கதண்டுக் கொட்டு: தென்காசி துயரம் முதல் உயிர்காக்கும் வழிமுறைகள் வரை – ஓர் அவசர அலசல்!

கதண்டுக் கொட்டு: தென்காசி துயரம் முதல் உயிர்காக்கும் வழிமுறைகள் வரை – ஓர் அவசர அலசல்!

தென்காசி அருகே சீவநல்லூரில் தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள் கடித்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில் கூட ஒரு சிறுவன் கதண்டு தீண்டி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு வண்டு தீண்டி மனிதனின் உயிர் போகுமா? இந்த கேள்வி பலருக்கும் எழலாம். ஆம், அது துரதிருஷ்டவசமாக நிகழக்கூடிய ஒரு அபாயம்.

கதண்டுக் கடி – ஒரு சிறிய வண்டு, பெரும் ஆபத்து?

நாம் அற்பம் என எண்ணும் எறும்புக் கடி கூட அரிதினும் அரிதாக மரணத்தில் கொண்டுசெல்லும் நிலைகள் மருத்துவ ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபரீத நிகழ்வுகளுக்குக் காரணம், அந்தக் கடிக்கு எதிராக நமது உடலில் ஏற்படும் தீவிர ஒவ்வாமை (Anaphylaxis) நிலைதான். இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் உயிரைப் பறித்த “கதண்டு” எனும் மஞ்சள் நிறக் குளவி (Yellow-jacketed sting) பற்றி அறிவது அவசியம்.

கதண்டுக் குளவிகள் பெரும்பாலும் மரங்களின் கிளைகளில் கூடுகட்டி வாழும். இவை மிகவும் கடுமையான முன்கோபிகள். தனது இருப்புக்கோ அல்லது தனது ஆளுகைக்குட்பட்ட இடத்துக்குள்ளோ வேறேதேனும் விலங்குகள், மனிதர்கள் நுழைந்தால், கடுமையான ஆக்ரோஷத்துடன் கூட்டம் கூட்டமாக, மீண்டும் மீண்டும் துரத்தித் துரத்தி கொட்டும் தன்மை கொண்டவை.

ஒரு மருத்துவரின் அனுபவம்:

என் மருத்துவ அனுபவத்தில்,  ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், சுகாதார நிலையத்தை ஒட்டிய கிராமப்புறப் பகுதியில் கிடா வெட்டு விருந்துக்குக் குழுமியிருந்த கூட்டத்தின் மீது, அங்கு சமைக்கும் போது எழுந்த புகையினால் – சீற்றம் கொண்ட கதண்டு வண்டுகள் சாரை சாரையாக இன்னார் எவரெனப் பார்க்காமல் குழந்தைகள் முதல் முதியோர் வரை கொட்டித் தீர்த்தன. அவசர சிகிச்சைக்காகக் கையில் இருந்த எபிநெஃப்ரின் (Adrenaline / Epinephrine) ஊசிகளை எடுத்துக் கொண்டு அங்கு விரைந்து, இயன்ற அளவு வேகமாகச் செயல்பட்டு யாருக்கெல்லாம் தீவிர ஒவ்வாமை நிகழ்வு ஏற்பட்டதோ, அவர்களுக்கு ஊசியைச் செலுத்தியதால், துரிதமாக செயல்பட்டதால் மரண சம்பவங்கள் நிகழவில்லை. அங்கேயே ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மூச்சு ஏங்கி ஏங்கி விடத் தொடங்கியது. எனினும், அந்த நிகழ்வு சுகாதார நிலையத்துக்கு அருகில் நடந்ததாலும், உடனே குழந்தையை அழைத்து வந்தமையாலும் அதன் உயிர் அன்று காப்பாற்றப்பட்டது.

