மே 31-ந் தேதிக்குள் ஒரே நாளில் தேர்தல்! -தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்காக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் அதிகாரிகள் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் காரில் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர். புதுச்சேரி பூரணாங் குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர்களை புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு சந்தித்து பேசினார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் தொடர்பாக அங்குள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியும், தேர்தல் கமிஷனர்களும் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு தலைமைச் செயலாளர் மனோஜ்பரிதா, தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, போலீஸ் ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன், கலெக்டர்கள் சுந்தரவடிவேலு, வல்லவன் மற்றும் வருமான வரித்துறை ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரி சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிகாரிகளையும், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினோம். அரசியல் கட்சி பிரதிநிதிகளில் பெரும் பாலானவர்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த ஒத்துழைப்பதாக அரசியல் கட்சியினர் உறுதி அளித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாகவும் புகார்கள் தெரிவித் தனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் இப்போதே வழங்கப்படுவதாக புகார்கள் தெரிவித்த னர். இதுகுறித்து வருமான வரித்துறையினரிடம் தெரிவித்து உள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர் கள் அறியும் வகையில், 20 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் உருளையன்பேட்டை, உழவர்கரை, காரைக் கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தேர்தலையொட்டி நிறைய பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பறக்கும் படைகளுக்கு ஜி.பி.எஸ். வசதி செய்து தரப்படும். பணம் கொடுத்து செய்திகள் பிரசுரிக்கப்படுகிறதா? என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் அனைத்து கட்சியினருக்கும் பொதுவாக செயல்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மே 31-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.”இவ்வாறு கூறினார்.
பின்னர் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் புதுச்சேரியில் இருந்து சென்னை வந்தனர். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி யுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேற்று மதியம் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு மாலையில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 9 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது, சட்டசபை தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிக்க அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தேர்தல் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.


