எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! – மோடி மனைவி மீண்டும் மீண்டும் மனு
பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென், தனது சகோதரர் அசோக் மோடியுடன் குஜராத் மாநிலம், மேசானா மாவட்டத்தில் வசித்து வருகிறார். மோடி, பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவரது மனைவி யசோதா பென்னுக்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவரது வீட்டில் 10 காவலர்கள் பகல், இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து, பிரதமரின் மனைவி என்ற முறையில், தான் எத்தகைய பாதுகாப்புக்குத் தகுதியானவர்? எனவும், தனக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்தும் உரிய விவரங்களைத் தெரிவிக்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் யசோதா பென் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனக்கு பாதுகாப்பளிக்கும் காவலர்கள் அரசு கார்களில் பயணிக்கும்போது, பிரதமரின் மனைவியாக இருந்தும், தான் அரசு போக்குவரத்தில் செல்வதாகவும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதால், தனக்கு அத்தகைய அச்சம் இருப்பதாக யசோதா பென் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து குறிப்பிட்ட நுண்ணறிவுப் பிரிவு விவரங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி யசோதா பென்னின் மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து கடந்த ஜனவரியில் மேல்முறையீட்டு மனு அளித்தார். ஆனால், அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது குஜராத் மாநில தகவல் ஆணையத்தில், யசோதா பென், இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.


