‘காத்துவாக்குல ஒரு காதல்’ -விமர்சனம்!
டைரக்டர் சுப்பிரமணியம் சிவாவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த மாஸ் ரவி என்பவே இயக்கத்தில், அவரே கதாநாயகனாக நடித்திருக்கும் “காத்துவாக்குல ஒரு காதல்” திரைப்படத்தின் விமர்சனம்தான் இதோ:
கதைச் சுருக்கம்
அடி, தடி, வெட்டுக் குத்துதான் அதிகம் என்பதால் வடசென்னைதான் களம் . சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, மேனாக்ஸா உள்ளிட்ட லோக்கல் தாதாக்கள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருக்க, மாஸ் ரவி ரொம்ப நல்லவரான தாதா (?) வாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்.இன்னொரு பக்கம் அதே மாஸ் ரவி அப்பாவி ஜீவாவாக இருக்க அவரை நாயகி லட்சுமிப்ரியா விரட்டி விரட்டிக் காதலித்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை பிளாஷ்பேக் கதையோ என்று நம்மை எதிர்பார்க்க வைத்து அத்துடன் முதல் பாதி முடிகிறது. இரண்டாவது பாதியில் லட்சுமிப்ரியா ஜீவா வாக இருக்கும் ரவியைத் தேடி அலைந்து கொண்டிருக்க, மாஸ் ரொம்ப மாஸாக வளர்ந்து விட்டிருக்கிறார். அவரைப் போட்டுத்தள்ள எஞ்சியிருக்கும் தாதாவான சாய் தீனா முயன்று கொண்டிருக்கிறார். தெல்லாம் எப்படி முடிவுக்கு வந்தன என்பதுதான் முழுப்படம் சொல்லும் கதை.
நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்
- மாஸ் ரவி: இயக்கி, நடித்திருக்கும் ரவி, இரண்டு விதமான கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கிறார். மென்மையான காதலன், அதிரடியான ரவுடி என இருவேறு கெட்டப்புகளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, தான் ஒரு ‘மாஸ்’ என்பதை நிரூபித்திருக்கிறார்.
- லட்சுமி பிரியா: லட்சுமி பிரியா பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையாக அழகாக இருக்கிறார். காதலியாக உருகும் காட்சிகளில் அவருடைய வலிமையான நடிப்பு, ரசிகர்களின் மனதில் எளிதாக இடம்பிடித்துவிடுகிறது.
- வில்லன்கள்: சூப்பர் சுப்பராயன் மற்றும் சாய் தீனா ஆகியோரின் நடிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் அவர்கள் எரிச்சலூட்டவும் செய்கிறார்கள்.
- காமெடி: ஆதித்யா பாஸ்கர் மற்றும் தங்கதுரையின் காமெடி, கவுண்டமணி-செந்தில் அளவுக்கு இல்லை என்றாலும், சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
- இசை: ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் சராசரியாக இருந்தாலும், தேவா குரலில் ஒலிக்கும் ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
- ஒளிப்பதிவு: ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியன் ஆகியோரின் ஒளிப்பதிவு, காட்சிகளைத் தெளிவாகவும், கதாநாயகனின் வித்தியாசமான தோற்றங்களை அழகாகவும் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
படத்தின் பலம் மற்றும் பலவீனம்
முதல் பாதியில் வரும் காதல் மற்றும் ரவுடிகள் மோதல்கள், கதைக்கு பெரிய அளவில் உதவாமல் போவது ஒரு பலவீனம். ஆனால், இரண்டாம் பாதியில் வரும் எதிர்பாராத திருப்பங்களும், அதற்கான விளக்கங்களும் இந்தப் பலவீனத்தை ஓரளவு மறைத்து, படத்தை நகர்த்திச் செல்கின்றன.
மொத்தத்தில், “காத்துவாக்குல ஒரு காதல்” – காதலும் அடிதடி களேபரமும் கலந்த ஒரு சராசரி திரைப்படம்.
மார்க்: 2.5/5


