கந்து வட்டிக்காரர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் – ஹைகோர்ட் கண்டிப்பு
கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் போலீஸாருக்கும் கந்து வட்டி கொடுப்பவர்களுக்கும் இடையே உள்ள உறவுகளை முறியடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஹைகோர்ட் நீதிபதி கே.கிருபாகரன். இவர் 2013ம் ஆண்டு செப்டம்பர் 23ந் தேதி தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், செய்தித் தாளில் வெளியாகியிருந்த பல்வேறு கந்து வட்டி கொடுமை தொடர்பான செய்தியின் அடிப்படையில், தானாக முன்வந்து சென்னை ஹைகோர்ட் பொதுநல வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த கடித்தை ஏற்றுக் கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், அக் கடிதத்தை பொதுநல வழக்குப் பதிவு செய்துகந்து வட்டி கொடுமையை தடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டுக்கு உதவும் விதமாகவும் செயல்பட மூத்த வக்கீல் முத்து குமாரசாமியை நியமித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.சத்தியநாராய ணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகி கந்து வட்டி தொடர்பான தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர் ”தமிழகத்தில், கந்துவட்டி, மணி கணக்கு வட்டி, தின வட்டி , மீட்டர் வட்டி என்று பல்வேறு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் உள்ளது. தமிழ்நாடு கந்து வட்டி தடைச்சட்டமும் அமலில் உள்ளது. ஏழைகளுக்கு வங்கிகளில் கடன் வாங்க போதுமான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லை. இதனால், அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து பெரும் வட்டிக்கு பணம் பெறுகின்றனர். வட்டி மிக அதிகம் என நினைப்பதே இல்லை. பணம் கிடைத்தால் போதும் என்று வாங்கி விடுகிறார்கள். கந்து வட்டிக்காரர்கள் வட்டிக்கு வட்டி போட்டு, வாங்கிய கடன் தொகையை விட அதிகமாக பணத்தை வசூலிக்கின்றனர். சட்டவிரோதமாக பணம் வசூலிப்பது தவறானது. கந்து வட்டி தடை சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதால், கந்து வட்டிக் கும்பலின் கொடுமையை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே, கந்து வட்டி தடைச் சட்டம், சட்டவிரோத பணம் நடவடிக்கை சட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளும் விதமாக வானொலி, நாளிதழ்கள், தியேட்டர் உள்ளிட்டவைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடவேண்டும். கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே மாவட்டம்தோறும் கண்காணிப்பு கமிட்டி அமைக்கவேண்டும். போலீசிடம் புகார் கொடுக்கும்போது, அவற்றின் நகல் ஒன்றை கண்காணிப்பு குழுவிடமும் புகார்தாரர்கள் கொடுக்க வேண்டும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும்.”என்று மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து, ”ந்து வட்டி பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் நியமித்த உதவியாளரும் இரண்டு பரிந்துரைகள் நீதிமன்றத்துக்கு அளித்துள்ளார்.அதன்படி, கந்து வட்டியால் பாதிக்கப்படும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்ய வேண்டும். திரையரங்கங்களிலும் இந்தச் சட்டம் குறித்து காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும்.
தவிர, கந்து வட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கண்காணிக்க மாவட்ட, தாலுகா அளவில் குழு அமைக்க வேண்டும். இதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.போலீஸாருக்கும் கந்து வட்டி கொடுப்பவர்களுக்கும் இடையே உள்ள உறவுகளை முறியடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை போலீஸ் ஆணையர், எஸ்.பி. ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.இது குறித்து தொடர்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.” என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


