மனிதர்களை முடக்கி போட்டு விட்ட கணினியுகம்!

மனிதர்களை முடக்கி போட்டு விட்ட கணினியுகம்!

இன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்னணு சாதனங்கள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவை இல்லாத மனித வாழ்வை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டன.

காடுகளிலும், மலைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் சைகைகளின் மூலமும், ஓசைகளின் மூலமும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டான். இதுவே தகவல் தொழில்நுட்பத்தின் முதல் படி. அன்று தொடங்கிய இதன் வளர்ச்சி, இன்று பல்வேறு துறைகளிலும் தன் விழுதுகளைப் பாய்ச்சி, உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும், அதை அடுத்த நொடியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி, உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது.
sep 25 - tec addict
அதிலும் இன்று செல்போனும், கணினியும் இல்லாத வீடே இல்லை. இவையிரண்டும் இல்லாவிட்டால் மனித குலத்தின் செயல்பாடுகளே முடங்கிவிடும் என்பதே இன்றைய வாழ்க்கை முறை.

கோடிக்கணக்கான ரூபாய்களை வரவு – செலவு செய்யும் வங்கிகள் துவங்கி, ஆயிரக்கணக்கான பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அழைத்துச்செல்லும் ரயில் போக்குவரத்து, வியாபாரம், கல்வி, மருத்துவம் என கணினி கால் பதிக்காத துறையே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கல்வித்துறையில் கணினி பயிலும் மாணவர்கள் மட்டுமே கையாளும் கணினிகளை, இன்று அனைத்துப் பிரிவு பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் அரசே அதனை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இன்று நாட்டில் நடைபெறும் பெரும்பாலான கொலை, கொள்ளைச் சம்பவங்களில் போலீஸார் துப்புதுலக்கி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு செல்போன் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் பயன்படுகின்றன.

சுனாமி, புயல், வெள்ளம், கனமழை என அனைத்து வகையான இயற்கைச் சீற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நம்மைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

மருத்துவத் துறையிலும் முன்புபோல உடலைக் கிழித்து செய்யும் அறுவை சிகிச்சைகளுக்குப் பதிலாக உடலில் ஒரே ஒரு துளை போட்டு அத் துளையின் வழியே உடல் உள்ளுறுப்புகளைப் பார்த்து செய்யும் அறுவைச் சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. மூளையையும், உடல் உள் உறுப்புகளையும் பல கோணங்களில் படம்பிடித்துக் காட்டக் கூடிய நவீன அறிவியல், மனிதன் முழுமையாகக் கணினிமயமாகி விட்டதைத்தான் காட்டுகிறது.

இவ்வாறு மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட கணினி யுகம் பல்வேறு குறைகளையும், தீமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எந்தவொரு கண்டுபிடிப்பையும் நன்மைக்காகப் பயன்படுத்துவதும், தீமைக்காகப் பயன்படுத்துவதும் நம் கையில்தானே இருக்கிறது?

அதில் மிக முக்கியமான பிரச்னை, பெருகிவரும் “சைபர் கிரைம்’ என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் தொடர்பானதாகும். வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை இணையதளம் வழியாகத் திருடுவது, மற்ற நிறுவனங்கள் மற்றும் அரசின் தகவல்களைத் திருடுவது, ரயில்கள் மற்றும் கோயில் போன்ற இடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, பெண்களுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்புவது என பெருகிவரும் “சைபர்’ குற்றங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

கணிசமான இளைஞர்கள் இணையத் தேடல்களில் சினிமா, கிரிக்கெட் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். நண்பர்களுடன் வெட்டியாக அரட்டை அடிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஆக்கப்பூர்வமான அறிவுத் தேடல்கள் மேற்கொள்வோர் மிகமிகக் குறைவு.

பெருகிவரும் மக்கள்தொகை, வேலையில்லாத் திண்டாட்டத்தில் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வாழ்வை முன்னேற்றிக் கொள்ள இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டுமே தவிர, தங்களின் ஆற்றலை இப்படி வீணான விஷயங்களில் விரயமாக்கக் கூடாது.

அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியக் கணினியியல் வல்லுநர்களை நாம் மீண்டும் நம் நாட்டுக்கு அழைத்துக் கொண்டால், அந்த நாடுகளின் இயக்கமே கணிசமாக நின்றுபோகுமளவுக்கு இந்தியர்களின் மூளைகளே அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன. சுமார் 35 சதவீதத்துக்கும் மேலான இந்தியர்கள் வெளிநாடுகளில் கணினித் துறையில் பணியாற்றி வருகின்றனர் என்றால், நமது திறமையின் அளவை நாமே எடை போட்டுக் கொள்ளலாம்.

பாலை உறிஞ்சி, நீரை ஒதுக்கும் அன்னப் பறவைபோல நன்மையைப் பயன்படுத்தி, தீயவற்றை நீக்கும் மனப்பக்குவம் நம் அனைவருக்கும் வந்தால்தான், முன்னேற்றம் என்பது சாத்தியப்படும்.

இராம. பரணீதரன்

Related Posts

error: Content is protected !!