விஜயகாந்த் -முன்னாள் எதிர்கட்சித் தலைவரானார்!
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமு கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சியான திரா விட முன்னேற்ற கழகத்தைவிட (23 இடங்கள்) அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. விஜயகாந்த் 14-வது பேரவையின் எதிர்க்கட்சி தலைவரானார்.

இதையடுத்து அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் 8 தேமுதிக உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நிலக்கோட்டை புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி, அணைக்கட்டு பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. கலையரசுவும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பதவிவிலகல் கடிதத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் வழங்கினர்.
தற்போது, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரது ராஜினாமா கடிதமும் ஏற்கப்பட்டது. தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என்று சபாநாயகர் தனபால் இன்று அறிவித்து உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் தற்போது எந்தஒரு கட்சிக்கும் 24 உறுப்பினர்கள் கிடையாது, எனவே எந்தஒரு உறுப்பினரையும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கமுடியாது என்று தனபால் தெரிவித்து உள்ளார்.


