அடேங்கப்பா.. சொல்ல வைக்கும் அரிசியின் அளப்பரிய பயன்கள் லிஸ்ட்!

அடேங்கப்பா.. சொல்ல வைக்கும் அரிசியின் அளப்பரிய பயன்கள் லிஸ்ட்!

பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டு. அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன – சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.
rice apr 8
இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது – கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் ‘சிவன்’ – sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக் கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

நெக்ஸ்ட்-. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத் தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய் களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்… சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந் தது. ஆகவே, இதை, ‘காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால் தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் – ‘மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். ஆனால் அங்கு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ”வேண்டாம், வேண்டாம்… வொயிட் ரைஸ் போடு…” என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசி கள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ”மட்ட அரிசி போடு…” என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு – வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத் தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக் குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் – எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து – ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் – மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். ‘சிவப்பு பூஞ்சண அரிசி’ (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இதனிடையே இது போன்ற அரிசியில் இருந்து கிடைக்கும் பலவகை ஊட்ட பாணங்கள் + உணவு வகைகளைப் பார்ப்போமா?

கொதிகஞ்சி:

உலையில் அன்னம் முக்கால் பாகம் வெந்ததும், கஞ்சியுடன் ஒரு கரண்டி எடுத்து, ஆறியதும், அதில் வெண்ணை, நெய் கலந்து சாப்பிட, குடல் வரட்சை, நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் வலி நீங்கும்.

வடிகஞ்சி:

சாதத்தை வடித்தெடுத்த கஞ்சி ஆறியதும் இதனுடன் மோர் சேர்த்து குடிக்கலாம். உடலின் மேல் தேய்த்துக் குளிக்க தோல் வரட்சி நீங்கும். தோல் மென்மையுறும். ஆனால் ப்ரஷர் குக்கரை அதிகமாக சமைக்க உபயோகிப்பதால் வடிக்கஞ்சி கிடைப்பது கடினம்.

புழுங்கலரிசி கஞ்சி:

தமிழகத்தில் நோயாளிகளுக்கு கொடுப்பது புழுங்கலரிசி கஞ்சிதான். நோய் வாய்படும் போது தான் இதை குடிக்க வேண்டும். என்றில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே புழுங்கலரிசி கஞ்சியை சாப்பிடலாம்.புழுங்கலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உடைக்காமல், பெரிய துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும். இளந்தீயிலிட்டு பொறுமையாக, புழுங்கலரிசி ரவையை தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த கஞ்சியில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இல்லை, மோர், உப்பு சேர்த்து பருகலாம்.நோயாளிகளுக்கு மற்றும் சுரம் உள்ளவர்களுக்கு, புழுங்கலரிசி கஞ்சி கொடுப்பது, அநேகமாக எல்லா வீடுகளிலும் சகஜம்.
புழுங்கலரிசியுடன் கோதுமை, பச்சைப்பயிறு சேர்த்து வறுத்து, குருணையாக்கி 60 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி கஞ்சியாக்கவும். புஷ்டியை தரும் கஞ்சி இது.தவிர சளியால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி, வயிற்றுக் கொதிப்பிருப்பவர்க்கு. சீரகம், மல்லிவிதையும், மலச்சிக்கலுக்கு திரா¬க்ஷ, ரோஜா மொட்டும் சேர்த்து புழுங்கலரிசி கஞ்சியை தயாரித்துக் கொள்ளலாம்.பேதி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு, வில்வப்பிஞ்சையும் சேர்த்து கஞ்சி தயாரித்து கொடுக்கலாம்.

புனர்பாகம் :

இரு முறை வடித்த கஞ்சி

ஏற்கனவே சமைத்து வைத்த அன்னத்தை கஞ்சியை மறுபடியும் நீர் சேர்த்து வடிக்க வேண்டும். இதன் வடிநீரை எடுத்து ஒரு தேக்கரண்டி பழச்சாறு சேர்த்து கொடுக்க வேண்டும்.இதை புனர்பாகம் புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும்.

அரிசிமா:

அரிசியை பொடித்து செய்யப்படும் மாவு பல வித பலகாரங்கள் பட்சணங்கள் செய்ய உதவும். அரிசி மாவு, உளுந்து சேர்த்து செய்யப்படுபவை, தோசை, இட்லி, ஆகும். தோசை பித்தத்தையும், வாய்வையும் போக்கும். இட்லியும் திரிதோஷங்களை பெருக்காது.
ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி மற்றும் இடியாப்பங்களை எளிதில் ஜூரணமாகும் எனப்பட்டாலும், இவை பத்திய உணவு ஆகாது. அரிசிமாவால் பணியாரங்கள், நல்ல ஜீரண சக்தி உடையவர்களுக்கே ஏற்றவை.

