கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிட்டாருய்யா!
“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத் திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த 20-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 18-ந்தேதி விழா ஆரம்பமானது.
மீனாட்சி அம்மன் கோவிலில் 28-ந்தேதி பட்டாபிஷேகமும், 29-ந்தேதி திக் விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
இதேபோன்று அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (2-ந்தேதி) மாலை 6 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.
இன்று காலை 6.45 மணிமுதல் 7 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்கிறார். காலை 7.30 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.
அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.


