“சக்தி கொடு” – தி. மு. க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள்!

“சக்தி கொடு” – தி. மு. க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள்!

எதிர் வரும் மே 16-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவர் கருணாநிதி சென்னை சைதாப் பேட்டையில் சனிக்கிழமை மாலை தொடங்கினார். முதற்கட்ட பிரச்சாரத்தில் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன், வேளச்சேரி தொகுதி வேட்பாளர் வாகை சந்திரசேகர், ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் தா.மோ.அன்பரசன், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் தனசேகரன், சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் ஆகிய 5 திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
dmk apr 23
சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரித்து அவர் பேசிய போது, “2016 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் இந்த நேரத்தில் மக்களின் விடியல் முகங்களை பார்க்கும்போது பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்கு பரிகாரமாக இந்த முறை திமுகவை வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன்.தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று ஆட்சியை பற்றி வாக்களிக்கும் முன்பு நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களைச் சுரண்டி, அவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் ஆணவத்தோடு ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டதால் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந் தனர். ஆற்று நீரில் பிணங்கள் மிதந்து வந்த காட்சிகள் நெஞ்சை பதறச் செய்தது.பெருமழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. குடிநீர், உணவு, உடைகள் இன்றி மக்கள் தவித்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதல்வர் வரவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது வெள்ளம் வந்தபோது முதல்வராக இருந்த நானும், அமைச்சர்களும் மக்களை நேரில் சந்தித்து எப்படி பணியாற்றினோம் என்பதை இப்போது நினைவுப்படுத்த விரும்புகிறேன்.வெள்ளத்தில் சிக்கிய மக்களை எப்படி காப்பாற்றப் போகிறோம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் பதறி தவித்தபோது, ஆட்சியாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றினர். இப்படி மற்றவர்கள் காப்பாற்றும் அளவுக்குதான் அரசு இயந்திரம் செயல்பட்டது.செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் திடீரென அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என திமுக மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இது குறித்து சிறு விசாரணை நடத்தகூட அதிமுக அரசு முன்வரவில்லை.

மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஒரு குடும்பத்தில் உள்ள சிலருக்காக ஆட்சி நடத்தி வருகிறார்கள். இவற்றையெல்லாம் சிந்துத்துப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று நடைபெற்று வரும் மகாராணி ராஜ்ஜியத்துக்கு தமிழக மக்கள் முடிவு கட்ட வேண்டும். தமிழகம் செழிக்க, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ இந்த ஏதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
5 ஆண்டுகால அவல ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழக மக்கள் எங்களுக்கு சக்தியை தாருங்கள். திமுக ஆட்சியில அமர்த்தினால் தான் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும்.

அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தாருங்கள். ஏமாற்றத்தை தந்து விடாதீர்கள். உங்கள் தொகுதியில் திமுக போட்டியிட்டாலும், கூட்டணி கட்சிகள் நின்றாலும் ஒற்றுமையுடன், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்புடன் பழகி திமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். மக்களின் அன்பைப் பெற வேண்டும்.சைதாப்பேட்டையில் திரண்ட இந்த பெரும் மக்கள் கூட்டமும், அவர்கள் எனக்களித்த வரவேற்பும் என்னை பெருமகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதனை வாக்குகளாக தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். ஐந்து ஆண்டுகாலமாக மக்கள் அளவற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்களைப்பற்றி கவலைப்படாமல் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வரும் எதேச்சதிகாரத்தை எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக் கொண்டிருப்பது.

சக்தியற்றவனாக இருக்கும் எனக்கு வெற்றியை தந்து இந்த தேர்தலில் சக்தி வழங்க வேண்டும். இவர்களுக்கு தான் இந்த ஆட்சி சொந்தமா? இவர்களுக்குத்தான் என பட்டா போட்டு கொடுத்துள்ளோம்? மாற்றம் தேவை, மாற்றம் என்றால் ஏமாற்றத்தை கொண்டு வந்து விடாதீர்கள். ஏமாற்றம் எது வேண்டுமானாலும் செய்யலாம். மக்களின் ஆதரவை எங்களுக்கு வழங்க வேண்டும்
மக்களுக்கு உழைக்கும் திமுகவினருக்கு வாக்களியுங்கள். திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்” என்று கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

Related Posts