வாலிப வயோதிப’ அன்பர்களாகும் இளசுகள்!
இப்போதெல்லாம் டிவிக்க்ளிலும் நாளேடுகளிலும் ஆண்மைக் குறைவு தொடர்பான மருந்து, மாத்திரை விளம்பரங்கள் அதிகமாக வெளியாவதைக் காண முடிகிறது.முந்தைய காலங்களில் திருமணம் செய்திட காளையை அடக்குதல், இளவட்டக்கல்லை தூக்குதல் போன்றவற்றில் வெல்ல வேண்டும். காளையை அடக்கவும், இளவட்டக்கல்லை தூக்கவும் ஏதுவாக அன்றைய இளைஞர்கள் திடகாத்திரமாக இருந்தனர்.
அன்றாடம் காலையில் எழுந்து முந்தைய நாள் சாப்பாட்டில் ஊற்றிய தண்ணீரைக் குடித்துவிட்டு வயல் வேலைக்குச் சென்றனர். இரவு நேரங்களில்கூட எல்லோரும் சூடான உணவு சாப்பிடுவதில்லை. பெரும்பாலானோர் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றால் தயாரான உணவுகளையே உண்டனர்.

கிராமத்துப் பெண்களுக்கும் காலை முதல் மதியம் வரை உடலுழைப்பு இருந்ததால் திடகாத்திரமாக இருந்தனர். ஆண்களுக்கு ஈடாக வயல்களில் வேலைபார்க்கும் உடல்வாகு கொண்டவர்களாக இருந்தனர்.
கேழ்வரகு, கம்மங்கூழ்தான் உணவு என்றிருந்த நிலை மாறிவிட்டது. நகரங்களில் வசிப்பவர்கள் அவசரகதியில் செயல்பட வேண்டியுள்ளது. உணவு விடுதிகளில் சாப்பிடுவதுகூட நின்றவாறு சாப்பிடுகின்றனர். இத்தகைய அவசரம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பசிக்குச் சாப்பிடுவது போய், கையில் உள்ள காசுக்குச் சாப்பிடும் பழக்கம் வந்துள்ளது.
இன்றைய இளைஞர்களிடம் மது அருந்துதல், புகை பிடித்தல், போதைதரும் பாக்குகளைப் போடுதல் போன்ற பழக்கவழக்கங்கள் அதிகரித்து வருகிறது. உடல் ஆரோக்கியம் என்பது வாழ்நாளுடன் மட்டுமன்றி அறிவு, ஆண்மை போன்றவற்றுடனும் தொடர்புடையது. இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமையான ஒன்று.உடலுழைப்பைக் குறைத்து, உணவு முறைகளையும் மாற்றியதால்தான் இவ்வகையான மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வருகிறது.
உணவு முறையில் மாற்றமும், உடல் ஆரோக்கியம் மீதான அக்கறையும்தான் இதற்கு தீர்வாக அமையும். பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் இளவயதில் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல் ஆகியவற்றில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். நடப்பதைப் போல நல்ல உடல் பயிற்சி கிடையாது. குறுகிய தூரங்களுக்குக் கூட ஆட்டோ, பஸ் பிடிப்பதை விட்டு நடக்க வேண்டும். பச்சைத் தண்ணியில் குளிப்பது, கிடைக்கும் காய்கறி, பழங்களையெல்லாம் சாப்பிடுவது, தினமும் 2 மணி நேரம் ஏதேனும் ஒரு விளையாட்டை வீதியில் அல்லது மைதானங்களில் விளையாடுவது என்று பழக்கப்படுத்திக் கொண்டால்தான் இளைஞர்கள் இளைஞர்களாக இருக்க முடியும். இல்லாவிட்டால் “வாலிப வயோதிப’ அன்பர்களாக வேண்டியதுதான்…


