16 வயசு மைனர்களுக்கு டூ வீலர் லைசென்ஸ்! – மத்திய அரசு தகவல்!

16 வயசு மைனர்களுக்கு டூ வீலர் லைசென்ஸ்! – மத்திய அரசு தகவல்!

நாளுக்கு நாள் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதில் முக்கியமாக புள்ளி விவரத்தின்படி வாகன விபத்தில் இறப்பவர்கள் 21 வயதுக்கு உட்பட்ட மாணவர்களாக தான் உள்ளனர் என்று அண்மையில் ஒரு செய்தி வெளியான நிலையில் கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப் பட்டு வருகிறது. பதினெட்டு வயது பூர்த்தியடைந்த ஆணோ அல்லது பெண்ணோ ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்டிஓ அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. ஆனால் தற்போது கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர்கள் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளன. இநத வகை ஸ்கூட்டர்கள் சைக்கிளைப் போன்று இலகுவானதாகும்.

இதனிடையே 16 வயதுடையவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதி கோரி கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளு மன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திற்குட்பட்ட மின்சாரத் தால் இயங்கும் கியர் இல்லாத பைக், ஸ்கூட்டர்களை ஓட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயது பூர்த்தியடையாத பதின் பருவத்தினர் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது குறித்த நீண்ட கால பிரச்சனைக்கு இந்த மாற்றம் தீர்வு காணும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.