செய்தியைக் கேட்க / Listen to News
உலக இயன்முறை மருத்துவ (பிசியோதெரபி) தினமின்று கொண்டாப்படுகிறது. உலகெங்கிலும் இயன்முறை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவையைப் போற்றவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று தான் உலக இயன்முறை மருத்துவக் கூட்டமைப்பு (World Confederation for Physical Therapy) உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அமைப்பின் தோற்ற நாளை நினைவுகூரும் வகையிலேயே, 1996 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 உலக இயன்முறை மருத்துவ தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உடலின் இயல்பான இயக்கத்தையும் சதைநார்களின் நெகிழ்வுத்தன்மையையும் பாதுகாத்து, மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகளின் தேவையை பெருமளவில் குறைக்கும் முதன்மை மருத்துவத் துறையாக இயன்முறை மருத்துவம் விளங்குகிறது. உடலியக்க செயல்பாடுகளில் ஏற்படும் தடைகளை நீக்கி, ஒருவரை மீண்டும் சுயசார்புடன் இயங்க வைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.அண்மைக்காலமாக மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது இநந் `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை’ போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? என்கிறீர்களா?எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும்.
இயன்முறை மருத்துவத்தின் பரிணாம வளர்ச்சி
முன்னரே சொன்னது போல் தொடக்க காலத்தில் எலும்பு முறிவுகள், தசைப் பிடிப்புகள் மற்றும் நரம்பு சார்ந்த தற்காலிகக் கோளாறுகளுக்கு மட்டுமே இயன்முறை மருத்துவம் பயன்பட்டு வந்தது. ஆனால் இன்றோ மருத்துவத் துறையின் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு ஈடாக இத்துறையும் விரிவடைந்துள்ளது. குறிப்பாக, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவும், கர்ப்பிணிப் பெண்களின் பிரசவ கால உடல் தயார்நிலைக்கும், விளையாட்டு வீரர்களின் தசை வலிமைக்கும் தனித்தனி பிரத்யேகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் சுவாசச் செயல்பாடுகளை சீராக்கவும் இயன்முறை மருத்துவம் முக்கியப் பங்காற்றுகிறது.

2026 உலக இயன்முறை மருத்துவ தினத்தின் மையப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலக இயன்முறை மருத்துவ தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய இரண்டும் முதன்மை மையப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
நவீன வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தம் அதிகரித்து, இளவயதிலேயே இருதய நோய்களும் பக்கவாத பாதிப்புகளும் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து மனித உயிர்களைக் காப்பதிலும், பாதிக்கப்பட்ட பின் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மீண்டும் மீட்டெடுப்பதிலும் இயன்முறை மருத்துவம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
இருதய ஆரோக்கியத்தில் இயன்முறை மருத்துவம்
இருதய தசைநார்கள் வலிமையிழப்பது அல்லது இருதய அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய காலங்களில், நோயாளியின் மூச்சு வாங்கும் திறனையும் ரத்த ஓட்டத்தையும் சீராக்க பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கார்டியாக் ரீஹேபிலிடேஷன் எனப்படும் இருதய மறுவாழ்வுப் பயிற்சிகள் மூலம், இருதயத்தின் செயல்பாட்டுத் திறன் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. மூச்சுப் பயிற்சிகள் மற்றும் மிதமான உடற்பயிற்சிகளின் கலவையாக இவை வடிவமைக்கப்படுகின்றன.
பக்கவாத மீட்சி மற்றும் நரம்பியல் பயிற்சிகள்
பக்கவாதத்தால் பாதிக்கப்படும் போது, மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, உடலின் ஒரு பகுதி அல்லது குறிப்பிட்ட உறுப்புகளின் இயக்கம் முடங்கிப்போகிறது. இந்நிலையைச் சரிசெய்ய நரம்பியல் இயன்முறை மருத்துவம் மிக அவசியமாகிறது.
மூளையின் நரம்பு மண்டலத்திற்கு மறுபயிற்சி அளிக்கும் நியூரோ பிளாஸ்டிசிட்டி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இயன்முறை மருத்துவர்கள் செயல்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட கை, கால்களுக்கு தொடர் பயிற்சிகள் அளிப்பதன் மூலம், மூளையின் பிற பகுதிகள் அந்த இயக்கங்களைக் கற்றுக்கொண்டு, முடங்கிய உறுப்புகளை மீண்டும் இயங்க வைக்கின்றன.

வாழ்வியல் நோய்களுக்கான சிறந்த தீர்வு
நீண்ட நேரம் அமர்ந்தே பணியாற்றுவது, தவறான உடல் அமைப்பில் உட்காருவது மற்றும் உடலுழைப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலி மற்றும் மூட்டுத் தேய்மானம் போன்றவற்றுக்கு இயன்முறை மருத்துவமே நிரந்தரத் தீர்வாக அமைகிறது.
மருந்துகளால் தற்காலிகமாக வலியை மட்டுமே மறக்கடிக்க முடியும். ஆனால் இயன்முறை மருத்துவம் மட்டுமே பலவீனமடைந்த தசைகளை வலுப்படுத்தி, எலும்பு இணைப்புகளின் சீரான இயக்கத்தை உறுதி செய்கிறது. முறையான பயிற்சிகள் மூலம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனும், ரத்த ஓட்டமும் மேம்பட்டு, மன அழுத்தமும் குறைகிறது.
தொலைநோக்குப் பார்வையும் விழிப்புணர்வும்
இயன்முறை மருத்துவம் என்பது நோய் வந்த பின் மேற்கொள்ளும் சிகிச்சை முறை மட்டுமல்ல; நோய் வராமல் தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாகவும் பார்க்கப்பட வேண்டும். உடலின் ஒவ்வொரு அசைவையும் சீரமைத்து, வயதான காலத்திலும் தன்னிச்சையாக வாழ வழிவகுக்கும் இந்த மருத்துவ முறையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
அன்றாட வாழ்வில் சரியான உடற்பயிற்சிகள், சீரான மூச்சுப் பயிற்சிகள் மற்றும் சரியான உடல் நிலையைப் பராமரிப்பதன் மூலம் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நிலவளம் ரெங்கராஜன்
