உலக ஆமைகள் தினமின்று!

உலக ஆமைகள் தினமின்று!

நிதானத்திற்காக பெயர் போன ஆமைகள், பெரும்பாலும் அனைத்து தட்ப வெப்ப சூழலிலும், வாழக் கூடிய இந்த ஆமை, ஒரு உயிரினம் என்பதிற்கும் மேல் கலை, இலக்கியம் எனப் பலப் பரிமாணங்களில் வலம் வருகிறது. நிதானத்திற்காக பெயர் போன ஆமைகள், பெரும்பாலும் அனைத்து தட்ப வெப்ப சூழலிலும், வாழக் கூடிய இந்த ஆமை, ஒரு உயிரினம் என்பதிற்கும் மேல் கலை, இலக்கியம் எனப் பலப் பரிமாணங்களில் வலம் வருகிறது.இன்றைய சூழலில் அழிந்து வரும் உயிரினமான ஆமைக்கு ஆமைகள் தினம் கொண்டாடுவதன் மூலம், அவற்றின் அத்தியாவசியத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். இது ஆமைகளைப் பாதுகாக்க மற்றும் செல்லப் பிராணிகளாகப் பராமரிக்க ஊக்குவிப்பதாக அமையும்.

1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர். விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர், 2000ஆம் ஆண்டிலிருந்து, ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம், இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் கடல் சூழ்நிலை மண்டலமானது பூமியின் மிகப்பெரிய சூழ்நிலை மண்டலமாகும். இதில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆமை இனங்கள் ஆகும். உலகம் முழுவதும் 360 ஆமை இனங்கள் வாழ்கின்றன. அவை `ஊர்வன’ வகுப்பைச் சார்ந்தவை. ஆமைகள் `டெஸ்டுடின்’ வரிசையில் அடங்கும். ஆமைகள் காற்றை சுவாசிக்கும் இனங்கள். அவற்றின் ஓடுகள் காரபேஸ் (மேல் ஓடு), பிளாஸ்ட்ரான் (கீழ் பிரிவு) ஆகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளன.

ஆமைகள் பழைமையான ஊர்வன வகையாகும். அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி மாறும் (குளிர் ரத்த வகை). பெரும்பாலான ஆமைகள் நீரில் வாழ்ந்தாலும் நிலத்தில் முட்டையிடுபவை (அம்னியோட்ஸ்). மணல் நிறைந்த கடற்கரைகளில் முட்டையிடுகின்றன. நுரையீரலை இளைப்பாற்றுவதற்கு அடிக்கடி மேற்பரப்புக்கு வருகின்றன.

ஆமை இனங்கள் அடிப்படையில், நீருக்குள் மூழ்கியுள்ள நேரம் 60 விநாடிகள் முதல் 1 மணிநேரம் வரை மாறுபடும். மீனவர்கள் `சொறி’ என்றழைக்கும் இழுது மீன்கள் (jelly fish) மற்றும் கடல் பாசிகள் கடலாமைகளின் முதன்மை உணவாகும். வளர்ந்தபின் ஆமைகள் நத்தை, புழுக்கள், பூச்சிகளைச் சாப்பிடுகின்றன. ஆமைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் உயிரியலில் கணிசமான இடத்தைப் பெற்றுள்ளன.

ஆமைகள் கடல் புல்படுக்கைகள், பவளப்பாறைகள், வாழ்விடங்களை வழங்குதல் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆமைகளின் அழிவு சுற்றுச்சூழலுக்கு ஒரு சரிவாக அமையும். அவற்றின் முட்டைகள் பல உயிரினங்களுக்கு உணவாகும். கடல் ஆமைகள் அழிந்து விட்டால் தாவரங்கள் ஊட்டச்சத்துகளுக்குரிய ஒரு முதன்மை ஆதாரத்தை இழந்துவிடும். இதன்விளைவாக மணல் அரிப்பு அதிகரிக்கும். கடல் ஆமைகள் ஒரு `கீஸ்டோன் இனம்.’ அதாவது, சுற்றுச்சூழலை பராமரிப்பதில் அவை முக்கிய அங்கமாக விளங்குகின்றன. ஆமைகள் அழிந்துவிட்டால் இயற்கை ஒழுங்கு சீர்குலைந்துவிடும். இது மற்ற கடல் விலங்குகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது.

