நான் அறிவிக்காமலேயே ஸ்டாலின் தலைவரா ஆயிட்டாரே! – கருணாநிதி பெருமிதம்

நான் அறிவிக்காமலேயே  ஸ்டாலின் தலைவரா ஆயிட்டாரே! – கருணாநிதி பெருமிதம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “மற்ற அரசியல் கட்சிகளுக்கு எப்படியோ; தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜ.க., எந்நாளும் ஒரு அச்சுறுத்தலாக அமைவதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு.க. ஆரம்பக் காலந்தொட்டு, ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகவே இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்ற இந்த 16 மாதங்களில், ஏராளமாக பயணம் செய்திருக்கிறார். நிறைய பேசியிருக்கிறார். நரேந்திரமோடியின் அமைச்சரவையிலும் பா.ஜ.க.விலும் உள்ளவர்கள், அவருடைய பேச்சை கேட்டு நடக்கிறார்களா என்பதே சந்தேகம் தான். ஏனென்றால் அவர்களின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அப்படித்தான் உள்ளன.
mk stlain nov 4
பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் மனோபாவத்திற்கு பதிலளித்திடும் வகையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் நடைமுறைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவே கருதுகிறேன். பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையில் காங்கிரஸ் கட்சி பல நிகழ்வுகளில் நடந்துகொள்வதை நியாயப்படுத்திட முடியுமா அல்லது முடியாதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விட, பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, பாராளுமன்றம் எவ்விதத் தடங்கலுமின்றி நடக்க வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டி ஒத்துழைத்தது என்பதை எண்ணிப்பார்த்தால், இந்திய அரசியல் எந்தத் திசை நோக்கிப் பயணித்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்வது, ஜனநாயகத்தையே முடமாக்குவதற்கு ஒப்பானதாகும்.

அ.தி.மு.க.வுக்கு எதிரான ஒவ்வொரு நாளும் பல்கிப் பெருகி வரும் வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பது ஒரு நல்ல நோக்கத்தின்பால் பட்டது தான். எனினும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் தான், அ.தி.மு.க.வை தோற்கடிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு அ.தி.மு.க.வின் பலமும் செல்வாக்கும் இமயம் போன்றதில்லை.

இதனிடையே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கும் “நமக்கு நாமே’’ விடியல் மீட்புப் பயணம் தமிழக மக்களின் பேராதரவோடும், பாசம் மிகுந்த வரவேற்போடும், மாற்றாரும் மருளும் வகையில், மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு ஸ்டாலின் அன்றாடம் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதை எல்லாம் விரிவாகக்கூறி வருகிறார்.

“தி.மு.க.வின் எதிர்காலம்’’ என்று நான் ஏற்கனவே கூறியதை அட்சரம் பிசகாமல் மெய்ப்பிக்கும் வகையில்தான் மக்களின் வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமிப்பதில், தி.மு.க. நியமனக் கட்சியல்ல; மிகப் பெரிய ஜனநாயக இயக்கம்; பெரும்பான்மை விருப்பப்படியே இங்கு எல்லாம் நடக்கும்; நான் ஒருவன் மட்டும் தனித்து எடுத்து அறிவித்து விட முடியாது. நான் அறிவிக்காமலேயே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதி மிக்கவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை தான்”என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Related Posts