சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு அவசியம்!

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு  அவசியம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை தொடர்ந்து இனி ரயிலில் பயணிக்கும் அனைத்து வகுப்பு பயணிகளும் உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனறும் அதிலும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டைகள்.மேற்கண்ட எதுவும் இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக அடையாளம் காணப்பட்டு, அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரசில், கடந்த 1ம் தேதி காலை இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் ஸ்வாதி பரிதாபமாக பலியானார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் பயணத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு, ரயில் பயணத்தில் சில மாறுதல்களுடன் தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ரயில் பயணத்தின் போது, அனைத்து வகுப்பு பயணிகளும் டிக்கெட்டுடன் ஒரிஜினல் அடையாள அட்டைகள் கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்யும்போது, ரயில்வே துறையால் அங்கீகாரம் செய்யப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை (ஒரிஜினல்) கொண்டு செல்ல வேண்டும்.2ம் வகுப்பு படுக்கை வசதி அல்லது 2ம் வகுப்பு இருக்கை வசதியில் பயணம் செய்வதற்கு புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக ஜெராக்சில் அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலர், தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர், நிலைய மேலாளர், நிலைய அதிகாரி ஆகியோரிடம் கையெழுத்து பெற்று அதனை அடையாளமாக பயன்படுத்தலாம். டிக்கெட் கவுன்டர் மூலம் தக்கல் டிக்கெட் எடுத்தால் ஒரிஜினல் அடையாள அட்டையை எடுத்து செல்லுங்கள். அதே அடையாள அட்டையை பயணத்தின் போதும் கொண்டு செல்ல வேண்டும். இணையதளம் மூலம் தக்கல் டிக்கெட் எடுக்கப்பட்டாலும் இதே முறை பின்பற்றப்பட வேண்டும்.

பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், மத்திய, மாநில அரசால் புகைப்படம் மற்றும் அடையாள எண்ணுடன் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், லேமினேட் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வங்கிகளால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்லூரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள், ஆதார் அடையாள அட்டை, பொது துறை நிறுவனங்களான மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் பஞ்சாயத்தால் வழங்கப்படும் புகைப்படம் மற்றும் அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை போன்றவை ரயில்வே துறையால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள அடையாள அட்டைகள்.மேற்கண்ட எதுவும் இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக அடையாளம் காணப்பட்டு, அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவதுடன் சட்டத்திற்குட்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.”என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

பட உதவி :http://www.picdesi.com/ucow in railway-reservation-