‘ஏமாலி’ -க்கு ஏமாறுபவன் என்று அர்த்தம் இல்லை! – டைரக்டர் தகவல்
வி.இசட்.துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏமாலி’. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, சாம் டி.ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி கவர்ச்சியாக நடித்திருந்தது மட்டுமல்லாமல் புகைபிடிக்கும்படியான காட்சியும் இடம்பெற்றது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையினால் படம்வெளிவரும் முன்னரே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஏமாலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.இதில் படத்தின்இயக்குநர் வி.இசட். துரை, நடிகை அதுல்யா, கதாநாயகன் ஷாம், உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய நாயகி அதுல்யா “ஏமாலி படத்திற்கு முதலிலிருந்தே தங்கள் ஆதரவை அளித்து வந்த ஊடகத்துறைக்கு நன்றி. ஏமாலி படத்தைப் பொறுத்தவரையில் எனக்கு இந்த கதாபாத்திரம் சரியாகஇருக்காது என்று பலர் கூறினார்கள். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு எந்த வாய்ப்பை அளித்த துரை சாருக்கு என் நன்றி. அதேபோல் சமுத்திரக்கனி சாருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகஇருந்தது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சாமுக்கும் எனக்கும் இடையே நிறைய காம்பினேஷன் சீன்கள் இருந்தன. ரொமான்ஸ் சீன்களில் நடிக்கும்போது உதவியாக இருந்தார். எனக்கு அழகான படல்களைக்கொடுத்த இசையமைப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய எல்லாருக்கும் எனது நன்றிகள்”என்று தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கதாநாயகன் சாம் , “இந்தப் படம் ரொம்ப ஜாலியாக இருந்தது. இயக்குநரும் நானும் ரொம்ப நட்பா பழகினோம். அதே போல கனி சாரும் என்கூட ரொம்ப ஜாலியாகப் பேசி நடித்தார். அனுபவம்உள்ள நடிகர்கள் என்று ஈகோ பார்க்காமல் ரொம்ப யதார்த்தமா பழகுனாங்க. இந்தப் படம் கண்டிப்பாக என் சினிமா வாழ்க்கையில மிக முக்கியமான படமாக இருக்கும்னு நம்புறேன். அதே போல் துரை சார்கூட இணைந்துஇன்னும் நெறைய படங்கள் நடிக்கணும்” என்று கூறினார்.
நான்கு அடுக்குத் திரைக்கதை
இயக்குநர் துரை, “சமீபத்தில் ரஜினி சார் சொன்னாரு, பிரஸ் பீப்பிளப் பார்த்தா ஒதறுதுனு. அவருக்கே அப்படினா என்னை கேட்கவா வேணும். முகவரி, தொட்டி ஜெயா படங்களின் வரிசையில் ஏமாலி ஒரு புதுமுயற்சி.எல்லாரும் அவங்க படங்களை புதுசா ட்ரை பண்ணிருக்கோம்னு சொல்லுவாங்க. ஆனால் நான் இந்தப் படத்தில் பண்ணிருக்க ஸ்க்ரீன்ப்ளே உண்மையாகவே புதிய முயற்சியாகவே கையாளப்பட்டிக்கு. இந்தத்திரைக்கதையைப் பொறுத்தவரையில் நான்கு லேயராக படம் இருக்கும். ஐ.டி ஊழியர், போலீஸ் என நான்கு பிரிவுகளில் படத்தைக் கையாண்டிருக்கேன். இந்தப் புதிய முயற்சியை நீங்கதான் மக்கள் கிட்ட கொண்டுபோய்சேர்க்கணும். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் உதவி செஞ்ச நீங்க இதற்கும் உதவி செய்யணும். அதே மாதிரி சமுத்திரக்கனிக்கு இந்தப் படம் மாறுபட்ட படமாக அமையும். சமுத்திரக்கனி இப்படித்தான் நடிப்பாருன்னுஇருந்த எண்ணத்தை இந்தப் படம் கண்டிப்பாக மாற்றும். அதே போல இந்தப் படத்துல அவரு இந்தி பேசி நடிச்சிருக்காரு. படத்தோட நாயகன் சாம் நான்கு விதமான கோணத்தில்நடிச்சிருக்காரு. புதுமுகங்களை வைத்துபடம் தயாரிப்பது கஷ்டம். ஆனால் எங்களை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஜெயமோகன் சார் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருக்காரு. அவரைப் பொறுத்தவரையில் இலக்கிய வட்டாரத்தில் ரொம்பப் பிரபலமானவர், ஆனால் எங்களுக்காக நேரம் ஒதுக்கி இந்தக் காலகட்டத்திற்கு ஏற்றது போல் போல்டாக ஒவ்வொரு வசனமும் எழுதியிருக்காரு” என்று கூறினார்.இதைத் தொடர்ந்து இயக்குநர் துரையிடம் ஏமாலி படத்தின் தலைப்பு குறித்து கேட்கப்பட்டபோது, “ஏமாலிக்கு ஏமாறுபவன் என்று அர்த்தம் இல்லை. தலைப்பின் பின்னணியில் ஒரு சின்ன சஸ்பென்ஸ் இருக்கிறது” என்றுதெரிவித்தார்.
அதுல்யா புகைபிடிப்பது போன்ற கட்சி குறித்துப் பேசிய இயக்குநர் துரை, “இந்தப் படத்தில் புகைபிடிக்கும் காட்சி தேவைப்பட்டதால் வைத்தேன். இதில் அதுல்யாவின் அம்மா ஒரு டென்டிஸ்ட். அதுல்யா இந்தக்காலத்திற்கு ஏற்ற மாடர்ன் கேர்ளாக வருவார். அதைக் காட்சிகளில் வெளிப்படுத்தவே புகைபிடிக்கும் காட்சியைப் படமாக்கினோம். உண்மையில் எனக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அதுல்யாவை இந்தபடத்திற்காகவே புகைபிடிக்கப் பழக்கினோம். அவருக்கு கம்பெனி கொடுக்க நானும் புகைபிடிக்க வேண்டியிருந்தது. அதனால் உடல்நிலையும் பாதித்தது. இனிமேல் இது போன்ற காட்சிகளை என் படங்களில் தவிர்ப்பேன்” என்று குறிப்பிட்டார்.