அக்கி நோய் பற்றிய அலெர்ட் ரிப்போர்ட்!

அக்கி நோய் பற்றிய அலெர்ட் ரிப்போர்ட்!

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் கோர முகத்தைக் காட்டி வரும் கோடை காலத்தில் வெயிலின் கடுமையால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘அக்கி’ எனும் ஒரு வகை அலர்ஜி நோய் தாக்கி வருகிறது.இந்த அக்கி நோய் தாக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன.சுத்தமான உடை அணியாமல் இருப்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வெளிப்புற தோலில் ஏற்படுகிற அழற்சி, உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளால் அக்கி நோய் வருகிறது.

இந்த அக்கி நோயை ஆங்கிலத்தில் (Shingles) என்றும் (Herpes zoster) என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலி யைத் தருகிற, தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். இது Varicella zoster எனும் வைரஸால் உண்டாகிறது. சின்ன அம்மை (Chicken pox) உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான்.சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ், செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங் களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். மேலும், சில நிலைகளில் இது ஏன் உருவாகிறது என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களுக்கும் இது வரும். முதலில் வலி, துடிப்பு, எரிச்சல் ஆகியவை ஒரு பக்கத்தில் காணப்படும். வலியும் எரிச்சலும் பின்னர் அதிகரிக்கும். பின்பு சிவந்த நிறத்தில் தோலில் கொப்பளங்கள் உருவாகும். அதன்பின் இந்தக் கொப்பளங்கள் உடைந்து புண்ணாக மாறும்.

பிறகு இது உலரத் தொடங்கும். மூன்று வாரங்களில் இந்த உலர்ந்த பகுதி கீழே விழும். பொதுவாக வயிற்றின் மேற்பகுதியிலோ அல்லது மார்பின் அருகேயோ இது வரலாம். முகத்திலும், கண்ணிலும், வாயிலும்கூட வரலாம். இதனுடன் காய்ச்சல், குளிர் காய்ச்சல், உடல் அலுப்பு, தலைவலி, மூட்டுவலி, கழலைகள், கைகால் வலி, தசை பலவீனம் போன்றவை வரலாம்.

தசைகளை அசைப்பதில் பிரச்சினைகள் வரலாம். முக நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் கண்களை மூடி திறப்பதிலும், செவித் திறனிலும், சுவைகளை உணர்வதிலும், பார்வையிலும் பிரச்சினைகள் உருவாகலாம். இந்த நோயைப் பார்த்த உடனேயே கண்டுபிடிக்க முடியும்.

தற்காப்பு

நவீன மருத்துவத்தில் வைரஸுக்கு எதிரான மருந்துகள் வந்துள்ளன. சிகிச்சையை 72 மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது கொப்பளங்கள் தோன்றுவதற்கு முன்பு தொடங்கினால் சிறந்தது. அரிப்பைக் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள், மேல்பகுதியில் பூசுவதற்குச் சில களிம்புகளையும் நவீன மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி மெதுவாக அமுக்கிவிடச் சொல்வார்கள். காய்ச்சல் குணமாகிறவரை ஓய்வெடுக்கவும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் அறிவுறுத்தப்படும்.

இந்தப் புண்ணானது கசிவுடன் காணப்படும் வேளைகளில் சின்னம்மை வராதவர்களையும் இது தாக்கலாம். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. மூன்று வாரங்களுக்கு இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரவேண்டியது அவசியம். பொதுவாக, இது ஒருமுறை ஒருவருக்கு வந்தால் மறுமுறை வருவதில்லை. இதனால் சிலருக்கு நரம்பு பாதிப்பு வருவதுண்டு.

பாதிப்புகள்

அக்கி வந்த இடத்தில் நரம்பு வலி (Post hepatic neuralgia) பெரும் தொந்தரவு அளிக்கும். மூளை பாதிப்பு, காது கேளாமை, கண் பாதிப்பு போன்றவை அபூர்வமாக ஏற்படலாம். அதனால், ஒழுங்காகச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். நோயாளிகளின் கொப்பளங்களை நேரடியாக நாம் தொடக் கூடாது. இதற்கு இப்போது தடுப்பூசிகள் வந்துள்ளன. இது சின்னம்மை தடுப்பூசியிலிருந்து மாறுபட்டது.

இதைத் தவிர, (Herpes simplex) என்று ஒன்று உண்டு. முறைகேடான உடல் உறவால் பிறப்புறுப்புகளில் Genital herpes போன்றவை வரலாம். இது பிறப்புறுப்பில் காண்கிற தோலில் வரும். பாதுகாப்பற்ற உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும். வாய், உதடு போன்றவற்றில் புண்களை ஏற்படுத்திக் காய்ச்சலுடன் வரும்.