கடல் ஆமைகளில் மிகப் பெரியது `லெதர்பேக்கு’ ஆமைகள். அவை வெகுதூரம் பயணிப்பவை. லெதர்பேக் ஆமைகள் கடல் சொறி மீன்களை உண்பதன் மூலம் ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. அவை 440 பவுண்ட்ஸ் கடல் சொறி மீன்களை உட்கொள்கின்றன. கடல் சொறி மீன்களில் பல வகைகள் உள்ளன. அவை மீன் முட்டைகளையும் மீன் குஞ்சுகளையும் அதிகம் உட்கொள்ளும். இதனால் மீன்வளம் பெரிதளவில் பாதிப்படைகிறது. கடல் சொறி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் சொறி மீன்கள் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே மீன் இனங்களைப் பாதுகாக்க முடியும்.

அவற்றில் சில வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. மீனவர்களும் இவற்றை ஆபத்தான உயிரினங்களாகக் கருதுகின்றனர். அவற்றின் விஷத்தன்மை மனிதர்களுக்கு உயிர் சேதம் விளைவிக்கும். லெதர்பேக் ஆமைகள் கடல் சொறி மீன்களை உட்கொள்வதால் கடல் சொறி மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு மீன்வளத்துக்கு பெரிதளவில் நன்மை தருகின்றன. இந்த வகை ஆமைகள் அழிவதால் கடல் சொறி மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. ஆமை ஓடுகளில் உள்ள `பர்னாக்கல்ஸ்’ (கொட்டகைகள்) மீன்களுக்கும் இறால்களுக்கும் உணவாகின்றன.

இதனால் ஆமைகளின் ஓடும் சுத்தமாகின்றன. ஆமை முட்டைகள், இளம் ஆமைகள் மற்ற உயிரினங்களுக்கு இரையாகவும் அமைகின்றன. முதிர்ச்சியடைந்த ஆமைகள் சுறாக்களுக்கு இரையாகும்.

ஆமையின் வகைகள்

இந்த ஆமைகளில் மொத்தம் இரண்டே வகை உண்டு. ஒன்று நில ஆமை (Tortoise), மற்றொன்று கடல் ஆமை (Turtle). வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடல் ஆமைகள் கடலில் கழித்தாலும், முட்டையிடுவதற்காகப் பெண் ஆமைகள் கடற்கரைக்கு வருகின்றன. இந்த முட்டைகள் பொரிக்கப்பட 7 முதல் 10 வாரங்கள் ஆகும்.

மணல் நிறைந்த கடற்கரைகள், மணல்குன்றுகளில்தான் இந்த ஆமைகள் முட்டையிடும். தமிழகம் உள்பட இந்தியாவின் கடற்கரை முழுக்க சித்தாமை (Olive ridley) முட்டையிடுகிறது, குறிப்பாகச் சென்னையில் அதிக எண்ணிக்கையில் இந்த ஆமைகள் முட்டையிடவும் செய்கின்றன, இயந்திரப் படகுகளில் அடிபட்டுக் கரை ஒதுங்கவும் செய்கின்றன.

சித்தாமை (அ) பங்குனி ஆமை (Olive Ridley): இந்தியாவில் முட்டையிடும் ஆமைகளில் அளவில் சிறியது. அதிக எண்ணிக்கையில் நமது கடற்கரைகளுக்கு வந்து முட்டையிடுகிறது. இழுதுமீன், இறால், நண்டு, நத்தைகளை உண்ணும். 35 கிலோ எடையுடன் இருக்கும்.

பேராமை (Green Turtle): ஆலிவ் பச்சை – பழுப்பு நிறத்தில் இருக்கும். கடல்புற்கள், நீர்த்தாவரங்கள், கடல்பஞ்சுகளை உண்ணும்.

அழுங்கு ஆமை (Hawksbill Turtle): இதன் வாய்ப் பகுதி பருந்து அல்லது கழுகினுடையதைப் போலிருக்கும். பவளத்திட்டுகளில் வாழும் கடல்பஞ்சை உண்ணும். இதன் மேல் ஓடு மஞ்சள், பழுப்புப் பட்டைகளால் போர்த்தப்பட்டது. தலையும் கால்களும் பழுப்புத் திட்டுகளுடன் தங்க நிறத்தில் இருக்கும்.

