கட்சிகளின் ஒரிஜினல் பலத்தை காட்டப் போகும் காலக் கண்ணாடி!
சில நேரம் வெளிநாடுகளில் இருந்து அதிக மகசூல் தரும் விதை வந்துள்ளது என்று சொல்வார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து இந்த விதை வந்துள்ளது. இதில் விளையும் பழம் மிகவும் தித்திப்பாக இருக்கும் என்று ஆசைவார்த்தை காட்டி, ஒரு விவசாயியிடம் கொடுக்கும்போது, அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அதை நட்டு, உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி பாதுகாத்த பிறகு, பூ பூத்து, காயாகி, கனியான நேரத்தில் அதை பறித்து சாப்பிடும்போது, வாயில் வைக்க முடியாத கசப்புடன் அந்த பழம் இருந்தால், அந்த விவசாயி அப்படியே கலங்கிப்போய்விடுவான். அதேபோலத்தான், தேர்தல் சீர்திருத்தம் என்று உயர்வாக சொல்லி, தேர்தலை நடத்துகிற நேரத்தில், தகுதி இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், பொது மக்களுக்கும், விவசாயி நிலைதான் ஏற்படும்.

பல நேரங்களில் தகுதி இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில், கூட்டணி நிர்ப்பந்தத்தால், அல்லது வேறு பல நிர்ப்பந்தங்களால் அவருக்கு இடம் கொடுத்தோம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த தேர்தலில் அப்படி அடுத்தவர் மீது பழிபோட்டு தப்பிக்க முடியாத வகையில், எல்லாவற்றுக்கும் அந்தந்த கட்சிகளே பொறுப்பு ஏற்கும் வகையில், பல கட்சிகள் தனியாக போட்டியிடுகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளை எடுத்துக்கொண்டால், 1925–ம் ஆண்டு இந்தியாவில் தோற்றுவிக்கப் பட்டது. இந்தியா விடுதலை பெறவும், ஷோசலிச இந்தியா உருவாகவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இந்தக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் என்றால் மிக மிக எளிமையானவர்கள். மக்களோடு மக்களாய் நின்று, மக்களுக்காக பாடுபடுவார்கள் என்ற பெரிய மதிப்பு அந்த கட்சியின் மீது இருந்தது.
1964–ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்றும் இரண்டாக பிரிந்தார்கள். 1962–ம் ஆண்டு நடந்த தேர்தல் வரை கம்யூனிஸ்டு கட்சிகள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனியாகவே கவுரவமாகவே போட்டியிட்டனர். ஆனால், 1967–ம் ஆண்டிற்குப்பிறகு இரு கட்சிகளுமே ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டன.
தமிழ்நாட்டில் இதுவரையில் நடந்த தேர்தலுக்கு வித்தியாசமாக வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் எடுத்துக்காட்டாக விளங்கப் போகிறது. பொதுவாக கூட்டணி சேர்ந்துதான் கட்சிகள் போட்டியிடுகிற நேரத்தில், இடையிலே கூட்டணி முறிந்தால் பெரிய கட்சி, ‘எங்கள் தயவில் தானே உங்களுக்கு இத்தனை இடம் கிடைத்தது, எங்கள் கட்சி ஓட்டுதானே உங்களுக்கு பலம் கொடுத்தது’ என்று சொல்வது உண்டு. பிரிந்து செல்லும் கட்சியும் தங்கள் பங்குக்கு, ‘எங்கள் ஆதரவுடன் தானே நீங்கள் வெற்றிப்பெற்றீர்கள். எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் வெற்றிப்பெற்றிருக்க முடியுமா?’ என்று சவால் விடுவார்கள். ஆக, யார் சொல்வது உண்மை என்று தெரியாமல் மக்கள் திகைப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து கழற்றிவிடப்பட்ட 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகிறது. தி.மு.க.வில் சிறிய கட்சிகள் சேர்ந்து 5 இடங்களை பெற்றாலும், 35 இடங்களில் தி.மு.க.தான் போட்டியிடுகிறது. யாருமே சேர்வதற்கு முன்வராத நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனியாகத்தான் போட்டியிடுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் சில கட்சிகள் சேர்ந்தாலும், அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் எவ்வளவு ஆதரவு என்பது தெரிந்துவி டும். மொத்தத்தில், நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல், தமிழ்நாட்டில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வுளவு பலம் இருக்கும்? எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த இடத்தில் ஆதரவு அதிகம், எங்கெல்லாம் ஆதரவு குறைவு? என்பது பற்றி காலக்கண்ணாடி போல தெளிவாக காட்டிவிடும். மக்களுக்குமே ஒவ்வொரு கட்சியின் பலத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது.
கட்சிகளுக்கும் தங்கள் பலம் எந்த இடத்தில் குறைவாக இருக்கிறதோ? அங்கே தீவிரமாக பணியாற்றி எதிர்காலத்தில் கட்சியை வளர்க்க உதவும். வீணாக, ‘என்னால்தான் நீ ஜெயித்தாய், எங்களால்தான் நீங்கள் வெற்றிபெற முடிந்தது’ என்று வெத்து ஜம்பத்தை அரசியல் கட்சிகள் அடிக்க முடியாது. அந்த வகையில், மக்கள் ஆதரவு யார்–யாருக்கு எவ்வளவு? என்பது தெளிவாக காட்டப்போகும் தேர்தல்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.
தினத்தந்தி தலையங்கம்