கதண்டு விஷத்தின் இரகசியம்:

கதண்டின் கொடுக்கில் மாஸ்டோபேரான் (MASTOPARAN) மற்றும் பாஸ்போலைப்பேஸ் ஏ1 (PHOSPHOLIPASE A1) ஆகிய விஷப் பொருட்கள் உள்ளன. கதண்டுக் குளவி கொட்டும் போது இந்த விஷத்தை நமது தோலுக்குள் செலுத்திவிடுகிறது. இந்தக் குறிப்பிட்ட பொருட்களுக்கு நமது உடலில் ஒவ்வாமை இல்லாவிட்டால், கடித்த இடத்தில் சிவப்பாக மாறும், வீக்கம் தோன்றும், நன்றாக வலிக்கும். பிறகு சில மணிநேரங்களில் வலி குறைந்து, சில நாட்களில் வீக்கம் குறைந்து குணமாகும்.

அதுவே, மேற்கூறிய விஷப் பொருட்களுக்கு நமது உடலில் ஒவ்வாமை இருந்தால் (இதை நாம் முன்கூட்டியே அறிய முடியாது), நமது உடலில் அனாஃபிலாக்சிஸ் எனும் தீவிர ஒவ்வாமை நிகழ்வு ஏற்படும். இதனால் மூச்சுக் குழாய் மற்றும் சுவாசப் பாதை திடீரெனச் சுருங்கிக் கொள்ளும். இது கடும் மூச்சுத் திணறல், இருமல், விழுங்குவதில் சிரமம், வியர்த்தல், தலை சுற்றல், ரத்த அழுத்தம் குறைந்து போதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். கொஞ்ச நேரத்தில் கவனிக்காவிட்டால் மரணம் சம்பவிக்கும்.

உயிர்காக்கும் அவசர சிகிச்சை:

அனாஃபிலாக்சிஸ் நேரும் போது, உடனடியாக அதற்குரிய மாற்று மருந்தாக இருக்கும் அட்ரினலின் / எபிநெஃப்ரின் மருந்தை அடுத்த சில நொடிகளில் செலுத்தினால் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால், நோயாளி மருத்துவமனையை விட்டுத் தூரமாக இருந்தால், இந்தச் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைய வாய்ப்பு அதிகம். மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இதுபோன்று வண்டுக்கடி அலர்ஜி இருப்பவர்கள் தங்கள் கைகளில் எப்பிபென் (EPIPEN) எனும் எபிநெஃப்ரின் கொண்ட மருந்துப் பேனாவைக் கையில் வைத்துக் கொள்வார்கள். இங்கு அட்ரினலின் அல்லது எபிநெஃப்ரின் மருந்து கொண்டு அவசர நிலைக்கு நோயாளரே பயன்படுத்திக் கொள்ளும் பேனா பயன்பாட்டில் இல்லை. அதற்குக் காரணம் இங்கு இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால் நுகர்வு குறைவாக இருக்கும் காரணத்தால், அந்த மருந்தை பேனா வடிவில் எந்த நிறுவனமும் உற்பத்தி செய்வதில்லை. எனினும், அரசு இது குறித்து முயற்சி எடுத்து, எபிபென் பேனா எளிமையான விலையில் பொதுமக்களுக்கு இன்சுலின் பேனா வடிவத்தில் கிடைக்கச் செய்ய ஆவண செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில் அலர்ஜி இருக்கும் ஒருவரது உயிரைக் காக்க இது உதவும்.

கதண்டுக் கடிக்கு என்ன செய்ய வேண்டும்?

ஒருவரது உடலில் இந்தக் கதண்டுக் கடிக்கு அலர்ஜி இல்லாமலே இருந்தாலும் கூட, ஒரே நேரத்தில் 1500 வண்டுகளிடம் கொட்டு வாங்கினால், அந்த விஷத்தன்மையின் காரணமாக மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆக, ஒரு கதண்டு வண்டு கடித்தாலே உயிர் போய்விடும் என்பதில் உண்மையில்லை. மாறாக, கதண்டு வண்டு விஷத்துக்கு ஒவ்வாமை இருப்பவருக்கு ஒரு கதண்டு கடித்தாலும் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கதண்டுக் குளவி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

  1. முதலில், கடித்த இடத்தில் உள்ள கொடுக்கைப் பிடுங்கி எறிய வேண்டும்.
  2. அடுத்து, கடித்த இடத்தை நன்றாகச் சோப் போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  3. பிறகு, கடித்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்து அழுத்தலாம்.
  4. மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, டெட்டானஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டு, அதற்குப் பிறகு வீக்கம் / வலி / அரிப்பு உள்ளிட்டவற்றுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து, லோஷன் ஆகியவற்றைப் பூசிக் கொள்ளலாம்.