பெருந்தலையாமை (Loggerhead): 75 முதல் 100 செ.மீ. நீளமுள்ள பெரிய தலையைக் கொண்டிருப்பதால் இந்த ஆமைகள் அந்தப் பெயரைப் பெற்றன. முன் துடுப்புகள் குட்டையாகவும், பின் துடுப்புகள் நீளமாகவும் இருக்கும்.

தோணியாமை (அ) ஏழு வரி ஆமை (Leatherback Turtle): உலகின் மிகப் பெரிய கடலாமை. அதிகபட்சம் 900 கிலோ எடைவரை இருக்கலாம். மேல்ஓடு கடினமாக இல்லாமல் கடினமடைந்த தோலைக் கொண்டிருக்கும். அதில் ஏழு வரிகள் இருக்கும். அதனால்தான் அந்தப் பெயரும் ஏற்பட்டது.

ஆமைகளுக்கு நிகழும் ஆபத்துகள்:

ஆசிய கண்டத்தில் ஆமை ஓடுகள் பெட்டி, சீப்பு, தூரிகை, கைப்பிடி, காதணிகள், நகைகள் செய்வதற்கு பயன்படுவதால் மக்கள் அதை வேட்டையாடி வருகின்றனர். இழுவலையில் எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொள்வதாலும் ஆமை இனங்கள் அழிந்துவருகின்றன. எண்ணெய்க் கசிவு போன்ற நிகழ்வுகளும் ஆமை அழிவுக்கு ஒரு காரணம். `கிரீன் சீ டர்டில்’, `ஆலிவ் ரிட்லிஸ்’ `லாகர்ஹெட்’ போன்ற ஆமைகள் உணவுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. எனவே, இதைத் தடுக்க பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இழுவலையில் ஆமைகள் மாட்டி இறக்காமல் இருக்க `ஆமை விலக்கு இயந்திரம்’ (turtle extruding device –TED) பொருத்தப்பட்ட வலைகளைப் பயன்படுத்த சட்டம் உள்ளது.

உலகளவில் ஆமை பாதுகாப்புச் சட்டம்:

“அழிந்து வரும் இனங்களுக்கான சட்டம்” (Endangered species act-1973) (அமெரிக்கா) இச்சட்டம் லாகர்ஹெட், ஹாக்ஸ்பில் வேட்டைக்கு எதிரானவை. “ஆமை பாதுகாப்பு மற்றும் நிவாரண சட்டம்” கோஸ்டா ரிக்கா (2002), “அமெரிக்கா ஆமை பாதுகாப்பு சட்டம் 2008”, (பனாமா), “அழிவின் விழிம்பில் உள்ள உயிரினங்கள் வணிகத் தடைச் சட்டம்” போன்ற சட்டங்கள் உலகளவில் ஆமைகளைப் பாதுகாத்து வருகின்றன. நம் நாட்டிலும் 1972ஆம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது. மீன் பிடிப்பு, எண்ணெய் கசிவு , கரையோர முன்னேற்றத் திட்டங்கள் மேலும் பலக் காரணங்களால் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது
ஆமைகள், சுற்றுச்சூழல் பராமரிப்பில் பெரிய பங்கு அளிப்பவை. கடல்தரையைச் சுத்தமாக்குதல், பவளப்பாறைகளைப் பாதுகாத்தல், மற்ற உயிரினங்களுக்கு இருப்பிடம் அளித்தல், சூழ்நிலை மண்டலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அதிகப்படியான சொறி மீன்கள் எண்ணிக்கை குறைத்தல், கடல்பாசிகளை மேய்தல், ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவுதல், எபிபயான்ட்ஸ்- உயிரினங்களுக்கு உணவு அளித்தல், நண்டுகளுக்கு உணவு அளித்தல், கடல் பறவைகளுக்கு ஓய்விடம் தருதல் எனப் பல உதவிகர செயல்களைச் செய்து வருகின்றன. இருந்தாலும் மனிதர்கள் தங்களின் மருத்துவ, வணிக சுய லாபத்துக்காக சட்ட விரோதமாக வேட்டையாடுகின்றனர். தற்போது 40 சதவிகிதம் ஆமை வகைகள் அழியும் நிலையில் உள்ளன. அரசு இயற்றியுள்ள சட்டங்களைக் கடைப்பிடித்தால் ஆமை இனத்தையும் கடல் வளத்தையும் பாதுகாக்க முடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!