2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ரூ.3,97,495 கோடி! – பட்ஜெட் முழு விபரம்!

2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ரூ.3,97,495 கோடி! – பட்ஜெட் முழு விபரம்!

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்றும் 2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ரூ.3,97,495 கோடியாக இருக்கும் எனவும் இன்று தமிழக பட்ஜெட் உரையை வாசிக்கும்போது துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 2-ம் தேதி கவர்னர் பன்வாரி லால் புரோகித் உரையுடன் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 3-ம் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4ம் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 8-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இது ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட் ஆகும்.

இத்தனைக்கும் தமிழக சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படியே, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக, அவர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

சட்டசபயிலும் பட்ஜெட் அறிவிப்பை வாசிக்கும் முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிதியமைச்சர் ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார்.

பின்னர் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும். 2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ரூ.3,97,495 கோடியாக இருக்கும். 2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.16,315 கோடியாக குறையும். வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது அறிவித்தார்.

மேலும் இதுகுறித்து பட்ஜெட் தகவல் இதோ:

2019 -2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பற்றி இனி விளக்க விழைகிறேன்.

நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கு, திறன்மிக்க வரி நிருவாக அமைப்பு அவசியம் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. மாநிலத்தின் நிதி மேலாண்மையை மேம்படுத்தும் நோக்குடன் மின் ஆளுமை முயற்சிகளை இந்த அரசு பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறது. மாநில கருவூலத் துறை நடவடிக்கை களை மனிதவள தரவுகளுடனும், வரவு செலவுத் திட்டத்துடனும் ஒருங்கிணைத்து செயல் படுத்தும் பொருட்டு ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம்’ தொடங்கப் பட்டுள்ளது. இத்தகைய திட்டம் நாட்டிலேயே முதலாவதாக தமிழ்நாட்டில் தான் செயல்முறைக்கு வந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டம், 2019ம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் இத்திட்டம் முழுமையான கணினி வழியில் செயல்படுத்தப்பட உள்ளது.

‘முழுமையான தீர்வுத் திட்டம்’

பதிவுத் துறையில் இணையவழியில் பணிகளை மேற்கொள்ள ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்படுத் தப்படுகிறது. இம்மென்பொருள் மூலம் பத்திரப் பதிவுகள், மின்னணு முறை செலுத்துகைகள், இணையவழி சரிபார்த்தல், பல்வேறு நடவடிக்கைகளின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்ளுதல், இணையவழி கையொப்பம், சிறப்புக் குறியீட்டுடன் பதிவேடுகளை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இணையவழி மூலமே மேற்கொள்ளலாம். அதே போல் வரி செலுத்துபவர்களுடனும், வணிகர்களுடனும், இணையவழி மூலம் வணிகவரித்துறை நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, வரி செலுத்துவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் கணினி மூலம் செயல்படுத்துவதை, வணிகவரித் துறையால் செயல்படுத்தப்படும் ‘முழுமையான தீர்வுத் திட்டம்’ உறுதி செய்யும்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறை அமல்படுத்தியதால் ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருந்த குறைந்த வரி விதிப்பு அதிகாரங்களைக் குறைத்து, மாநிலங்கள் வரி வருவாய் ஈட்டும் திறனை மேலும் குறைத்துள்ளது. மேலும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறையின் கீழ் தொடர்ந்து குறைக்கப்பட்டு வரும் வரி விகிதங்கள், இணையதளத்தில் நமூனாக்களை தாக்கல் செய்வதில் நிலவும் சிக்கல்கள், ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரியாக வசூலிக்கப்பட்ட தொகையில் மாநில அரசின் பங்கை விடுவிப்பதிலும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் உறுதிசெய்யப்பட்ட இழப்பீட்டினை விடுவிப்பதிலும் மத்திய அரசு காட்டும் தாமதம் போன்றவை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறையின் கீழ் வரும் வரி வருவாய் வரவுகளை பெருமளவில் நம்பியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலைமைக்கு பெரும் சவாலை ஏற்படுத்துகிறது. வணிக வரி வருவாயில், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மதுபானப் பொருட்கள் விற்பனையின் மீதான வரி மற்றுமொரு முக்கியமான வருவாயாக உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, 2018- 2019 ஆம் ஆண்டிற்கான வணிகவரியின் வருவாய், திருத்த மதிப்பீடுகளில் 84,365.91 கோடி ரூபாயாகவும், 2019 -2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 96,177.14 கோடி ரூபாயாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை மையங்கள் 5,198 ஆக குறைப்பு

