2ஜி ஊழல் வழக்கில் ஆகஸ்ட் 25- செப்.5-ம் தேதிக்குள் தீர்ப்பு!
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்கள் கேட்டதற்கு, டில்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி இன்று பதில் அளித்தார்.
![]() |
![]() |
அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம். அவ்வாறு வழங்க முடியாவிட்டால் அடுத்த 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டும், அமலாக்க பிரிவு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டும் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த வழக்கில் 154 சாட்சிகளை சி.பி.ஐ. விசாரணை செய்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி இறுதி வாதம் தொடங்கியது. 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முடிவடைந்தன.

கூடுதல் வாதங்கள் முடிவடைந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கலைஞர் தொலைக்காட்சி ஆகிய இரண்டு வழக்குகளிலும் வருகிற 15-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்ற நீதிபதி ஓ.பி. சைனி கடந்த ஏப்ரல் 26-ந் தேதி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் 2ஜி ஊழல் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி சைனியிடம் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்று வக்கீல்கள் சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதி ஆகஸ்ட் 25-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம். அவ்வாறு வழங்க முடியாவிட்டால் அடுத்த 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