இரண்டாவது வகை, பிறப்புறுப்பின் தோல், பிறப்புறுப்பு, ஆகிய இடங்களில் வரலாம். பல நேரங்களில் இது கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும் அல்லது பூச்சி கடி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் வாய்ப்புள்ளது. இது இரண்டு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உருவாகும்.

இந்த நோய் தாக்கியிருந்தால் காய்ச்சல் ஏற்படும், பசி குறையும், உடல் அசதி காணப்படும், தசை வலி ஏற்படும், நிண நாளங்கள் வீங்கும். சிறிதான கொப்பளங்கள் உருவாகும். அதிலிருந்து திரவம் வெளிப்படும்.

அந்தத் திரவத்தை ஆராய்ந்து செய்யும் பரிசோதனைகள் வந்துள்ளன. இதனை PCR test என்று சொல்வார்கள். புண்களைக் குணமாக்குவதிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிப்பதிலும், மீண்டும் வராமல் தடுப்பதிலும் அரிப்பு, எரிச்சல், வலி போன்றவற்றை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களுக்குப் பிறப்புறுப்பில் கொப்புளங்கள் உருவாகும். ஆண்களுக்கு ஆண்குறி, தொடை, மலத்துவாரம் போன்றவற்றிலும் கொப்புளம் உருவாகும். மரத்துப் போதல், அரிப்பு, எரிச்சல், வலி போன்றவை காணப்படும். இந்தக் கட்டிகள் உடையும்போது புண்ணாக மாறும், அந்த நேரத்தில் வலி அதிகமாக இருக்கும். 14 நாட்களில் இவை மாறும். ஒரு சிலருக்குச் சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் ஏற்படலாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். சில மாதங்கள் கழிந்து மீண்டும் இவை தோன்றலாம், அப்பொழுது கடுமை சற்றுக் குறைவாக இருக்கலாம்.

மேலும் இவ்வகை அக்கி தொற்றுநோய் கிருமிகள், மற்றவர்களையும் எளிதாகத் தாக்கும் தன்மை கொண்டது.அக்கி வருவதை தடுக்க:நாம் அனைவரும் நாள்தோறும் சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். அக்கி நோயால் பாதிக்கப்பட்டவர் கள், அந்த நீரில் 5 சொட்டு டெட்டால் கிருமிநாசினி (அ) வேப்பிலையை அரைத்து, எலுமிச்சை அளவு நீரில் கலந்து குளிக்கலாம்.அதேபோல். ஒவ்வொரு நாளும் சுத்தமான, சுகாதாரமான ஆடைகளை அணிய வேண்டும். முதல் நாள் அணிந்த ஆடைகளை மறுநாளும் அணியக்கூடாது. நன்கு துவைத்த உடைகளை வெயிலில் காயவைக்கும்போது, உள்புறத்தை வெளிப்புறமாக வைத்து காயவைக்கலாம். தேவைப்பட்டால், துணி அலசும் நீரில் வேப்பிலையை அரைத்து கலந்து கொள்ளலாம்.

உங்களுக்கு ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இதையும் மீறி தொடர்ந்து அக்கி காணப்பட்டால், உரிய முறையில் சித்த மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் எளிதாக அக்கியை குணப்படுத்தி விடலாம்.

மருத்துவ சிகிச்சை:

ஊமத்த இலையை அரைத்து, வெண்ணெயில் குழைத்து, அக்கி வந்துள்ள இடங்களில் பூசினால் விரைவில் குணமாகும். அதேபோல், கோவை இலையை அரைத்து, சிறிது வெண்ணெயையும் சேர்த்து பூசினாலும் குணமடையும்.புது மண்சட்டியில் பூசுமஞ்சளை போட்டு சுட்டு, அதன் சாம்பலை வெண்ணெயில் குழைத்து அக்கியில் பூசினால் குணமாகும். அதேபோல், அக்கி வந்த இடத்தில் செம்மண்ணை (பூங்காவி) தண்ணீரில் குழைத்து பூசினாலும் பறந்தோடி விடும்.அக்கி கொப்புளங்கள் நீங்க:ஒருசிலரின் உடலில் வந்த அக்கிகள் ஆறாமல் கொப்புளங்களாக காணப்படும். அப்படி யாருக்கேனும் காணப்பட்டால், அவற்றின் மீது வன்னிமரத்து இலை (அ) ஊமத்தை இலையை தண்ணீர் விடாமல் அரைத்து, வெண்ணெயில் கலந்து 3 நாட்கள் தொடர்ந்து பூசிவந்தால் குணமாகும்.மான்கொம்பு பற்பத்தை 200 மி.கி அளவு எடுத்துக் கொண்டு, தினமும் 2 வேளை வெண்ணெய், நெய் (அ) பாலுடன் கலந்து சாப்பிட்டால், அக்கி விரைவில் குணமாகும்.

Related Posts