கோர்ட்டா?.. கேஸா இனிமே ஈஸி.. ஆன் லைன் கோர்ட்டே வந்திடுச்சி!

கோர்ட்டா?.. கேஸா இனிமே ஈஸி.. ஆன் லைன் கோர்ட்டே வந்திடுச்சி!

”யார் கோர்ட்டு, கேஸூன்னு அலையறது ஏதோ போன ஜென்மத்து பாவம் விட்டுத் தொலைக்கிறேன்” இப்படியெல்லாம் அலுத்துக்கொள்ள வேணாம் இனிமேல். ஏன்? இந்தியாவில் கோர்ட்டு கேஸு என்று போனால் தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது. ஆகையால் கொடுப்பதைக் கொடுத்து எடுப்பதை எடுத்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோரே அதிகம். இந்த நிலை மாறாதா? இதற்கொரு தீர்வு வராதா என்று ஏங்குவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி இதற்கு தொழில்நுட்பத்தினால் தீர்வு சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு இப்போது ஒரு புது முயற்சியின் மூலம் விடை கிடைத்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான சண்டிகர் நகரில் இயங்கும் ஜூபிடைஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சட்டம் தொடர்பான மென்பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் முயற்சியில் அனைவரும் எளிதாக பங்கேற்று தங்களுக்கான நீதியைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டதொரு தீர்வு டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உலகின் முதல் தனியார் டிஜிட்டல் கோர்ட் என்று அழைக்கின்றனர்.

இந்த ஏற்பாட்டின்படி நீங்கள் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்காடுவது போல இங்கும் வழக்கைத் தாக்கல் செய்யலாம். ஆனால் இது வழக்கமான நீதிமன்றம் அல்ல. இதற்கு மாற்று தாவா தீர்ப்பு முறை என்று பெயர். இதன் மூலம் நீதிமன்றங்களுக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்த்துக் கொள்வது போல் சட்ட ரீதியான முறையில் வழக்கறிஞர்கள், நிபுணர்கள் கலந்து பேசி வழக்கிற்கு தீர்வு காண்பார்கள். இச்சேவைக்கு கட்டணம் உண்டு. மேலும் வழக்கில் கொடுக்கப்படும் தீர்ப்பிற்கு சட்டத் தகுதியும் உண்டு. இதை வைத்துக்கொண்டு பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் அல்லது இதன் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடும் செய்யலாம். துவக்க நிலையிலிருந்து நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டாம்; பொறுமையிழக்கவோ, ஒட்டுமொத்தமாக சமரசம் செய்து கொள்ளவோ வேண்டாம். மேலும், நீதிமன்றத்தில் செலவழிக்கும் பணமும் மிச்சம்.

இந்நிறுவனத்தின் நிறுவுனர் ராமன் அகர்வால், “ நீதிமன்றம் என்று நீங்கள் நினைக்கும்போது ஒரு நீதிபதிதான் நினைவுக்கு வருவார். இந்தப் பார்வை மாற வேண்டும். இதரச் சேவைகளைப் போல சட்டமும் ஒரு சேவைதான். உங்களுக்கு வீட்டிலேயே, ஹோட்டல், மருத்துவமனை போன்றவை கிடைக்கும் போது ஏன் நீதியும் கிடைக்கக்கூடாது? நீதிமன்ற வழக்குகள் போல் இல்லாமல் இந்த மாற்று ஏற்பாடு பல வழிகளில் நன்மைத் தருகின்றன.இந்த மாற்று வழிமுறை பெரிய வணிக நிறுவனங்களினால் ஏற்கனவே கையாளப்பட்டு வருகின்றது. பொது மக்களுக்குத்தான் தெரியாது. இந்தத் தொழில்நுட்பத்தில் எப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல், விசாரணை, தீர்ப்பு என வரிசையாக செயல்பாடுகள் நடக்கின்றனவோ அதே போல்தான் இங்கும் நடைபெறும்.” என்கிறார்.

இந்தியாவின் முன்னேற்றத்தை திட்டமிட்டு வரும் நீதி ஆயோக் எனும் நிறுவனம் தனது இணையதள தாவா தீர்ப்பு முறை குறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையில் பிரபல உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட் இப்படி கூறுகிறார்: இந்த ஆன்லைன் டிஸ்பியூட் மெக்கானிசம் வழக்கில் தொடர்புடையவர்களின் எண்ணத்தை மாற்றி அமைத்துவிடும். ஏனெனில் அணுகல், செலவு மற்றும் பங்கேற்பு என்பவை முழுமையாக இருப்பதால் அவ்வாறு நிகழும். எனவே அனைவரும் இதனை இணக்கமானதாகவும், தீர்வு கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் பார்ப்பதால் நாளை பலரும் இதை விரும்ப இந்த முறை வலுவானதாக மாறும். இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்று பலவிதமான மாற்றங்களை நீதித்துறையிலும் நிகழ்த்தி வருகிறது. இணைய தளத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது. தீர்ப்புகளும் வழங்கப்படலாம். எனவே டிஜிட்டல் நீதிமன்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட நீண்ட நாட்கள் ஆகாது. பொதுமக்கள் மட்டுமின்றி சிறுதொழில் செய்வோர் கூட தங்களது முறையீடுகளை இந்த டிஜிட்டல் நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம். இது நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணையானத் தகுதி கொண்டது என்கின்றனர் உருவாக்கிய நிறுவனத்தினர்.

மேலும் இந்த டிஜிட்டல் நீதிமன்றமானது இப்போதிருக்கும் நீதித்துறையின் பணிகளில் குறுக்கிடுவது ஆகாது. மாற்றாக அதன் சுமையைக் குறைக்கும் முயற்சியாகவே காணப்பட வேண்டும் என்றும் நிறுவனத்தினர் கருதுகிறார்கள். மக்களுக்கு நன்மைத் தரும் எந்த முயற்சியும் தோற்றதில்லை. இன்று ஆன்லைன் வகுப்புகள் பிரபலம் அடைந்து விட்டன. உலகின் பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் உண்டு. ஒரு சிக்கலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆனலைன் வகுப்புகள் கல்வித்துறையில் வருங்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதே போல இந்த டிஜிட்டல் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் சமூகத்தில் தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தலாம்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!