பொது நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் மாடு படம்! ஜம்முவில் காமெடி!
ஒரு மாட்டுக்கு பொது நுழைவுத் எழுத, தேர்வு வாரியம் தேர்வு ஹால் டிக்கெட் அனுப்பியுள்ள கூத்து நம்ம ஜம்மு காஷ்மீரில் அரங்கேறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான தொழில்முறை பொது நுழைவுத் தேர்வு வரும் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. மாநில அரசின் தொழில்முறை நுழைவுத் தேர்வு வாரியம் நடத்த உள்ள இந்த தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பி, தேர்வு கட்டணத்தை செலுத்த முடியும்.
அந்த வகையில், விண்ணப்பித்தவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதனை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில்தான், ஒரு மாட்டுக்கு ஹால்டிக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது. மாட்டின் பெயர் கசிர் காவ் (பிரவுன் நிற மாடு) என்றும் அதன் தந்தை பெயர் குரா தந்த் (சிவப்பு நிற காளை) என்றும் கு றிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிறந்த தேதி, விண்ணப்ப படிவ எண், ரோல் நம்பர் போன்ற விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் நுழைவுத் தேர்வுக்கான தேர்வு கட்டணும் செலுத்தப்பட்டுள்ளது.
புகைப்படம் ஒட்ட வேண்டிய இடத்தில் மாட்டின் புகைப்படமும், கையெழுத்திட வேண்டிய இடத்தில் மாட்டின் வால் பகுதியும் அச்சிடப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி நடக்கும் தேர்வுக்கு, பெமினாவில் உள்ள அரசு கல்லூரியில் 5ம் நம்பர் அறையில், கசிர் கவ் மாட்டுக்கு இருக்கையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் மாட்டின் ஹால்டிக்கெட்டை பதிவு செய்து, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி செய்தி தொடர்பாளர் ஜூனைத் அசிம் மட்டு தனது ட்விட்டர் கணக்கில் மாட்டின் ஹால்டிக்கெட்டை பதிவேற்றம் செய்து, ‘ஜம்மு காஷ்மீர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இந்த ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளேன். கல்வி அமைச்சர் நயீம் அக்தர் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்த மாடுகளுக்கு கூட பாடம் கற்றுத்தரும் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறாரா?’ என கேலி செய்துள்ளார்.
அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்வில் பாஸ் ஆக கசிர் காவ்வுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கசிர் காவ் தேர்வு எழுத வருவதை பார்க்க மிகவும் அவலுடன் இருக்கிறேன்’ என கூறி உள்ளார்.இதே போல பொதுமக்கள் பலரும் தேர்வு வாரியத்தின் அலட்சியப் போக்கை கடுமையாக கண்டித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து தேர்வு கட்டுப்பாட்டாளர் பரூக் அகமது மிர் கூறுகையில், ‘இது யாரோ செய்துள்ள குறும்பு செயலாகும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதனால், யாரோ சிலர், மாட்டின் பெயரில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். மனித முகத்தையும், மாட்டு முகத்தையும் வேறுபடுத்தக்கூடிய அளவுக்கு தொழில்நுட்ப வசதியில்லை’ என்றார்.
விண்ணப்படிவத்தில் பரூக்கின் கையெழுத்திடப்பட்டிப்பது குறித்து அவர் கூறுகையில், ‘அந்த கையெழுத்தை நான் போடவில்லை. அதுவும் கணினி மூலம் அச்சிடப்படுவதாகும். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கணினி ஐபி முகவரி மூலம் இந்த விண்ணப்பத்தை அனுப்பியவர் விரைவில் கைது செய்யப்படுவார். தேர்வுத்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே செய்துள்ள காரியம் இது’ என்றார்.


