துபை ; பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து!
உலக பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் பைனல் தொடர் துபையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். இறுதிப்போட்டியில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை யாமாகுச்சியை எதிர்கொண்டார். முதல் செட்டில் தொடக்கத்தில் இருவரும் சரிசமமாக விளையாடி மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்த நிலையில் இறுதியில் சிந்துவே 21-15 என்ற கணக்கில் இந்த செட்டை கைப்பற்றினார்.
இதே முனைப்பில் சிந்து இரண்டாவது செட்டில் களமிறங்கினார். ஆனால், யாமாகுச்சி இந்த செட்டில் எழுச்சி கண்டு 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அதனால், தங்கத்தை உறுதி செய்யும் கடைசி செட்டில் விறுவிறுப்பு எகிறியது. கடைசி செட்டை முதலில் சிந்து 4-0 என புள்ளிகளில் முன்னிலை வகித்து ஆதிக்கம் செலுத்தினார். பின்னர், மீண்டும் எழுச்சி கண்ட யாமாகுச்சி 5-5 என சமநிலைக்கு வந்தார். இதே முனைப்பில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவிக்க கடைசி செட் பரபரப்பின் உச்சத்துக்கே சென்றது.
இறுதியில் சிந்து கடைசி செட்டில் 19-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், அவரால் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது. இருப்பினும் இறுதிப் போட்டி வரை முன்னேறியதால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பேட்மிண்டனின் முக்கிய தொடர்களில் சிந்து இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்தக்கத்துடன் திரும்புவது இது முதல்முறையல்ல. முன்னதாக, கடந்த ஆண்டு, ரியோ ஒலிம்பிக், இந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் தற்போது இந்த வரிசையில் உலக பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் பைனல் தொடர்.



