நாடு முழுவதுமான சரக்கு போக்குவரத்துக்கு நாளை முதல் ‘இ-பில்’ கட்டாயம்!

நாடு முழுவதுமான சரக்கு போக்குவரத்துக்கு நாளை முதல் ‘இ-பில்’ கட்டாயம்!

நம் நாட்டிலுள்ள மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்வதற்கான ‘இ-வே பில்’ எனப்படும் ‘மின்னணு ரசீது’ நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், பதுக்கலை ஒழிக்கவும் ‘இ-வே பில்’ எனப்படும் ‘மின்னணு ரசீது’ நடைமுறை கடந்த பிப்ரவரி 1ம் தேதி கொண்டு வரப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ அல்லது ஒரே மாநிலத்துக்கு உள்ளேயோ ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சரக்குகளை கொண்டு செல்வதற்கான வரியை முன்கூட்டியே செலுத்தி, ‘இ-வே பில்’ எனப்படும் ‘மின்னணு ரசீது’ பெற்றால்தான் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

ஆனால், மின்னணு முறையில் இந்த ரசீதுகளை உருவாக்குவதில் தொழில்நுட்ப கோளாறு உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால், இதை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இ-வே பில்களை தயாரிப்பதில் இருந்த குளறுபடிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த பில்களை வழங்குவதற்கு என்றே தனிப்பட்ட இணையதளத்தை ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம், தினமும் 75 லட்சம் இ-வே பில்கள் வரை வழங்க முடியும். இதையடுத்து, மாநிலங்களுக்கு இடையே பொருட்களை கொண்டு செல்வதற்கான இ-வே பில் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், ஒரே மாநிலத்துக்குள் பொருட்களை கொண்டு செல்வதற்கான இ-வே பில் திட்டம், ஏப்ரல் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இ-வே பில்களை பெறுவதற்கான தனி இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படி அனைத்து வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகள், போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்த வார ஆரம்பத்தில் மட்டும் 11 லட்சம் நிறுவனங்கள் இ-வே பில் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.

Related Posts