அம்பேத்கர் பாடல் ஒலிபரப்பியதற்காக தாக்குதல்!- விருதுநகர் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் திருமலைபுரம். கடந்த 02.07.2014 அன்று மாலை 6.30 மணியளவில் சுமார் 50 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், வேல்கம்பு, உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் மாரிமுத்து, ஜேசுமுடியப்பன், இருளாயி ஆகிய 3 தலித்துகள் படுகாயமடைந்து மதுரை மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஒன்பது வீடுகளும் வன்கொடுமை அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு 05.07.2014 அன்று நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட நேற்று 07.07.2014 அன்று நேரடியாக எமது எவிடன்ஸ் அமைப்பிற்கு வருகை தந்து சட்ட தலையீடு செய்ய புகார் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

திருமலைபுரம் தலித் மக்கள் வழிபடுகிற கருப்பசாமி, சீலைக்காரி மற்றும் வலம்புரி விநாயகர் கோவிலில் கடந்த 11, மற்றும் 12 ஜுன் 2014 தேதிகளில் கும்பாபிசேகம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு முறைப்படி அனுமதி பெற்று ஒலிபெருக்கி மற்றும் அலங்கார வளைவுகள் வைத்து விமர்சியாக கொண்டாட 10.06.2014 அன்று திட்டமிட்டிருந்தனர். ஒலி பெருக்கியில் பாடலும் பாடிக்கொண்டிருந்தது. திருவிழாவை முன்னிட்டு அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகிய தலைவர்களின் படங்கள் பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாதி இந்து வன்கொடுமை கும்பல் திரு.குருசாமி, திரு.பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு 11.06.2014 அன்று காலை 11.00 மணியளவில் தலித் மக்களை சாதிய ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆபாசமாக பேசிக் கொண்டே, இங்கே எவனும் பாடல் போடக்கூடாது. அம்பேத்கர், இமானுவேல்சேகரன் பிளக்ஸ்களை கழட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். அங்கிருந்த போலீசாரும் சாதி இந்து வன்கொடுமை கும்பலுக்கு பயந்து அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் படங்களை அகற்றியுள்ளனர். இதனால் இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரச்சனை வரக்கூடாது என்பதால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
நாங்கள் முறைப்படி அரசு அனுமதி பெற்றுதான் விழா நடத்தினோம். எங்கள் சமூக மக்களிடம் வரி வசூல் செய்து விமர்சியாக கொண்டாட இருந்த திருவிழாவை தடுத்தது மட்டுமல்லாமல் எங்கள் மீது தாக்குதல் முயற்சியும் நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று முடிவெடுத்த தலித்துகள் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.
இந்நிலையில் கடந்த 02.07.2014 அன்று மாலை 6.30 மணியளவில் திருச்சுழி அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தேவர், திரு.குருசாமி தேவர் உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வன்கொடுமை கும்பல் திருமலைபுரம் கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த தலித் மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். அவ்வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, வேல்கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தலித் மக்களை சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவ்வன்கொடுமைக்கு பயந்த தலித்துகள் அப்பகுதியில் இருந்து வெளியேறி தப்பித்துள்ளனர். ஆயினும் இத்தாக்குதலில் மாரிமுத்து (32), ஜேசுமுடியப்பன் (71), இருளாயி (70) ஆகிய 3 தலித்துகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஒன்பது வீடுகளின் ஒடுகள் மற்றும் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. பீரோ, மிக்சி, தொலைக்காட்சி பெட்டி, சில்வர் பாத்திரங்கள் என்று பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.101/2014 பிரிவுகள் 147, 148, 294(b), 323, 324, 307, 379 இ.த.ச., 4 of TNPPDL Act, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம் 2014 பிரிவுகள் 3(1)(r)(s)(g), 3(ii)(va), 3(ii)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட 50 பேரில் 10 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பிணை வாங்க முயற்சித்து வருகின்றனர்.
தலித்துகள் திருவிழா கொண்டாடுவதையும் தங்களுக்கு பிடித்த தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வதையும் விரும்பாத சாதி இந்து வன்கொடுமை கும்பல் இக்கொடிய தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
பரிந்துரைகள்
• வன்கொடுமையில் ஈடுபட்ட 50 குற்றவாளிகளில் 10 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 40 நபர்களும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
• தலித்துகள் மீது வன்கொடுமை நடத்துகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று விதி இருக்கிறது. ஆகவே முன்ஜாமீனுக்கு முயற்சிக்கிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்காமல் இருப்பதற்கு தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• இக்கொடிய தாக்குதலில் காயமடைந்த தலித்துகளுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
• சேதமடைந்த வீடுகள் புனரமைத்து கட்டிக்கொடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளருக்கும் தலா ரூ.1 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
• வீடுகளை சேதப்படுத்திய குற்றவாளிகளுக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
(A.கதிர்)
செயல் இயக்குனர்
எவிடன்ஸ்
தேவ இரக்கம் இல்லம்,
9-B, பி.டி.ராஜன் ரோடு, 8வது தெரு,
(சிங்கராயர் காலனி அருகில்),
மதுரை – 2.


