல நடிக்க வாய்ப்பு வருது. அதுல நான்தான் ஹீரோ. இது எல்லத்துக்கும் நான் என் மேல வெச்ச நம்பிக்கைதான் காரணம். எனக்கு ஆதரவா யாருமில்லை. நான் ஒருத்திதான்.

என்னோட எல்லா வெற்றிக்குமான காரணம் ஒரே ஒரு விஷயம்தான். நான் என்னை நம்பினேன். என்னை மட்டுமே நம்பினேன். எனக்கு யாரும் இல்லை சப்போர் பண்ணறதுக்கு. அதனால எனக்கு நான்தான் சப்போர்ட்னு முடிவு பண்ணேன். ஜெயிச்சேன்.நிச்சயம் இந்த பாதையில பல பிரச்சனைகளை கடந்து வந்தேன் . மொத்தத்துலே என் நிறம், பர்சனாலிட்டினு நிறைய விமர்சனங்களை சந்திச்சிருக்கேன். பாலியல் தொந்தரவு உட்பட. ஆனா, இதை எல்லாம் எப்படி கையாளணும்னு எனக்குத் தெரியும். யாராவது என்கிட்ட தவறா நடந்துக் கிட்டா, அவங்களுக்கு என்ன பதிலடி கொடுக்கணும்னும் தெரியும். அந்தத் தைரியம் எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கணும். எல்லா பொண்ணுங்களுக்கும் நான் சொல்றது என்னன்னா, உங்க பாதுகாப்பு உங்க கையிலதான் இருக்கு. சூப்பர் ஹீரோ மாதிரி யாரும் வரமாட்டாங்க. நாம எல்லோரும் நம்ம மேல நம்பிக்கை வெச்சாலே போதும். யாரையும் நம்பி இருக்காதீங்க. இவ்வளவு போராட்டங்களைக் கடந்து நானே வந்திருக்கேன்னா, எல்லோராலும் வர முடியும். இப்போ என்னுடைய வெற்றியை நான் அனுபவிக்கிறேன். இருந்தாலும் நான் இன்னும் நிறைய கத்துக்கணும்” அப்படீன்னு பேசி அப்ளாஷ் வாங்கி இருக்கு நம்ம கோலிவுட் மர்லின் மன்றோ ஐஸ்வர்யா ராஜேஷ்.