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த 7,896 சில்லறை மதுபான விற்பனை மையங்கள் 5,198 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளன. மாநில ஆயத்தீர்வைகளில் தற்போதுள்ள போக்கினைக் கருத்தில் கொண்டு, இதன் வருவாய் வரவினம் 2018- 2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 6,724.38 கோடி ரூபாயாகவும், 2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7,262.33 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் பெறப்படும் வருவாய் வரவினங்களில் நல்ல வளர்ச்சி காணப்படுவதால், 2018- 2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் பெறப்படும் வருவாய் 11,512.10 கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டுள்ளது. நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அல்லது மறுகட்டமைப்பு தொடர்பான சொத்துப் பரிமாற்றங்களுக்கான முத்திரைத் தீர்வை சொத்தின் சந்தை மதிப்பில் 2 சதவீதம் அல்லது பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் 0.6 சதவீதம், இதில் எது அதிகமோ அது நிர்ணயிக்கப்படும். அதேபோல, இத்தகைய பரிமாற்றங்களுக்கான பதிவுக் கட்டணம் அதிகபட்சமாக 30,000 ரூபாய் என நிர்ணயிக்கப்படும். இதன் மூலம், இத்தகைய பரிமாற்றங்களின் மீது செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் குறித்த தெளிவு ஏற்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு 2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் பெறப்படும் வருவாயாக 13,122.81 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2018 -2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை விட 2,187.14 கோடி ரூபாய் அதிகமாகும். 2018- 2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வாகனங்கள் மீதான வரி வருவாய் 5,918.82 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், 2019 -2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 6,510.70 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2018- 2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவினங்கள் 1,10,178.43 கோடி ரூபாயாக உயர்த்தி கணிக்கப்பட்டுள்ளதுடன், 2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,24,813.06 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2019 -2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 13,326.91 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில், தமிழ்நாட்டிற்கான பங்கு ஒன்பதாவது நிதிக்குழுவின் பரிந்துரையான 7.931 சதவீதத்தில் இருந்து, பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் படி 4.023 சதவீதமாக ஒவ்வொரு நிதிக் குழுவின் பரிந்துரைகளாலும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்துள்ளது. பதினான்காவது நிதிக்குழு காலத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுப் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்தபோதும், சேவை வரி மற்றும் ஏனைய வரிகளில் மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு, முறையே, 5.047 சதவீதத்திலிருந்து 4.104 சதவீதமாகவும், 4.969 சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு மட்டுமே மத்திய வரிப் பகிர்வில் 14வது நிதிக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்த ஆண்டில் 30 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை பெற்றது. மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர்வில், பதினைந்தாவது நிதிக் குழு நடுநிலையான, நியாயமான பரிந்துரைகளை மத்திய அரசிற்கு அளிக்கும் எனவும், கடந்த காலங்களில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி சரிசெய்யப்படும் எனவும் மாநில அரசு நம்பிக்கையுடன் உள்ளது. இக்காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, 2018 -2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், 30,638.87 கோடி ரூபாயாகவும், 2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 33,978.47 கோடி ரூபாயாகவும் மத்திய வரிகளில் பங்கு இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பின்னர், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது. அத்திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய அரசு மேற்கொண்ட மாற்றங்களால், மாநில அரசின் மீதான நிதிச் சுமை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய போக்குகளின் அடிப்படையிலும், மத்திய அரசு தனது 2019 2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் செய்த நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையிலும், 2019 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் 25,602.74 கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நிதிநிலைக் குறியீடுகள்