சில ஆயுர்வேத மருத்துவர்கள், வயிற்றில் வாய்வு இருந்தாலும், தோலில் சொறி, சிரங்கு இருந்தாலும் இட்லி, தோசை, இதர அரிசிமாவு தயாரிப்புகள் ஏற்றவையல்ல என்கின்றனர்கள்.

அரிசி மாவால் செய்யப்படும் புட்டு உடலுக்கு வன்மை தரும். பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

முறுக்கு, கொழுக்கட்டை, தேன்குழல் போன்றவை வாய்வை அதிகரிக்கும், பசியை மந்தப்படுத்தும் என்கிறது சித்த வைத்தியம்.

சத்துமா:

அரிசியை வறுத்து இடித்த மாவு இது. கோதுமை, பார்லி, கடலை இவைகளாலும் சத்துமா செய்வது உண்டு. இந்த மாவை நீருடன் சேர்த்து பிசைத்து சாப்பிட பசியடங்கும். மோருடன் சேர்த்து உண்டால் வயிற்று வாய்வு நீங்கும். சத்துமா எளிதில் சீரணமாகும். களைப்பு நீங்கும்.

அரிசி மாக்களி:

அரிசியை நீரில் ஊறவைத்து எடுத்து, இடித்து மாவாக்க வேண்டும். இதை தீப்புண்கள், கொப்புளங்கள் மேல் தூவ, புண்கள் ஆறும் வேர்க்குரு, கரப்பானால் ஏற்படும் சினப்பு, அரிப்பு இவற்றின் மேலும் அரிசி மாவை தூவலாம். நீர்க்கசிவும் அரிப்பும் அடங்கும்.
தேவையான மாவை வாயகன்ற சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி, சிறிது தண்ணீர் விட்டு களியாக கிண்டிக் கொள்ளவும். இதை வெள்ளைத் துணியில் 1 அங்குல கனத்திற்கு தடவி, கொஞ்சம் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்ணையை அதன்மேல் பூசி, கட்டிகள், சீழ்க்கட்டிகள் இவற்றில் மேல் வைத்து கட்டவும். கட்டிகள் பழுத்து உடைந்து போகும். வலிமிகுந்த கட்டிகளுக்கு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளலாம்.கிண்டும் போது கால் பங்கு கடுகுத் தூள் சேர்த்து, இறக்கி, வேப்பெண்ணைய் சேர்த்து மார்பிலும், முதுகிலும் 1-2 மணி நேரம் கட்டி வைத்தால் கரையாத மார்புச் சளியும் கரையும்.

அவல்:

நெல்லை சிறிது நனைத்து உலர்த்தி, சிறிது வறுத்து, லேசாக இடித்தால், தட்டையாகி அரிசி வேறு, உமி வேறாக பிரியும். தட்டையான அரிசிக்கு அவல் என்று பெயர். அவலை ஊறவைத்து வெல்லத்துடன் சாப்பிடலாம். குழைய வேகவைத்த அவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ண உடல் பலம் பெறும். அரிசி அன்னத்தை விட அவலால் வலிவு அதிகம் உண்டாகும்.
அவல் ஊறவைத்த நீரை மட்டும் பருகினால், வயிற்றில் வாய்வு உண்டாகி, வலி கூட ஏற்படலாம்.

நெற்பொரி:

நெல்லை பொரித்து, உமியை நீக்கி எடுத்தால் நெற்பொரி கிடைக்கும். இதை கஞ்சியாக தயாரித்து. வயிற்று நோய், சுரம், நீர்ச்சுருக்கு உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கலாம். சூடான பால் அல்லது தயிர், பழச்சாறு இவற்றில் ஊறவைத்து சாப்பிடலாம். நாவரட்சி, வாந்தி, வயிற்றுப்புண், விக்கல் மயக்கம், பேதி இவற்றுக்கும் நெற்பொரி கஞ்சி பயன்படும்.இதில் பாகு சேர்த்து உருண்டையாக பிடித்து சாப்பிடுவது குமட்டல், வாந்தி இவற்றுக்கு நல்லது. பண்டிகை காலங்களில் பொரி உருண்டை செய்வது நம் நாட்டு வழக்கம்.

