பிரிட்டன் சிட்டிசனான ராகுல் எம்.பி. போஸ்ட்டை பறிக்கோணும்1 – சு. சுவாமி ஆவேசம்

பிரிட்டன் சிட்டிசனான ராகுல் எம்.பி. போஸ்ட்டை பறிக்கோணும்1 – சு. சுவாமி ஆவேசம்

”பிரிட்டனில் தனியார் நிறுவனம் தொடங்க அந்நாட்டு குடிமகன் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செயல்பட்டுள்ளார்..இதன் மூலம் மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ராகுல் ஏமாற்றியுள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை பறிக்க வேண்டும்:என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.
ssamy nov 17
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் விவரித்து பேசிய போது, “லண்டனில் “பேக்ஆப்ஸ்’ (BACKOPS) என்ற தனியார் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான படிவத்தில் தன்னை பிரிட்டன் குடிமகன் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் ராகுல் காந்தியின் பிறந்த தினம் 1970, ஜூன் 19 என சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவை இணையதளத்தில் உள்ள ராகுல் காந்தியின் பிறந்த நாளும் இந்த தேதியும் ஒத்துப்போகிறது. ஆனால், குடிமகன் என்ற பகுதியில் “இந்தியர்’ என்பதற்குப் பதிலாக “பிரிட்டன் குடிமகனாக’ ராகுல் தன்னைக் குறிப்பிட்டுள்ளார். 2003, ஆகஸ்ட் 21 முதல் 2009, பிப்ரவரி 17 வரை அந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. 2005, அக்டோபர் 10-ஆம் தேதி அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கில் ராகுல் காந்தியை அதன் இயக்குநர் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் சட்டம் இரட்டை குடியுரிமையை அனுமதிக்கிறது. ஆனால், இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பது சட்டவிரோத செயல். அந்த வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ராகுல் மீறியுள்ளார். பிரிட்டன் குடிமகனாக தன்னை பிரிட்டனில் அடையாளப்படுத்திக் கொண்டே, இந்தியாவில் நடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியக் குடிமகன் என்று குறிப்பிட்டு மக்களவை உறுப்பினராகியுள்ளார். இதன் மூலம் மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ராகுல் ஏமாற்றியுள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை பறிக்க வேண்டும்.

சுவிட்ஸர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் பிக்டெட் (PICK TET) வங்கி உள்ளது. அதில் கணக்கு வைத்துள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் கணக்கில் காட்டாத பணத்தை சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைத்துள்ளார். மத்தியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது பதவிக்காலம் முடிவடையும் முன்பாக, இந்தியாவில் பிக்டெட் வங்கி அதன் கிளையை நிறுவ உதவியுள்ளார். இதன் மூலம் ராகுலின் மோசடிக்கு சிதம்பரமும் ஆதரவாக இருந்துள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டின்போது அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ரொக்கத்துடன் ராகுல் காந்தி சென்றார். அப்போது அங்குள்ள விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தினர். இதையடுத்து, ஜூரிச் நகரில் உள்ள பிக்டெட் வங்கியில் இருந்து அந்தப் பணத்தைக் கொண்டு வருவதாக ராகுல் கூறி சில ஆவணங்களைக் காட்டியுள்ளார்.

இந்த விஷயத்தில் துரதிருஷ்டவசமாக மத்தியில் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தலையிட்டு ராகுல் நாடு திரும்ப உதவினார். இது பற்றிய விவரங்களும் ஆவணக் குறிப்புகளும் பிரதமர் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு ராகுலின் இந்திய குடியுரிமையைப் பறிக்கவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். ராகுல் மீதான எனது புகாருக்கு முகாந்திரம் இருந்தால் உடனடியாக அவரது மக்களவை உறுப்பினர் பதவியைப் பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரை கேட்டுக் கொண்டேன் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

காங்கிரஸ் மறுப்பு: இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் புகார் அடிப்படையற்றது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன் தெரிவித்தார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், “சொந்தக் கட்சியில் ஓரங்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க இது போன்ற புகார்களைக் கூறுவது சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கமாகி விட்டது. அவரது குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி பொருள்படுத்தவில்லை’ என்றார்.