பிறக்கும்போதே நம் தலையில் பிரம்மன் என்ன எழுதி இருக்கிறானோ அதன்படிதான் அனைத்தும் நடக்கும்.. ஒருவேளை அதை நம் விருப்பத்துக்கு மாற்ற நினைத்தால் என்ன நடக்கும்..? பிரம்மா டாட் காம் படம் சொல்ல வருவதும் இதைத்தான்.

கோடீஸ்வரரான மொட்ட ராஜேந்திரன் நடத்தும் விளம்பர நிறுவனத்தில் உயர் பதவியில் சித்தார்த் விபினும் அவருக்கு அடுத்த பொறுப்பில் நகுலும் வேலைபார்க்கின்றனர். விளம்பர மாடலான ஆஷ்னா சவேரியை காதலிக்கும் நகுல், தனது குறைந்த பதவி, வருமானம் காரணமாக அதை சொல்லாமல் தடுமாறுகிறார்.

இந்தநிலையில் தனது பிறந்தநாளன்று கோயிலில் அர்ச்சனை செய்யப்போகும் நகுலுக்கு, நடை சாத்தப்போகும் சமயம் என்பதால் பிரம்மன் சந்நிதியில் வைத்து அர்ச்சனை செய்து தரும் அர்ச்சகர் பாக்யராஜ், பிரம்மனிடம் இன்று நீ கேட்டது கிடைக்கும் என கூறுகிறார். அதன்பின் பிரம்மா டாட் காமிலிருந்து பேஸ்புக் ரிக்வெஸ்ட் வர அதை ஒகே செய்கிறார் நகுல்.

இதை தொடர்ந்து நகுலின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரம்மா டாட் காம் மூலம் நகுலின் பேஸ்புக்கில் படமாக பதிவிடப்படுகிறது. பிரம்மன் வேலையை தொடங்கிவிட்டார் என்பதை உணரும் நகுல், தான் உயர் பதவிக்கு அதாவது சித்தார்த் விபின் இடத்திற்கு சென்றுவிட்டால் அதைவைத்து ஆஷ்னாவின் காதலை பெறலாம் என முடிவெடுத்து பேஸ்புக் மூலம் பிரம்மா தரும் ஆப்ஷனுக்கு சம்மதிக்கிறார்.

பிரம்மனின் வித்தை மூலமாக, சித்தார்த் விபின் பதவியில் நகுல் அமர்கிறார். முன்பு நகுல் இருந்த இடத்தில் தற்போது சித்தார்த் விபின் மாறுகிறார் ஆனால் ஏற்கனவே பிரம்மன் எழுதிவைத்தபடி கீழே இருக்கும் பதவியில் இருப்பவர் தானே ஆஷ்னாவை காதலிக்க வேண்டும்..? அதனால் நகுலே எதிர்பாராத விதமாக, ஆஷ்னா சவேரியிடம் சித்தார்த் விபின் தனது காதலை சொல்ல, ஆஷ்னாவும் அவரது காதலை ஏற்றுக்கொள்கிறார். மேலும் தங்கள் காதலை தடுக்க முயலும் நகுலின் மீது வெறுப்பும் ஆகிறார்.

யாருடைய காதலை பெற அவர் இப்படி ஆசைப்பட்டாரோ அதற்கே இப்போது ஆப்பு வைக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது.. இன்னொரு பக்கம் உயர் பதவியில் இருக்கும் நபர் தான் முதலாளி மொட்ட ராஜேந்திரனின் சுமாரான அழகுள்ள மகளை திருமணம் செய்யவேண்டும் என்கிற ஒப்பந்தம் முன்பே போடப்பட்டு இருப்பது நகுலுக்கு தெரியவர இன்னும் அதிர்ச்சியாகிறார்.

நகுலின் தலையெழுத்து திரும்பவும் மாற்றி எழுதப்பட்டதா..? ஆஷ்னாவின் காதலை அவரால் மீண்டும் பெற முடிந்ததா..? என்பது தான் மீதிப்படம்.

கதைச்சுருக்கத்தை படிக்கும்போதே தலைசுற்றுகிறது அல்லவா..? பிரச்சனையில்லை. படத்துடன் கவனமாக பயணிக்க முடிந்தால் அது சாதாரணமான விஷயம் தான். மேலும் இதற்குமுன் வெளியான ‘இன்று நேற்று நாளை’ படம் பார்த்தவர்களுக்கு அந்தப்படம் ஒரு கைடாக இருந்து உதவி செய்யும்.

நகுலுக்கு தோதான கதை தான். துருதுருவென புகுந்து விளையாடுகிறார் தான்.. ஆனாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் ஆகும் உணர்வு ஏற்படவே செய்கிறது. அவரது கேரக்டர் வடிவமைப்பு கூட காரணமாக இருக்கலாம்.. இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவுக்கு அமுல்பேபி சித்தார்த் விபின் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். இசைப்பணியும் அவருடையதே என்றாலும் பெரிதாக கவரவில்லை.

ஆஷ்னா சவேரிக்கு நகுல், சித்தார்த் விபின் இருவரையும் கொஞ்ச கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணவேண்டிய வேலை.. அதை சரியாக செய்திருக்கிறார். நீது சந்திரா நடிகையாகவே சில காட்சிகளில் வந்துபோகிறார். அவ்வளவுதான்.

நகுலின் நண்பராக வரும் ஜெகன் சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டினாலும் அவருடன் கூடவே ஒட்டிக்கொண்டு வரும் அவரது ‘டாவு’ க்யூட்டாக நம்மை கவர்கிறார். எறால் பிரியாணிக்கு எலுமிச்சை ஊறுகாயை தொட்டுக்கொள்ள வைத்தது போல படம் முழுதும் வளம் வரும் மொட்ட ராஜேந்திரனின் கெட்டப்பும் கேரக்டரும். சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது. அவரது மகளாக வருபவர் தான் படுத்தி எடுக்கிறார்.

இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற கதை என்பதால் திரைக்கதையில் இயக்குனர் புருஷ் விஜயகுமார் இன்னும் சில சுவாரஸ்யங்களை கூட்டி இருந்தால் வெகு கலாட்டாவாக இருந்திருக்கும்.

error: Content is protected !!