வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு ரத்து!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு ரத்து!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க கோரி 4 பேரும் 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த மனுக்களை ஒன்பது ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு (2013) பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.இதனையடுத்து, கருணை மனுக்களை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தூக்கு தண்டனையை குறைக்க கோரும் உரிமை உள்ளது எனக் கூறி, நால்வர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்லது.
jan 21 -SUPREME_COURT
தமிழக–கர்நாடக எல்லையில் பாலாறு அருகே உள்ள சுரக்காய்மருவு என்ற இடத்தில் கடந்த 9.4.1993–ம் தேதி வீரப்பனும், கூட்டாளிகளும் வனத்துறை வாகனங்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தினார்கள்.அப்போது வனத்துறை மற்றும் போலீசார் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 124 பேர் மீது மைசூர் தடா நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2001–ம் ஆண்டு தடா நீதிமன்றம் 38 பேரை விடுதலை செய்தது. 72 பேரை ஜாமீனில் விடுவித்தது. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் வீரப்பன் கூட்டாளிகள் என கருதப்பட்ட ஏ.சைமன், எம்.பிலவேந்திரன், ஜே.ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக அதிகரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. கருணை மனு மீதான முடிவை காலதாமதமாக எடுத்ததால் தண்டனையை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனுவும் வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சீராய்வு மனுவை கடந்த 3–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் ரஞ்சன்கோக்காய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது.ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு சொன்ன பிறகு மீண்டும் அந்த வழக்கை விசாரிப்பது முறையானது அல்ல. முன் உதாரணமும் அல்ல என்று தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்தார்.

மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படலாம் என்ற நிலை நிலவியது.இதற்கிடையே வீரப்பன் கூட்டாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான இறுதி தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விவாதத்துக்குப்பின் கூறப்பட்டது.அப்போது 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. மேலும்,அந்த தீர்ப்பில் தூக்கு தண்டனை குறித்து சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான இந்த அமர்வின் தீர்ப்பில் ,”* கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்துவது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு, தக்க அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும்.

* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபர், மன நலம் குன்றியவராக இருந்தாலோ அல்லது அவர் மனச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கலாம்.

* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும், இதர கைதிகளையும் தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.

* தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

* தூக்கு தண்ட்னை கைதியின் கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த விபரம் குறித்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

* காலம் கடந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

* தூக்கு தண்டனை கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.”என்று சுப்ரீம் கோர்ட் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட சாத்தியம் உள்ளது என செய்தித் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

SC commutes death sentence of 15 convicts
***********************************************************
The Supreme Court on Tuesday commuted the death sentence of 15 death row convicts on grounds of delay in deciding their mercy plea and mental illness.