பழைய சாதம் – நீராகாரம்:

முதல் நாள் இரவில் சமைத்த அன்னத்தில் நீருற்றி வைத்திருந்து மறுநாள் காலை அந்த நீருடன் சேர்த்து அன்னத்தை உண்ணுவது உடல் உழைப்புக்கு தேவையான வலிமையை கொடுக்கவும். ஆண்மை பெருகும். இந்த அன்னம் மிகப் புளிப்பாக இருக்கக்கூடாது. சிறிதளவே புளித்திருக்க வேண்டும்.அதிகம் புளிக்காத பழையதுடன், மோரும், தயிரும், வெங்காயம் அல்லது மாவடு, ஊறுகாய் இவற்றுடன் சேர்த்து உண்ணுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். இதன் சுவையை மறக்க முடியாது. அதுவும் கோடைக்காலங்களில் உடலை குளிர்வித்து, தெம்பூட்டும் தேவாமிர்தம் இந்த பழைய அமுது.

அரிசியை சமைக்கும் போது:

அரிசியை நன்றாக வெந்திருக்கும்படி சமைக்க வேண்டும். அரிசி சரியாக வேகாவிடில் அது சரியாக செரிக்காது. வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும். அதே சமயம் மிகவும் குழைந்து போய், அதிகமாக வேகவிடப்பட்டு குழைந்து போன சாதமும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. புது அரிPlugins 9சியில் சமைத்தால் சாதம் குழைந்து விடும். குழைந்த சாதத்தால் இருமல், வயிற்று உப்புசம் அதிகமாகும்.அரிசியை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி எண்ணை நெய் அல்லது எலுமிச்சம் சாறை விட்டால், சாதம் பொல பொல வென்று மல்லிகைப்பூ போல் அமையும்.வேகாத அரிசி, அதிகம் வெந்த அரிசி இவற்றால் வரும் வயிற்று கோளாறுக்கு சுக்கு தட்டிப் போட்ட வெந்நீரை குடிக்கலாம்.

ஆயுர்வேதம், அரிசி சாதத்தை உண்ணும் போது நெய் சேர்த்து உண்டால், கண் குளிர்ச்சி, சரியான ஜீரணம் ஏற்படும் என்கிறது. நல்லெண்ணை சேர்த்து உண்டால் வயிற்றின் வரட்சி அகலும். நல்ல பசியெடுக்கும்.

பாலும் அன்னமும்:

பாலமுது எனும், பாலும் அன்னமும் சேர்ந்த உணவு மற்றும் பாயசம், பித்தத்தை குறைக்கும். நீர் வேட்கை விலகும். ஆனால் அதிகமாக உண்டால், உடல் பருமன் கூடும். மற்றபடி இதை குழந்தை முதல் பெரியவர் வரை உண்ணலாம்.

பொங்கல் :

பொங்கல் வகைகள் இதர சோறுகள்

அரிசியினால் செய்யப்படும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்ற உணவு வகைகள் பிரசித்தி பெற்றவை. சர்க்கரை பொங்களை மிதமாக உட்கொள்ள வாந்தி நிற்கும்.மிளகு சேர்த்த வெண் பொங்கல், வயிற்றுப் பொருமல், வாய்வு, மார்புக்கபம், பசியின்மை இவற்றை போக்கும்.
புளிச்சோறால் வாந்தி, சுவையின்மை போகும்.எள்ளுப்பொடி அன்னம் வாய்வை நீக்கி வலிமை தரும்.மாமிசம் சேர்த்து சமைத்த உணவு தாதுபுஷ்டி தரும். பசியை மந்தப்படுத்தும்.

அரிசியின் இதர உபயோகங்கள்:

அரிசியிலிருந்து ஒரு வகை ஓயின் எடுக்கப்படுகிறது. அரிசி மது ஜப்பானில் பிரசித்தம்.
அரிசியை தீட்டி புடைத்தெடுக்கும் தவிட்டில் பி 1 வைட்டமின் அதிகம் உள்ளது. கால் நடை தீவனமாக பயன்படுகிறது.

100 கிராம் அரிசியில் உள்ள சத்துக்கள்
கார்போஹைடிரே-79கி
கொழுப்பு-0.6கி
புரதம்-7கிராம்
விட்டமின்பி-6-0.15கி
ஈரம்-13கி.