வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் குளிர்சாதன இருக்கை வகுப்பு கட்டணம் 25% குறைக்கப்படுகிறது – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
நம் நாட்டில் நூறாண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்திய பயணிகள் எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்களை விட அதிக வேகத்தில் 100 முதல் 700 கிலோமீட்டர் வரையான தூரத்தை கடக்க வந்தே பாரத் ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன . 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டத்தின் கீழ் 23 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற ‘வந்தே பாரத்’ உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், கட்டணங்களை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சகத்துடனும் அதிகாரிகள், ரயில் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ரயில் கட்டணத்தைக் குறைக்க மத்திய ரயில்வேத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்திய ரயில்வேயின் அனைத்து வகையான அதிவிரைவு சொகுசு ரயிலான வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வகுப்பு, சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிரிவுகளில் 25 சதவீதம் அளவுக்கு ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் பயணிக்கும் ரயில்களில் கட்டண சலுகை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு நடவடிக்கையானது உடனே அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கட்டண அறிவிப்பால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


