பன்னாட்டு பூனைகள நாள்!

பன்னாட்டு பூனைகள நாள்!

செல்லப்பிராணிகள் என்றாலே நம் நினைவிற்கு வருவது நாய்கள் தான். ஆனால், உண்மையில் உலகிலேயே அதிகமாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணி பூனை தான். பூனைகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன. இந்த நீண்ட பயணத்தின் நினைவாகவும், பூனைகளின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தவும் ஆகஸ்ட் 8ஆம் நாள் பன்னாட்டு பூனை நாள் (International Cat Day)ஆக கொண்டாடப்படுகிறது.

பூனைகளின் வரலாறு

பூனைகள் முதன்முதலில் ஆப்பிரிக்கர்களால் பழக்கப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில், தானியக் கிடங்குகளில் எலிகள் பெருகியதால், அவற்றை கட்டுப்படுத்தவே பூனைகள் வளர்க்கப்பட்டன. நாளடைவில், பூனைகளின் குணாதிசயங்களால் கவரப்பட்டு, மனிதர்கள் அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்கத் தொடங்கினர்.

பண்டைய எகிப்தியர்கள் பூனைகளை தெய்வமாக வழிபட்டனர். அவர்கள் பூனைகளை தங்கள் வீடுகளில் வைத்துப் பாதுகாத்து, இறந்த பூனைகளுக்கும் பிரமிடுகள் கட்டியுள்ளனர். எகிப்திய புராணங்களில், பூனைகள் இறப்புக்கு பிந்தைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆற்றல் கொண்டவையாக நம்பப்பட்டன. பூனைகளைக் கடத்தி வெளிநாட்டிற்கு விற்றால், மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் பூனை இறந்தால், ஆண்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் புருவங்களை மழித்துக்கொள்வார்கள்.

பூனைகளின் வகைகள்

பூனைகளில் பல வகையான இனங்கள் உள்ளன. ஒவ்வொரு இனத்திற்கும் தனிப்பட்ட குணாதிசயங்களும், தோற்றமும் உண்டு. சில பிரபலமான பூனை இனங்கள்:

  • பார்சியன் (Persian): மென்மையான நீண்ட உரோமங்களையும், அமைதியான இயல்பையும் கொண்டது.
  • சியாமீஸ் (Siamese): நீல நிறக் கண்களையும், கருமையான உடலின் சில பகுதிகளையும் கொண்டது. மிகவும் சுறுசுறுப்பானது.
  • மெயின் கூன் (Maine Coon): இது மிகப்பெரிய பூனை இனங்களில் ஒன்று. நீண்ட உரோமங்களும், அடர்த்தியான வாலையும் கொண்டது.
  • பிரிட்டிஷ் ஷார்ட்ஹேர் (British Shorthair): அடர்த்தியான உரோமத்தையும், வட்டமான முகத்தையும் கொண்டது. மிகவும் அமைதியான இயல்புடையது.

பூனைகளின் சிறப்பு குணாதிசயங்கள்

பூனைகளுக்கு சில தனித்துவமான திறன்கள் உள்ளன. அவை:

  • இரவில் பார்க்கும் திறன்: பூனைகளின் கண்கள் இரவில் மிகவும் தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டது.
  • வேட்டையாடும் குணம்: பூனைகள் இயற்கையாகவே சிறந்த வேட்டைக்காரர்கள். சிறு விலங்குகளை எளிதாகப் பிடிக்கும் திறன் கொண்டவை.
  • சத்தம் எழுப்பும் விதம்: பூனைகள் பொதுவாக பலவிதமான ஒலிகளை எழுப்பும். “மியாவ்” என்ற சத்தம், “பூர்” (Purr) என்ற அதிர்வு ஒலி, மற்றும் “ஹிஸ்” (Hiss) போன்ற ஒலிகள் மூலம் அதன் மனநிலையை வெளிப்படுத்தும்.பூனைகளின் அதிக அளவிலான சத்த அதிர்வுகள் 64 கிலோ ஹேர்ட்ஸ்.
  • தூங்கும் நேரம் அதிகம்:பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33 முள்ளந்தண்டு எலும்புகள் இருக்கும்). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் இருக்கின்றன.  நாள்தோறும் பூனைகள் 12 முதல் 16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 முதல் 39 செல்சியசு (101 முதல் 102.2 பாரன்ஹீட்) வரைக் காணப்படும். மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும்.

இந்திய மக்களிடயே இருக்கும் பூனையை பற்றிய பல நம்பிக்கைகள்:

சாம்பல் நிற பூனை அதிர்ஷ்டத்தின் அடையாளம். ஒரு வீட்டில் கருப்பு பூனை நுழைகிறது என்றால், அது அதிர்ஷ்டம். நீங்கள் வெளியே பயணம் கிளம்பும் போது, இடது புறமாக பூனை போனால், அது நல்ல சகுனம். வீட்டினுள் பூனை குட்டிகள் போட்டால், அந்தக் குடும்பத்தலைவருக்கு செல்வம் சேரும். அந்த வீட்டில் தீய சக்திகள் நுழையாது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒருவரை, பூனை பின் தொடர்ந்து சென்றால், அது அந்தக் குடும்பத்துக்கு மிகுந்த செல்வத்தைக் கொண்டுவரும். ஒரு வீட்டில் பூனை இறந்தால், அது அந்த வீட்டுக்கு ஆகாது. பூனை தன் ஒரு காதை மூன்று முறை நக்கினால், வீட்டுக்கு விருந்தினர் வருவார். மூன்று கருப்பு பூனைகளை ஒன்றாக கண்டால், அது மிகுந்த அதிர்ஷ்டமாகும் என்பது போன்ற பல நம்பிக்கைகள் இந்திய மக்களிடம் இருக்கின்றன.

நீங்கள் ஒரு பூனையை தத்தெடுத்தால், அது உங்களுக்கு ஒரு சிறந்த துணையாகவும், உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு நல்ல நண்பனாகவும் அமையும்.

தனுஜா

Related Posts