இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானிக்கு விருது!

இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானிக்கு விருது!

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 2015-ஆம் ஆண்டுக்கான பெருமை மிக்க ஹைன்ஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Sangeeta Bhatia
இந்திய வம்சவாளியைச் சேர்ந்த சங்கீதா பாட்டியா (46), பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உயர் கல்வி பயின்று, இரு துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவரது தலைமையில், உலகப் புகழ் பெற்ற மாஸசூஸட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் தனி ஆய்வுத் துறை இயங்கி வருகிறது. அங்கு நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கான செயற்கை ஈரலை உருவாக்கினார். மனித உடல்களில் புதிய மருந்துக்கூறுகள் ஏற்படுத்தக் கூடிய மாறுதல்களை அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பயன்களை இவர் உருவாக்கிய செயற்கை உறுப்புகள் தருகின்றன. மலேரியா தடுப்பில் இதன் பயன்பாடு குறித்து சங்கீதா தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும், மிகக் குறைந்த செலவில் புற்றுநோய் கண்டுபிடிக்கும் முறையை இவர் உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கிய செயற்கை ஈரல்களைக் கொண்டு, ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மருந்துக்கூறுகளின் செயல்பாட்டை சோதித்து வருகின்றன. இதனால் புதிய மருந்துகளை மனிதர்களிடம் நேரடியாக சோதிக்கும் ஆபத்து நிறைந்த முறை தவிர்க்கப்படுகிறது.

சிறிய செயற்கை ஈரல்களை உருவாக்கியதற்காக இந்த ஆண்டின் ஹைன்ஸ் விருது சங்கீதாவுக்கு வழங்கப்படுகிறது. சங்கீதா உருவாக்கிய தொழில்நுட்பத்தின் மூலம், எதிர்காலத்தில் செயற்கை மனித உடல் உருப்புகளை உருவாக்க இயலும் என்று கருதப்படுகிறது.

அடுத்த மாதம் பிட்ஸ்பர்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பாராட்டுப் பத்திரம், வெள்ளிப் பதக்கம், 2.5 லட்சம் டாலர் (சுமார் ரூ. 1.5 கோடி) ரொக்கமும் சங்கீதா பாட்டியாவுக்கு வழங்கப்படும்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அமைப்பைக் கல்வி கற்கும்போதே தொடங்கிய சங்கீதா, தனது பரிசுத் தொகையை அந்த அமைப்பின் முயற்சிகளுக்கு செலவிடப் போவதாக கூறினார்.

Related Posts