2018- 2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 1,80,618.71 கோடி ரூபாயாகவும், வருவாய்ச் செலவினங்கள் 1,99,937.73 கோடி ரூபாயாகவும் இருக்கும். இதன் விளைவாக, 2018-2019 ஆம் ஆண்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை 19,319.02 கோடி ரூபாயாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. 2019- 2020 ஆம் ஆண்டில், மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 1,97,721.17 கோடி ரூபாயாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வினால் ஏற்படும் நிதிச் சுமை, உதய் திட்டத்தால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் பொறுப்பு போன்றவை 2019 -2020 ஆம் ஆண்டிலும் தொடரும். இவற்றைத் தவிர, மின் மானியம், உணவு மானியம், சமூக நலத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியங்கள், வீட்டுவசதி போன்ற மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட பல்வேறு நலத் திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது. எனவே, மொத்த வருவாய்ச் செலவினங்கள் 2,12,035.93 கோடி ரூபாயாகவும், இதன் விளைவாக வருவாய்ப் பற்றாக்குறை 14,314.76 கோடி ரூபாயாகவும் இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், நீர்ப்பாசனம் மற்றும் மின் திட்டங்கள் போன்ற மூலதனச் செலவினங்களுக்கு இந்த அரசு எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்துள்ளது. மாநிலத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியமான பங்கை கருத்தில் கொண்டு, 2018 -2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், 26,191.98 கோடி ரூபாய் மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2019 -2020 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 31,251.21 கோடி ரூபாய் நிதியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு 2018- 2019 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டை விட 19.32 சதவீதம் கூடுதலாகும்.

தமிழ்நாடு, நிதி மேலாண்மை நெறிகளை வழுவாமல் பின்பற்றி வந்துள்ளதுடன், நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் போன்ற நிதிநிலைக் குறியீடுகளை வரையறைக்குள் பராமரித்து வருகிறது. 2018- 2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், நிதிப் பற்றாக்குறை விகிதம், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.85 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், மின் ஆளுமை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் போன்று அரசு மேற்கொண்டுள்ள இதர நிதி மேலாண்மை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு, 2019- 2020 ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2.56 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறைக்கு வரையறுக்கப்பட்ட மூன்று சதவீதத்திற்கு குறைவானதாகும்.

44,066.82 கோடி நிகர கடன்

2018 -2019 ஆம் ஆண்டில் இந்த அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனுமதிக்கப்பட்ட அளவான 47,350 கோடி ரூபாய்க்கும் குறைவான அளவிலேயே, அதாவது 44,066.82 கோடி ரூபாயை மட்டுமே நிகரக் கடனாகத் திரட்டி கடன் அளவைக் கட்டுப்படுத்தியுள்ளது. 2019 -2020 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நிகரக் கடன் அளவு 51,800 கோடி ரூபாயாக இருந்தாலும் 43,000 கோடி ரூபாய் அளவிலேயே நிகர கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று, நிகர நிலுவைக் கடன்கள் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இந்த நிலுவைக் கடன் அளவு 23.02 சதவீதமாக இருக்கும் என்பதால், அனுமதிக்கப்பட்ட 25 சதவீத அளவிற்கு உட்பட்டே கடன் அளவு இருக்கும்.

