10 & 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா?
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியான நிலையில், பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணியளவில் வெளியானது. சுமார் 7 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், 90.93 சதவிகித மானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில், மாணவிகள் 94.36 சதவிகிதமும் மாணவர்கள் 86.99 சதவிகதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எல்லா வருடங்களை போலவே, இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள்தான் தேர்ச்சி விகிதத்தில் அதிகமாக உள்ளனர்.
பதினோராம் வகுப்பு தேர்வில் பல மாணவர்கள் செண்டம் எடுத்து அசத்தியுள்ளனர். மொழிப்பாடமான தமிழில் மொத்தம் 9 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். ஆங்கிலத்தில், மொத்தம் 13 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இயற்பியலில் 400 பேரும் வேதியலில் 107 பேரும் உயிரியலில் 65 பேரும் கணிதத்தில் 12 மாணவர்களும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு தேர்வுகள் நடைப்பெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியானது.
இன்று தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அரசு தேர்வர்கள் இயக்கம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவே பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், 11ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள், தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற தேர்வு மையங்களின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக சான்றிதழ்களை வரும் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்:
10-ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10- ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அது போல் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி அல்லது பயின்ற தேர்வு மையத்தின் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர், மே 24ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மே 27 (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.