நம்ம நேவி நம்பர் 2 இடத்தைப் பிடிக்க போகுதாக்கும்!
இந்தியாவில் 70 சதவீத வணிகம் கடல் வாணிபம் மூலம் நடந்து வருகிறது. இதற்கு கடற் கொள்ளையர்களும், தீவிரவாதிகளும் சவாலாக இருந்து வருகின்றனர். இதனை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு சரக்கு கப்பல்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து வருகின் றனர். இந்தநிலையில் கடலோர காவல் படையை பலப்படுத்தும் பணியில் இந்திய கடலோர காவல் படையின் தலைமை ஈடுபட்டு வரும் நிலையில் உலக அரங்கில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய கடலோர காவல்படை 2019-ம் ஆண்டு 2-வது இடத்தை பிடிக்கும் என்று இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. எஸ்.பி.சர்மா கூறினார்.

இதுகுறித்து அவர், “சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ளிட்ட பகுதிகளில் 1,033 கிலோ மீட்டர் கடலோர பகுதி உள்ளது. இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சார்லி சி412, சார்லி சி415, அனார்க், ராஜ்தரங், ராஜ்கமல், ஐ.சி.சி. சமுத்திரா பஹரேதார் உட்பட 28 கப்பல்கள், 11 சிறிய படகுகள், 5 டோர்னியர் ரக விமானங்கள், 4 ஹெலி ப்டர்கள், 5 ரோவர் கிராப்ட் படகுகளில் கடலோர காவல்படை வீரர்கள் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளின் கடற்படையைத் தொடர்ந்து 4-வது இடத்தில் இந்திய கடலோர காவல்படை உள்ளது. இதனை 2-வது இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. தற்போது இருக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்துவதற்காக விசாகப்பட்டிணம், கொச்சி, கோவா, மும்பை ஆகிய இடங்களில் உள்ள அரசு கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளங்களிலும் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் 7 ரோந்து கப்பல்கள் 2017-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய கடலோர காவல் படை 2019-ம் ஆண்டு உலக அளவில் 2-வது இடத்தை பிடிக்கும். சி.ஜி.அரணவீஸ் என்ற விரைவு ரோந்து கப்பல் கடந்த 21-ந்தேதி விசாகப்பட்டிணம் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப் பட்டது. தேவைப்படும் இடங்களுக்கு ரோந்து கப்பல்களை கடலோர காவல்படையின் தலைமை ஒதுக்கி வருகிறது.
கடல் பகுதிகளில் இரவு நேரங்களில் 10 நாட்டிக்கல் மைல் தூரம் வரை கண்காணிக்க உதவும் ஆப்டிக்கல்ஸ் கேமராவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு எல்லையையும் 200 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு விரிவு படுத்தி இருப்பதால் வங்க கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டு உள்ளன.
கிழக்கு கடலோர காவல் படைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 36 ரேடார்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 36 ரேடார் மையங்கள் கலங்கரை விளக்கங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரவு நேரங்களிலும், பனிக்காலங்களிலும் துல்லியமாக கடல் பகுதிகளை கண்காணிக்க முடியும். புதிய விமானங்கள், கப்பல்கள் மற்றும் நவீன கருவிகள் வாங்க இருப்பதன் மூலம் கிழக்குபிராந்திய கடலோர காவல்படையும் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்