அபாய அறிகுறிகள் மற்றும் உடனடி நடவடிக்கை:

ஒருவேளை கதண்டு கடித்தவுடன் அந்த நபருக்கு மூச்சுத் திணறல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுப் பகுதியில் அல்லது தொண்டைப் பகுதியில் நெரிப்பது போலத் தோன்றினால், உடனே 108-க்கு அழைக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு எபிநெஃப்ரின் / அட்ரினலின் + ஸ்டீராய்டு மருந்துகள் போட்டு உயிர் காப்பாற்றப்பட வேண்டும்.

ஒருவேளை மருத்துவமனை அருகில் இல்லாத நிலையில், கடிபட்டவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் சுவாசமும் நாடித் துடிப்புமற்று இருந்தால், உடனே CPR எனப்படும் இதய சுவாச மீட்பு முயற்சியில் இறங்க வேண்டும். மருத்துவ உதவி கிடைக்கும் வரை CPR தொடரப்பட வேண்டும்.

எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை. ஆனால், அந்தக் கதண்டு விஷத்துக்கு எதிராக உள்ளார்ந்த அலர்ஜி இருப்பவர்களுக்குத் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது.

கதண்டுகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

  • கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்போம்.
  • கதண்டுகள் வாழும் பகுதிகளை விட்டு விலகி இருப்பது நல்லது.
  • வெயில் காலங்களில் கதண்டுகள் எப்போதையும் விட ஆக்ரோஷமாக இருக்கும்.
  • காட்டுப்பகுதிக்குள் செல்லும் போது அடர் பளிச்சென்று இருக்கும் நிறத்தில் ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
  • தேவைப்பட்டால் விஷப்பூச்சி / கொசுக்கடிக்கு எதிரான களிம்புகள் / பூச்சுகள் / ஸ்ப்ரேக்களை அடித்துக் கொண்டு செல்வது நல்லது.
  • வெறும் காலில் வனப்பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்கலாம். கதண்டுக் கூட்டம் கொட்ட வரும்போது வெறும் காலில் ஓடி காலில் காயம் ஏற்பட்டு விழுந்து விட வாய்ப்புள்ளது.
  • ஒரு சில கதண்டுகள் நம்மைச் சுற்றிப் போட்டு விட்டால், இயன்ற அளவு அமைதியாக அப்படியே கீழே படுத்து விடுவது நல்லது. அதை அடிக்க எத்தனிக்கும் போது, அதன் பார்வை நம் மீது தொடர்ந்து இருக்கும். கூடவே ஆக்ரோஷமும் அதிகமாகும்.
  • ‘சரண்டர்’ ஆகி விடுவது – அதாவது கீழே படுத்துக்கொண்டு கால்களை மடக்கி வயிற்றுக்குக் கொண்டு வந்து முகத்தையும் உள்ளே வைத்து சுருட்டி மூடிக் கொள்வது எப்போதுமே நம்மைப் பாதுகாக்கும் ஒரு நல்ல நிலை.
  • கடிபட்டு விட்டாலும், முடிந்தவரை கொடுக்குகளை விரைவாகப் பிடுங்கி எரிவது, தீவிர ஒவ்வாமை நிகழ்வைத் தடுக்கும் ஒரு முக்கியமான செயல்.

கதண்டு வண்டுகள் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமானவை. அவற்றால் பல வனங்கள் வளம் பெறுகின்றன. எனினும், அவற்றின் எல்லைக்குள் நாம் செல்லும் போது அதீத கவனம் மற்றும் எச்சரிக்கை உணர்வு அவசியம்.

டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா.


Related Posts

error: Content is protected !!