இந்த நிதிநிலை அறிக்கையின் இணைப்பாக இடைக்கால நிதி நிலவரத் திட்டம் இணைக்கப் பட்டுள்ளது.   இதனை நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாகக் கருதி அவையில் படிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை உயர்ந்து வந்துள்ளது. ‘உதய்’ திட்டத்தின் கீழ் மாநில அரசு ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 22,815 கோடி ரூபாய் கடன், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்தியது ஆகியவற்றுடன், வரிவருவாய் வரவில் ஏற்பட்ட தொய்வு, மத்திய அரசின் குறைவான நிதிப் பகிர்வு போன்ற காரணங்களே வருவாய்ப் பற்றாக்குறை உயர்ந்து வருவதற்கான காரணங்கள் ஆகும். சம்பளங்கள், ஓய்வூதியங்கள், வட்டி செலுத்துதல் ஆகிய பொறுப்புகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதுடன், மாநிலங்களிடம் இருந்த வரி விதிப்பு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்துவது சவாலாகவே உள்ளது. எனினும், வரும் ஆண்டுகளில், மாநிலம், உயர் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரிவருவாய் உயரும் என்பதாலும், ஊதிய உயர்வு வழங்கியதால் ஏற்பட்ட நிதிச் சுமை ஓரளவு சமன் செய்யப்படும் நிலையிலும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை, செலவினங்களின் சீரமைப்பிற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழு போன்ற நிதி நிலைமையை சரி செய்வதற்கான முயற்சிகளாலும், வருங்காலத்தில் நிதிநிலை பராமரிப்பில் உறுதித் தன்மை ஏற்பட்டு வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும், நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாக அரசு பராமரித்து வருவதன் மூலம், நிதி மேலாண்மையில் தமிழ்நாடு தன் உறுதித் தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. கடன் பெறுவதை முடிந்தவரை குறைப்பதன் மூலம் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடனளவை 25 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறை களையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுக்கும் அதேவேளையில், நிதி மேலாண்மையையும் உறுதியோடு பராமரிப்பதுடன், நிதிநிலைக் குறியீடுகளையும் வரையறைக்குள் பராமரிக்கும். எனவே, வருவாய்ப் பற்றாக் குறையைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு-செலவுத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள நிதிநிலை செயல் திட்டம், நீடித்த பொருளாதார வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியைப் பெறுவதற்கும் வழிவகையை ஏற்படுத்தும்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு

எடுத்த பணியின் தொடக்கத்தில் துன்பம் மிகுதியாக வந்தாலும், முடிவில் ஏற்படும் நன்மையைக் கருதி மனஉறுதியோடு செயல்பட்டு அதனைச் செய்து முடிக்க வேண்டும். இவை உலகப்புகழ் பெற்ற திருவள்ளுவரின் பொருளுள்ள வார்த்தைகளாகும். ‘போற்றுவோர் போற்றினாலும், தூற்றுவோர் தூற்றினாலும் அதை பொருட்படுத்தாமல் செயல்பட வேண்டும்’ என்ற அப்பர் அடிகளின் உண்மையான வார்த்தைகளுக்கிணங்க எத்தனை தடைகள் வந்தாலும், தாக்குதல்கள் வந்தாலும், எத்தனை விமர்சனங்களை நாம் எதிர் கொண்டாலும், உறுதியுடனும் அர்ப்பணிப்பு உணர்வோடும், மக்கள்நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதே நமது தலையாய கடமையாகும். சமச்சீரான சமூகப் பொருளாதார மேம்பாட்டை தமிழ்ச் சமுதாயம் பெறவும்; ஏழைகள் வாழ்வில் முன்னேறவும்; இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும்; நலிவடைந்த பிரிவினர் பொருளாதார முன்னேற்றமடைந்து வளமான வாழ்வை அவர்கள் பெறவும்; மாநிலம் அனைத்து துறைகளிலும் மேம்பட்டு செழிப்படையவும்; நமது புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அடிநின்று அனைத்து நலத்திட்டங்களையும் செம்மையாகச் செயல்படுத்தி, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதி ஏற்று, மக்கள் பணியைத் தொடருவோம்.

இந்த அரசின் முன்மாதிரியான முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்த அம்மாவின் இணையற்ற தொலை நோக்குப் பார்வையை இத்தருணத்தில் நான் நன்றிப்பெருக்குடன் நினைவு கூர்ந்திட விழைகிறேன். இந்த வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதில், சிறந்த வழிகாட்டியாக இன்றும் அவர் திகழ்கிறார். இந்த வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதில் முழுமனதுடன் ஆதரவளித்து, சிறந்த ஆலோசனைகளை வழங்கி, சமர்ப்பிக்க எனக்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கையை வடிவமைத்து தயாரிப்பதில் என்னுடன் அயராது பணியாற்றிய நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அவருடன் கடினமாகப் பணியாற்றிய நிதித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவரே, 2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Related Posts

error: Content is protected !!